From Wikipedia, the free encyclopedia
மலேசிய இந்திய காங்கிரசு (ம.இ.கா), (மலாய்: Kongres India Se-Malaysia; ஜாவி: كوڠݢريس اينديا سمليسيا; ஆங்கிலம்: Malaysian Indian Congress; சீனம்: 馬來西亞印度國民大會) என்பது மலேசியாவில் இயங்கும் ஒர் அரசியல் கட்சி ஆகும். பாரிசான் நேசனல் கூட்டணியின் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாகும்.
மலேசிய இந்திய காங்கிரஸ் | |
---|---|
சுருக்கக்குறி | ம.இ.கா (MIC) |
தலைவர் | ச. விக்னேசுவரன் |
செயலாளர் நாயகம் | ராஜசேகரன் தியாகராஜன் |
Spokesperson | தினாளன் ராஜகோபாலு |
நிறுவனர் | ஜான் திவி |
தலைமைத் துணைத் தலைவர் | டத்தோ மு. சரவணன் |
துணைத்தலைவர் | டத்தோ மோகன் தங்கராசு டத்தோ முருகையா டத்தோ அசோகன் முனியாண்டி வேல்பாரி துன் சாமிவேலு டத்தோ கோகிலன் பிள்ளை |
இளைஞர் பகுதி தலைவர் | ரவீன் குமார் கிருஷ்ணசாமி |
மகளிர் பிரிவு | மோகனா முனியாண்டி ராமன் |
புத்ரா தலைவர் புத்ரி தலைவி | டாக்டர் கிசுவா அம்பிகாபதி
சாலினி ராஜாராம் |
தொடக்கம் | 4 ஆகஸ்டு 1946 |
முன்னர் | மலாயா இந்தியர் காங்கிரஸ் |
தலைமையகம் | 6th floor, Menara Manicavasagam, No. 1, Jalan Rahmat, 50350 Kuala Lumpur, Malaysia |
செய்தி ஏடு | ம.இ.கா. டைம்ஸ் தமிழ் நேசன் |
இளைஞர் அமைப்பு | ம.இ.கா. இளைஞர் அணி |
கொள்கை | மலேசிய இந்தியர்களின் சமூக அரசியல் நிலைப்பாட்டை மேம்படுத்துவது |
தேசியக் கூட்டணி | அனைத்து மலாயா கூட்டு நடவடிக்கை மன்றம் (1948–1953) கூட்டணி (1954–73) பாரிசான் நேசனல் (1973 தொடங்கி) பெரிக்காத்தான் நேசனல் (2020 தொடங்கி) சபா மக்கள் கூட்டணி (2020 தொடங்கி) |
நிறங்கள் | பச்சை; வெள்ளை |
பண் | சாதனை நமது கையிலே |
மலேசிய மேலவை: | 3 / 70 |
மலேசிய மக்களவை: | 1 / 222 |
மாநிலச் சட்டமன்றங்கள்: | 5 / 606 |
இணையதளம் | |
www |
முன்பு பாரிசான் நேசனல் என்பது கூட்டணி (Alliance) என அழைக்கப்பட்டது. 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரையில், பாரிசான் நேசனல் கூட்டணி ஆட்சியில் இருந்தது.
மலேசியாவின் பழமையான கட்சிகளில் ஒன்றான ம.இ.கா. கட்சி, மலாயா நாட்டு விடுதலைகாக முதன்முதலில் போராடிய கட்சிகளில் ஒன்றாகும்.
ம.இ.கா.; ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (அம்னோ); மலேசிய சீனர் சங்கம் ஆகியவை இணைந்து 1954-ஆம் ஆண்டில் தேசியக் கூட்டணியை உருவாக்கின. பின்னர் இந்தத் தேசியக் கூட்டணி கூடுதல் கட்சிகளை இணைத்து 1973-ஆம் ஆண்டில் பாரிசான் நேசனல் என மாற்றம் கண்டது.
ம.இ.கா. ஒரு காலத்தில் இந்தியச் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மிகப் பெரிய கட்சியாகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாகவும் விளங்கியது. ஆனால் 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோசமாகப் பாதிக்கப் பட்டது.
இன்றைய காலக் கட்டத்தில், இழந்து போன செல்வாக்கை மீட்டு எடுப்பதில் போராடி வருகிறது.
ம.இ.கா. கட்சி, 1946-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கோலாலம்பூர், செந்தூல் செட்டியார் மண்டபத்தில் 1946-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 - 5 ஆம் தேதிகளில் அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற்றது.
