From Wikipedia, the free encyclopedia
பெரும் பொருளியல் வீழ்ச்சி (Great Depression) அல்லது பொருளாதாரப் பெருமந்தம் என்பது ஓர் உலகளாவிய பொருளாதார இறங்குமுக நிலையாகும். இது பெரும்பாலான இடங்களில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கி வெவ்வேறு நாடுகளில் 1930 களிலோ அல்லது 1940களின் தொடக்க ஆண்டுகளிலோ முடிவுக்கு வந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கிடையில் உலக நாடுகளிடையே ஏற்பட்ட முக்கிய நிகழ்வு இதுவாகும். தற்கால வரலாற்றில் மிகப்பெரியதும், முக்கியமானதுமான பொருளாதார வீழ்ச்சி இதுவே. 21 ஆம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்பதைக் குறிப்பதற்கான ஒரு அடிப்படை அளவீடாக இது பயன்படுகின்றது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஐக்கிய அமெரிக்காவில் தொடங்கி ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது. வரலாற்றாளர்களால், பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்ட நாள் கறுப்புச் செவ்வாய் எனப்படும், 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாளையே இதன் தொடக்கமாகக் கொள்வர். ஐக்கிய அமெரிக்காவில் இதன் முடிவு இரண்டாம் உலகப் போருடன் தொடர்பான போர்ப் பொருளாதார நிலைமையில் 1939 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.
பொருளாதாரம் மந்த நிலையடைந்து வீழ்ச்சியை அடைந்தாலும், அது தானாகவே மீண்டு உச்ச நிலையினை எட்டிவிடும் என்பதே பொருளியல் குறித்த பழைமைவாதமாக இருந்தது. ஆனால் 1929 முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பெரும் பொருளியல் வீழ்ச்சியானது மிகவும் வேகமாகவும் நீடித்ததாகவும் பரந்துபட்டதாகவும் காணப்பட்டது.[1]
இப் பொருளியல் வீழ்ச்சி, வளர்ந்துவரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் பெரும் தாக்கங்களை உண்டுபண்ணியது. சிறப்பாக குடியேற்ற நாடுகளாக இருந்தவை பெரிதும் பாதிக்கப்பட்டன. உலக வணிகமும் அத்துடன் தனியார் வருமானம், வரி வருமானம், விலைகள், இலாபம் என்பனவும் ஆழமான பாதிப்புக்கு உள்ளாயின. உலகம் முழுவதிலும் இருந்த நகரங்கள், முக்கியமாக பாரிய தொழிற்சாலைகளில் தங்கியிருந்த நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கட்டுமானங்கள் பல நாடுகளிலும் முற்றாகவே நின்றுவிட்டன. வேளாண்மையும், நாட்டுப் புறங்களும், பயிர்களுக்கான விலைகள் 40 - 60% வரை வீழ்ச்சியடைந்ததனால் பெரும் தாக்கத்துக்கு உள்ளாயின. வீழ்ச்சி கண்டுகொண்டிருந்த தேவை (demand) நிலையாலும்; மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமையாலும்; வேளாண்மை, சுரங்கத் தொழில், மரம் வெட்டல் போன்ற முதல்நிலைத் தொழில் சார்ந்த பகுதிகளே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.
அமெரிக்கப்பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவே பொருளாதாரப் பெருமந்தத்திற்குக் முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. பங்குகளின் விலை உயரும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் மக்கள் கடன் வாங்கிப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தது இப்பெருமந்தத்தின் காரணமாகும்.[2]
1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பொருப்பேற்ற ஹெர்பர்ட் ஹூவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சகட்டத்தை அடைந்தது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டனர். சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பங்குகள் தரும் பங்காதாயத்திற்கு மட்டுமன்றி அவற்றை மறுவிற்பனை செய்வதைன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவும் பெருமளவில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் வேகமாக செல்வந்தர்கள் ஆகலாம் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் பங்குகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.
இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் விரைவாகத் தங்கள் பங்குகளை விற்க முற்பட்டனர். இதனால் பங்குகளில் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. வங்கிகளால் கடன் வழங்க இயலாததாலும் விவசாய உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவை வீழ்ச்சியடைந்ததன.
ஹூவர் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1932-ஆம் ஆண்டு ஹூவரால் அமைக்கப்பட்ட புனரமைப்பு நிதி நிறுவனம், வங்கிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கடனுதவி அளிக்க முன்வந்தது.[3] இம்முயற்சி உடனடியானத் தீர்வைத் தராத காரணத்தால் ஹூவரின் ஆட்சியின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்தனர்.[4]
1932 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இப்பெரும் பொருளியல் வீழ்ச்சியை சரிசெய்வதாக உறுதியளித்தார். இதனால் தேர்தலில் வெற்றிபெற்று 1933, மார்ச்சு 4 ஆம் நாள் அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.
