போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு (Polish Committee of National Liberation; போலிய மொழி: Polski Komitet Wyzwolenia Narodowego, PKWN), என்பது ஜூலை 21, 1944 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஓர் இடைக்கால அரசாகும். இது லூப்லின் குழு எனவும் அழைக்கப்படுகிறது. அந்நாளில் நாடு கடந்த நிலையில் இருந்த போலந்து அரசுக்கெதிராக சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் நாட்டின் தேசியக் கவுன்சிலில் உத்தரவின் பேரில் இந்த இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. நாசி ஜெர்மனிகளிடம் இருந்து மீள்விக்கப்பட்ட பகுதிகளை இது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

Thumb
ஜூலை 22, 1944 இல் வெளியிடப்பட்ட PKWNஇன் அறிக்கையை வாசிக்கும் போலந்தின் பொதுமகன்

ஜூலை 22, 1944 இக்குழுவின் அறிக்கை (Manifesto of the Polish Committee of National Liberation) வெளியிடப்பட்டது. அரசியல், சமூக, மற்றும் பொருளாதார மாற்றங்களையும் நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும் இவ்வறிக்கை முன்வைத்தது. அத்துடன் நாட்டின் தொழிற்சாலைகளை அரசுடமை ஆக்கும் திட்டத்தையும் அறிவித்தது. நாடுகடந்த நிலையில் இருந்த போலந்து அரசை அது நிராகரித்து "போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு"வே நாட்டின் அதிகாரபூர்வ அரசாகவும் அறிவித்தது. இதனை அடுத்து சோவியத்தின் அதிகாரத்தின் கீழிருந்த போலந்தின் பல பிரதேசங்களின் ஆட்சி இக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பிரதேசங்களை பாதுகாப்பு "மக்கள் கமிசார்" என்றழைக்கப்பட்ட சோவியத் காவல்துறையினரிடமும், செம்படை (Red Army) இடமுமே இருந்தன. ஆகஸ்ட் 1, 1944இலிருந்து இக்குழு லூப்லின் என்ற இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது. நிக்கலாய் புல்கானின் என்பவர் சோவியத் நிர்வாகியாக இருந்தார்.

போலந்தின் பல்வேறு கம்யூனிச, மற்றும் இடதுசாரி அமைப்புகளின் தலைவர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் தலைவராக போலந்து சோசலிசக் கட்சித் தலைவர் எட்வேர்ட் ஒசோப்கா-மொராவ்ஸ்கி இருந்தார்.

Thumb
ஜூலை 22, 1944 இல் விடுக்கப்பட்ட போலந்தின் தேசிய விடுதலைக்கான குழுவின் அறிக்கை

நாடுகடந்த நிலையில் இருந்த போலந்து அரசின் சில முக்கிய உறுப்பினர்கள் டிசம்பர் 31 1944இல் இடைக்கால அரசில் இணைந்தனர். ஜனவரி, 2945 இல் தலைநகர் வார்சாவை சோவியத் ஒன்றியம் நாசிகளிடம் இருந்து கைப்பற்றியதை அடுத்து அது போலந்துக் குடியரசின் இடைக்கால அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல்கள் இடம்பெறும் வரையில் இவ்வரசே இப்பகுதிகளை ஆண்டது.

பனிப்போர்

ஜோசப் ஸ்டாலினின் சோவியத் ஆதரவுடன் போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு அமைக்கப்பட்டதை அடுத்து சோவியத் ஒன்றியத்துக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஆரம்பித்தது. இது பின்னர் பனிப்போர் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது.

போலந்தில் ஏற்பட்டதைப் போன்ற நிகழ்வுகள் கிழக்கு ஐரோப்பாவில் செம்படையின் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகளில் இடம்பெற ஆரம்பித்தன. ருமேனியாவில் மார்ச் 1945 இல் ருமேனியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

இந்த மாற்றங்கள் மேற்குலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி முறையிலான தேர்தல்கள் நடத்துவதற்கு யால்ட்டா மாநாட்டில் ஸ்டாலின் உடன்பட்டிருந்தார்.

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.