அந்த அமைப்புக் கூட்ட மாநாட்டில் மலாயா, சிங்கப்பூரைச் சேர்ந்த 561 பேர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் மலாயா இந்தியர் காங்கிரஸ் என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ம.இ.கா. அதன் கவனத்தை மாற்றிக் கொண்டு, மலாயாவின் (இப்போது மலேசியா) சுதந்திரத்திற்காகப் போராடத் தொடங்கியது.[1]
ம.இ.கா. தோற்றுனர் ஜான் திவி, லண்டனில் சட்டம் படிக்கும் போது மகாத்மா காந்தியைச் சந்தித்தார். காந்தியின் சித்தாந்தம் மற்றும் நேருவின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டார்.
அதன் விளைவாக இந்திய விடுதலைக்குப் போராடுவதில் உறுதியாக இருந்தார். இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு மலாயாவுக்குத் திரும்பினார்.[2] 1946 ஆகஸ்டு மாதம் மலாயா இந்திய காங்கிரஸை நிறுவினார். 1963-ஆம் ஆண்டில் மலேசியா கூட்டமைப்பு உருவான பிறகு மலேசிய இந்திய காங்கிரஸ் என மறுபெயரிடப்பட்டது.
1947-ஆம் ஆண்டு வரையில் ம.இ.கா. கட்சியின் தலைவராக இருந்தார். ம.இ.கா. கட்சியின் பெயரில் உள்ள 'காங்கிரஸ்' என்ற சொல் இந்திய தேசிய காங்கிரஸைக் குறிக்கிறது. மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்குப் போராட வழிவகுத்தச் சொல்.
ம.இ.காவைத் தோற்றுவித்த ஜான் திவி, அப்போது மலாயா இந்தியர்களிடையே நிலவிய சமூகப் பிரச்னைகளைக் களைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். தமிழர்களின் கல்வித் தகுதிக் குறைவு, மதுவிற்கு அடிமை, குடும்பப் பிரச்னைகள் போன்றவையே அப்போதைய இந்தியர்களிடையே சமூகப் பிரச்னைகளாக நிலவி வந்தன.
பொதுவாக, மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்காக ம.இ.கா. தோற்றுவிக்கப் பட்டது. பெரும்பாலான இந்தியர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால், ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப் பட்டனர்.
1947-ஆம் ஆண்டு இறுதியில் பூத் சிங் (Baba Budh Singh Ji) ம.இ.கா.வின் தலைவரானார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மலாயாவை ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள் மலாயன் யூனியன் (Malayan Union) எனும் மலாயா ஒன்றியத்தை நிறுவினார்கள். அதாவது மலாயா நாட்டின் நிர்வாகத்தை எளிமைப் படுத்த ஒரே அரசாங்கத்தின் கீழ் மலாய் தீபகற்ப மாநிலங்களை ஒருங்கிணைத்தனர்.
பெரும்பான்மையான இந்திய சமூகத்தினர் மலாயன் யூனியனை ஆதரித்தாலும், ம.இ.கா. ஆதரிக்கவில்லை.[3] பரவலான மலாய் எதிர்ப்புக்களுக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் கலைக்கப்பட்டது. மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்று ஒரு புதிய மறு அமைப்பு உருவாக்கப் பட்டது.[4]
அந்த மலாயா ஒப்பந்தக் கூட்டமைப்புக்கு (Federation of Malaya Agreement) மலாயா சீனர் சங்கத்தின் தலைவர் துன் டான் செங் லாக் (Tun Tan Cheng Lock) என்பவரின் கீழ் இருந்த அனைத்து மலாயா கூட்டு நடவடிக்கை மன்றம் (All-Malaya Council of Joint Action) எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும் மலாயா கூட்டு நடவடிக்கை மன்றத்தில் ம.இ.கா. இணைந்தது. அதற்கு பிரித்தானியர்கள் மீது இந்தியர்களுக்கு அப்போது இருந்த கசப்புணர்வுகளே காரணம் ஆகும்.
