மாஸ்கோ
From Wikipedia, the free encyclopedia
மாசுகோ (Moscow, (உருசிய மொழி: Москва́, [mɐˈskva]) உருசியா நாட்டின் தலைநகரமாகும். இது மசுகுவா ஆற்றுக்கரையில் அமைந்துள்ளது. உருசிய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரம் உருசியாவிலும் ஐரோப்பாவிலும் முதன்மையான அரசியல், பொருளியல், பண்பாடு, அறிவியல் மையமாக விளங்குகிறது. இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாசுகோ உருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. உருசிய பேரரசர்கள் அல்லது சார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்சுபேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் 1918 ல் உருசியாவின் தலைநகராக்கப்பட்டது. 1922 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் தலைநகராகவும் மாசுகோவே விளங்கியது.
மாசுகோ
Москва | |
---|---|
தலைநகரம் | |
கொடி கொடி சின்னம் சின்னம் | |
பண்: Moya Moskva (என் மாசுகோ) | |
மாசுகோவின் அமைவிடம் | |
நாடு | உருசியா |
கூட்டாட்சி நகரங்கள் | நகரம் |
நிறுவப்பட்டது | 1147க்கு முன்னதாக[1] |
அரசு | |
• மேயர்[2] | செர்சி சோப்யானின் |
• நகராட்சி (டூமா) | மாசுகோ நகர டூமா[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,511 km2 (970 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,15,10,097 |
• அடர்த்தி | 9,682/km2 (25,080/sq mi) |
[7] | |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-MOW |
வாகனப் பதிவு | 77, 99, 97, 177, 199, 197 |
இணையதளம் | www |
ஃபோர்ப்சு இதழ் வெளியிடும் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் 2012இல் மிகக் கூடுதலான பில்லியனர்களைக் கொண்ட இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ளது. புவியின் மிகவும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெருநகரமாகவும் ஐரோப்பாவிலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும்[8][9][10] உலகின் ஆறாவது மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகிறது. 1960 ல் மாசுகோவின் பரப்பளவு 885 சதுர கிலோமீற்றராக அதிகரிக்கப்பட்டது. 1980 களில் மீண்டும் புறநகர் பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது. 2012இல் தென்மேற்கில் மேலும் விரிவாக்கப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு 2,511 சதுர கிலோமீட்டர்கள் (970 sq mi)ஆக மேலும் 2.5 மடங்கு கூடியுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு மாசுகோவின் மக்கள்தொகை 233,000 ஆக உள்ளது.[11][12]
வரலாற்றுச் சுவட்டில் பல இராச்சியங்களின் தலைநகராக மாசுகோ விளங்கியுள்ளது. நடுக்காலத்தில் மாசுகோ குறுநில மன்னராட்சிக்கும் தொடர்ந்து சார் மன்னர்களாட்சிக்கும் பின்னர் எழுந்த சோவியத் ஒன்றியத்திற்கும் தலைநகரமாக விளங்கியது. மாசுகோவில்தான் நடுக்காலத்தில் கோட்டையாகவும் தற்போதைய அரசுத்தலைவர் மாளிகையாகவும் உள்ள கிரெம்லின் உள்ளது. கிரெம்லின் நகரில் உள்ள பல உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக உள்ளது. உருசிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், டூமா மற்றும் கூட்டாட்சி அவை, இங்குதான் கூடுகின்றன.
நகரின் போக்குவரத்துத் தேவைகளுக்காக நான்கு பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் ஒன்பது தொடர்வண்டி முனையங்களும் உலகின் மிகுந்த ஆழத்தில் செல்லும் புவியடி விரைவுத் தொடருந்து பிணையமும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாசுகோவின் மெற்றோ தோக்கியோ, சியோல் மெற்றோக்களை அடுத்து மிக் கூடுதலான பயணிகள் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. இந்தப் பிணையத்தின் 188 நிலையங்களும் அவற்றின் கட்டிட வடிவமைப்பிற்காக நகரத்தின் முதன்மைக் குறியீடுகளாக விளங்குகின்றன.
காலவோட்டத்தில் மாசுகோவிற்கு, அதன் அளவையும் அதிகார மையத்தையும் கொண்டு, பல பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன: மூன்றாம் உரோமை (Третий Рим), வையிட்சுடோன் ஒன்று (Белокаменная), முதல் அரியாசனம் (Первопрестольная), நாற்பது நாற்பதுகள் (Сорок Сороков).