இச்சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் மேனார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்னும் பொருளியல் அறிஞரின் ஆலோசனையை அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் நாடினார். கீன்ஸின் பொருளியல் சார்ந்த மீட்புக்கான பரிந்துரைகள் ஒவ்வொன்றாக ரூஸ்வெல்ட் நடைமுறைப்படுத்திட விழைந்தார். இதன் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடானது பெரும் பொருளியல் வீழ்ச்சி சரிவிலிருந்து மீண்டது. பிற மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவைப் போன்று செயல்பட்டு மீட்சிக் கண்டன. கீன்ஸ் இந்தப் பொருளியல் பிரச்சினையை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி ஆராய்ந்தார். “ஒரு பொருளுக்கான தேவைகள் அதிகரிக்கும்போது, அதனை அதிகமாக உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்ப வேண்டும்; தேவை குறைந்தால் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்னும் பொருளியல் வழக்கத்தை கீன்ஸ் புறந்தள்ளினார். சந்தைக்கான பொருள் அளிப்பதை (Supply) பற்றிக் கவலைக் கொள்ளாமல் அதற்கான தேவையை (Demand) அதிகரிக்க வேண்டும் என்றார் கீன்ஸ்.[1]
மேலும், ஒரு துறையின் வேலைக்கான ஊதியத்தின் மொத்தத் தொகையை (Wage Fund) நிர்ணயித்து வரையறுப்பதையும், தொழிலாளர்கள் எண்ணிக்கைக் கூடும்போது ஊதியத்தைக் குறைத்தும், எண்ணிக்கைக் குறைந்தால் ஊதியத்தை அதிகரித்து உற்பத்தியைத் தொடரும் போக்கைத் தவறு என்று கீன்ஸ் நிரூபித்தார். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தித் தருவதன் மூலம் பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும் என்றார். தொழிலாளர்களும் நுகர்வோர்களே என்பதால், அவர்களுடைய ஊதியம் உயரும்போது நுகர்வுப் பண்பும் அதிகரித்து நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் மேம்படும் என்று வலியுறுத்தினார். இக்கருத்து நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டு வெற்றிக் கண்டது. அமெரிக்காவின் ஃபோர்டு மகிழுந்து நிறுவனமானது தம்முடைய ஆலைத் தொழிலாளர்களுக்கு அதி நவீனப் பயிற்சி அளித்தது, அதிக ஊதியமும் வழங்கியது. அத்துடன் ஒவ்வொரு பணியாளரும் ஒரு மகிழுந்து வாங்க வேண்டுமென வலியுறுத்தியது. இதன் காரணமாக அண்டை அயலாரின் நுகர்வு அதிகரித்து விற்பனைக் கூடியது. தொழிலாளர்களின் சமூக மதிப்பும் போர்டு நிறுவனத்தின் வருவாயும் பெருகியது.
பெரும் பொருளியல் வீழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் புதிய பயனுரிமைக் கொள்கை(New Deal) என்ற புதிய சீரமைப்புக் கொள்கையை உருவாக்கினார். இது உதவி, மீட்பு, சீர்திருத்தம் என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[5]
புதிய பயனுரிமைச் சட்டத்தின் ஒரு சில திட்டங்களைத் தவிர மற்ற அனைத்தும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்தன. மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்தன. பொருளாதார மேன்மைக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.
புதிய பயனுரிமைச் சட்டத்தின் சில திட்டங்களான முதலாளி தொழிலாளி கூட்டுப் பேச்சுவார்த்தை, பங்கு பரிவர்த்தனை முறைப்படுத்துதல் மற்றும் வேலை நேரக்கட்டுப்பாடுகள் முதலியன இன்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன. இந்தப் பயனுரிமைத் திட்டம் உலக நாடுகளின் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. இதன் விளைவால் மீண்டும் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.[13][14]
1971 இல் வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்க அரசு இனி தமது வணிகத்தில் அமெரிக்க அரசு தங்க மதிப்பை கணக்கில் கொள்ளாது. அமெரிக்காவோடு வணிகம் செய்யும் பிற நாடுகள் அமெரிக்க டாலர் மதிப்பை மட்டுமே பொது மதிப்பாக கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. அமெரிக்கப் பெரு முதலாளிகளின் மூலதனம், நவீன தொழில் நுட்பம், வெளி வாணிபம், அரசியல் மேலாதிக்கம் முதலானவற்றில் உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிடம் அகப்பட்டு இருந்த காரணத்தால், 1971 க்குப் பிறகு உலகப் பொது நாணயமாக அமெரிக்க டாலர் முன்மொழியப்பட்டுக் கோலோச்சத் தொடங்கியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.