1950-ஆம் ஆண்டில் கே. ராமநாதன் (K. Ramanathan) என்பவர் ம.இ.கா.வின் தலைவரானார். இவர் ம.இ.காவின் மூன்றாவது தலைவர். இவருடைய காலத்தில், ம.இ.கா.வில் பொதுவான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது என்று சொல்லலாம். அந்த நேரத்தில், மலாயாவில் இந்தியர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முன்னணிக் கட்சியாகவும் ம.இ.கா. விளங்கியது.[5]
கே. ராமநாதனின் காலக் கட்டத்தில், இந்தியர்கள் குடியுரிமை பெறுவதில், முன்நிபந்தனையாக ஒரு மொழி புலமைத் தேர்வு நடத்தப்பட்டது. சற்றுக் கடினமான தேர்வு. இந்தியர்கள் பலரால் தேர்ச்சி பெற இயலவில்லை. குடியுரிமை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
ஆகவே அந்த முன்நிபந்தனை மொழி புலமைத் தேர்வைத் தளர்த்த வேண்டும் என்று கே. ராமநாதன் அறைகூவல் விடுத்து வற்புறுத்தி வந்தார். மேலும் இந்தியர்கள் கூட்டாட்சி குடியுரிமையைப் பெற வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தினார்.[6] இவருடைய தொடர் முயற்சியால் முன்நிபந்தனை மொழி புலமைத் தேர்வு தளர்த்தப் பட்டது. அதன் பயனாக பல்லாயிரம் இந்தியர்கள் குறுகிய காலக் கட்டத்தில் குடியுரிமை பெற்றனர்.
ம.இ.கா.வின் வரலாற்றில் 10 பேர் ம.இ.கா.வின் தலைவராக இருந்துள்ளனர். இவர்களில் மிக முக்கியமாகக் கருதப் படுகிறவர் ம.இ.கா.வின் மூன்றாவது தலைவர் கே. இராமநாதன். இவர் ஓராண்டு காலம் பதவி வகித்தாலும் பல்லாயிரம் இந்தியர்கள் குடியுரிமை பெறுவதற்கு அரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டவர்.
1951-ஆம் ஆண்டு ம.இ.கா.வின் நான்காவது தலைவராக கே.எல்.தேவாசர் பொறுப்பு ஏற்றார். மலேசிய அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அரசியல் கூட்டுறவு கண்டிப்பாக இருக்க வேண்டும் எனபதை உணர்ந்தார்.
அதனால் மலாய்க்காரர்களின் அம்னோ கட்சி, சீனர்களின் ம.சீ.ச. கட்சியுடன் இணைந்து போகும் தனமைகளை முன் நிறுத்தினார். 1952-ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட ம.இ.காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. டத்தோ ஓன் ஜாபார் தலைமையில் மலாயா சுயேட்சை கட்சியில் Independent Malayan Party (IMP) ம.இ.கா இணைந்து அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிட்டின.
1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் பொறுப்பேற்ற பிறகு ம.இ.கா.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் தலைமைத்துவத்தின் கீழ், ஒரு பரந்த அடிப்படையில் ம.இ.கா. புதுத் தோற்றம் கண்டது. 1957 ஆகஸ்டு 31ஆம் நாள் மலேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.
அந்த மெர்டேகா சுதந்திர ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. அதில் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார்.
இந்தக் காலக் கட்டத்தில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டவர் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.
அதனால் பல ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் நின்றனர்.நடுத்தெருவிற்கு வந்து நின்ற தமிழ்க் குடும்பங்கள் ஆயிரம் ஆயிரம்.
இதைப் பார்த்த முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். நாடாளுமன்றத்தில் தோட்டத் துண்டாடல் சட்டத்தையும் நிறைவேற்றினார்.
மலேசியாவில் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் மலேசிய இந்தியர்களின் நலன்களில் அதிகமாகக் கவனம் செலுத்திய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகும்.தோட்டங்கள் துண்டாடப் பட்டதினால் இந்திய இனம் தடுமாறிப் போய் நின்றக் கட்டத்தில் ம.இ.கா. தீவிரமாகக் களம் இறங்கியது.
துன் வீ.தி.சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று தோட்டத் தொழிலாளர்களிடம் பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார்.அல்லும் பகலும் அலைந்து பணத்தைச் சேர்த்தார். அரசாங்கச் சலுகைகளைப் பயன் படுத்தவில்லை. அத்துடன் அரசாங்க வாகனங்களையும் பயன் படுத்தவில்லை. தன் சொந்த வாகனங்களைப் பயன் படுத்தினார்.
அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970-ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே ஆகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.[7]
துன் சம்பந்தனின் தன்னலமற்ற சேவைகளினால் ஆயிரம் ஆயிரம் இந்தியர் குடும்பங்கள் இப்போது நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு வருகின்றன. துன் சம்பந்தன் அவர்களை மலேசிய இந்தியர்கள் கர்ம வீரர் காமராசராக நினைக்கின்றார்கள்.
மலேசியாவில் பூரோ வங்கி (Bank Buruh) எனும் தொழிலாளர் வங்கி உருவாவதற்குக் காரணமாக இருந்தவரும் துன் சம்பந்தன் அவர்களே.1973-ஆம் ஆண்டில் இருந்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் பணியாற்றி வருகின்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.