![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Coronary_arteries_ta.svg/langta-640px-Coronary_arteries_ta.svg.png&w=640&q=50)
முடியுருக் குருதிச்சுற்றோட்டம்
From Wikipedia, the free encyclopedia
முடியுருக் குருதிச்சுற்றோட்டம் (Coronary circulation) எனப்படுவது இதயத்திற்கு, குறிப்பாக இதயத்தசைக்கு குருதியை வழங்கும் மற்றும் இதயத்தசையில் இருந்து குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் குருதி செலுத்தப்படுவதைக் குறிக்கும். இதயத்தசைக்கு ஆக்சிசன் நிரம்பிய குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து ஆக்சிசன் அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும்.
முடியுருக் குருதிச்சுற்றோட்டம் | |
---|---|
![]() | |
முடியுருக் குருதிச்சுற்றோட்ட விளக்கப்படம். உயிர்வளிக் குருதிக்குழாய்கள் சிவப்பு நிறத்திலும் உயிர்வளி அற்றவை நீல நிறத்திலும் இதயத்தின் பாகங்கள் கருப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன. | |
ம.பா.தலைப்பு | Coronary+Vessels |
உடலின் ஏனைய பாகங்களில் உள்ள தமனிகள் பொதுவாக தமக்கிடையே பிணைப்பைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக காலுக்குச் செல்லும் பிரதான நாடியில் அடைப்பு ஏற்படின் அதற்கு மேலே உள்ள வேறொரு நாடி குருதியை எடுத்துச் செல்லும், இது இணை இரத்த ஒட்டம் எனப்படும். ஆனால் பெருந்தமனியில் இருந்து புறப்படும் முடியுருத்தமனிகள் மட்டுமே இதயத்துக்கு குருதியை வழங்குகின்றன, ஆதலால் இது முடிவுற்ற சுற்றோட்டம் என்று அழைக்கப்படுகின்றது.
மூளை உட்பட உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஆக்சிசன் கலந்த குருதி சீராக எடுத்துச் செல்லப்படுவதற்கு இதயத்தின் தசையின் சுருங்கி விரியும் தொழிற்பாடு அவசியமானது. எனவே அத்தசைகளுக்கு ஆக்சிசன் மற்றும் ஊட்டக்கூறுகளை வழங்கும் முடியுருக் குருதிச்சுற்றோட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தடைப்படின் இதயத்தின் தசைகள் ஆக்சிசன் பெற்றுக்கொள்வது அற்றுப்போய் அவை நலிவுறும் வேளையில் இதயத்தசை இறப்பு (மாரடைப்பு) ஏற்படுகின்றது.