From Wikipedia, the free encyclopedia
மணமகள் எரிப்பு (Bride burning) வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள நாடுகளில் நடைபெறும் குடும்ப வன்முறையின் ஓர் வடிவமாகும். வரதட்சணை மரணத்தின் ஒரு வகையாக இளம் மனைவி அவளது குடும்பத்தினால் கூடுதல் வரதட்சணை தர மறுத்த நிலையில் அவளது கணவனாலோ கணவனின் குடும்பத்தினராலோ எரிக்கப்படுகிறாள். பொதுவாக மண்ணெண்ணெய், பெட்ரோல், அல்லது பிற நீர்மநிலை எரிபொருளை ஊற்றி எரியூட்டப்படுகிறாள்.[1][2] மண்ணெண்ணெய் பெரும்பாலான வீடுகளில் சமையல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதால் அதுவே முதன்மையான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இது மிகவும் வழமையான பிரச்சினையாகவும் 1993 முதல் தீவிரமான பிரச்சினையாகவும் உள்ளது.[3]
இது கொலைக்குற்றமாகக் கருதப்படுகிறது; குற்றம் நிரூபிக்கப்பட்டால், பொதுவாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.[1] மணமகள் எரிப்பு ஓர் பொது நலவாழ்வுப் பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4] இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 2,500 மரணங்கள் நிகழ்வதாக மதிப்பிடப்படுகிறது.[4] 1995இல் டைம் இதழ் அறிக்கையின்படி வரதட்சணை மரணங்கள் ஆண்டுக்கு 400 கூடியுள்ளது; 1990களில் 5,800ஆக இருந்ததாக குறிப்பிடுகிறது.[5] ஒவ்வொரு ஆண்டும் 2,500 மணமகள் எரிப்பு குற்றங்கள் காவல்துறையில் பதிவாவதாக சிஎன்என் 1996இல் செய்தி வெளியிட்டுள்ளது.[6] இந்திய தேசிய குற்றப் பதிவு செயலகத்தின்படி 2008ஆம் ஆண்டில் வரதட்சணைக் குற்றங்களில் 1,948 குற்றத்தீர்ப்புகளும் 3,876 குற்ற விடுதலைகளும் வழங்கப்பட்டுள்ளன.[7]
இந்தியாவில் மணமகளின் பெற்றோர்கள் பெண்ணிற்குத் தரவேண்டிய பரிசுப்பொருளான வரதட்சணையை மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் தீர்மானிக்கின்றனர். இது தர மறுக்கப்படும்போது அல்லது குறைவாக வழங்கப்படும்போது மணமகள் குடும்பத்திற்கு பாடம் புகட்டவும் மற்றொரு திருமணம் புரியவும் மணமகளை எரிப்பது நடப்பதாக முனைவர்.ஆஷ்லே கே. ஜுட்லா மற்றும் முனைவர் டேவிட் எய்ம்பாக் கூறுகின்றனர்.[8]
1961இல் இந்திய அரசு திருமணங்களின் போது வரதட்சணை வாங்குவதைத் குற்றமாக்கி வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961 இயற்றியுள்ளது.[9]
1986இல் இந்திய நாடாளுமன்றம் வரதட்சணை மரணங்களைப் புதிய குடும்ப வன்முறை குற்றமாக்கியுள்ளது . இந்தியத் தண்டனைத்தொகுப்புச் சட்டத்தின் புதிய பிரிவு 304-B வின்படி மணமகள் ஒருவர் "திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்து அவரது இறப்புக்கு சற்று முன்னதாக அவரது கணவராலோ, கணவரின் எந்தவொரு உறவினராலோ துன்புறுத்தப்பட்டதாகவோ வரதட்சணை கோரப்பட்டதாகவோ நிரூபிக்கப்பட்டால், அது வரதட்சணை மரணமாக கருதப்பட்டு அவரது கணவரோ அல்லது உறவினரோ கொலை செய்ததாக கொள்ளப்படும்."[9]
குற்றவாளிகளுக்குக் குறைந்தது ஏழாண்டுச் சிறைவாசம் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம்.[10]
பாக்கித்தானில், ஒவ்வொரு ஆண்டும் 300 பெண்கள் கணவரின் குடும்பத்தினரால் எரியூட்டப்படுவதாகவும் பல மணமகள் எரித்தல்கள் விபத்துகளாக, ஸ்டவ் வெடித்து, நிகழ்வதாக மறைக்கப்படுகின்றன என்றும் பெண்கள் முன்னேற்ற சங்கம் கூறுகிறது.[11] இந்தச் சங்கத்தின்படி இத்தகைய விபத்துகளில் உயிரிழந்த பெண்களைச் சோதித்த மருத்துவர்கள் அடுப்புக் காயங்களிலிருந்து இவை வேறுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.[11] பன்னாட்டு மன்னிப்பு அவையின் 1999 ஆண்டு அறிக்கையின்படி 1,600 மணமகள் எரித்தல்கள் நடைபெற்றுள்ளன; இவற்றில் 60 வழக்குகளில் மட்டுமே குற்ற விசாரணை நடத்தப்பட்டு, இரண்டில் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.[12]
இந்த நடைமுறைகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்ட வேண்டும் என சாநாசு புக்காரி போன்ற பெண்ணியவாதிகள் போராடி வருகின்றனர். பெண்களுக்கான புகலிடங்களும் மருத்துவமனைகளில் தீக்காயத்திற்கான சிறப்புப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.[13] பன்னாட்டு மன்னிப்பு அவை மற்றும் பிற பன்னாட்டு மனித உரிமைக் குழுக்களின் தாக்கத்தால் பாக்கித்தான் அரசுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.[14] 1999இல் 300 பாக்கித்தானிப் பெண்கள் எரியூட்டப்பட்டதாக பிபிசி மதிப்பிடுகிறது.[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.