From Wikipedia, the free encyclopedia
மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். மருத நிலத்தின் கடவுள் இந்திரன்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநிலக் கடவுளாகக் கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாகத் தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[யார்?][சான்று தேவை] திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டான். இது, தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி. ஆகையினால்தான், மிக மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் கூறினார்கள்.[சான்று தேவை]
வேளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வேளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர்.
தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்
“ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968)
என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார்.
நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம்
‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23)
என இருவகை மருதநில மக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார்.
புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும்,
“களமர் கதிர்மணி காலோகம் செம்பொன்
வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15)
இவ்வாறு இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெயர்களில் மருதநில மக்கள் அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது.
கிபி 900-களில் சோழ ஆட்சியின் மீள் வருகையின் பின்னர் மருதநிலம் பெருவளர்ச்சி கண்டது. சோழர்கள் தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றி அங்கிருந்த குறும்பர், வேட்டுவர் ஆகியோரையும் வென்று அவர்களின் நிலங்களில் வெள்ளாண்மை செய்துள்ளனர். அது மட்டுமின்றி இக்கால கட்டத்தில் அங்கு வெள்ளாளரை குடியமர்த்தி மருதநிலத்தை விரிவுபடுத்தியும் உள்ளனர். குறும்பர், வேட்டுவர், இருளர் மக்களில் பலரும் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டு மருத நிலத்தின் மக்களாக மாற்றப்பட்டதும் இக்கால கட்டத்தில் தான். இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு
“களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்
வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை)
கழனிக் கடைந்தவர் (பெயரே)” (திவாகரம்.130)
என்று குறிப்பிடுகிறது. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு,
“களமர் உழவர் கடைஞர் சிலதர்
மள்ளர் மேழியர் மருதமாக்கள்” (பிங்கலம்.132)
என்று மருதநில மக்களில் ஆறு பிரிவினராகவும், மருதநில மக்கள்
“களமரே தொழுமரே மள்ளர்
கம்பளர் உழவரொடு
வினைஞர் கடைஞர்” (சூடாமணி.71)
என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன. இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு என அறிஞர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.