From Wikipedia, the free encyclopedia
பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே போர்த்துக்கேயக் கிழக்கிந்திய அரசாங்கத்தில் ஒரு குடிசார் அலுவலரும், நிலப்படவரைஞரும் ஆவார். நூலில் வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும், அந்தோனியோ பொக்காரோவின் கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூலில் (1635) இணைக்கப்பட்டுள்ள படங்கள் இவரால் வரையப்பட்டவை. இது குறித்துத் தான் எழுதிய "கிழக்கிந்தியக் கோட்டைகளின் விபரங்கள்" என்னும் கையெழுத்துப்படியில் இவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். இது இப்போது பாரிசில் உள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளது.
ரெசென்டே போர்த்துகலில், பைவா என்னும் இடத்தைச் சேர்ந்தவர்.[1] பிரித்தானிய நூலகத்தில் உள்ள, "கிழக்கிந்திய அரசு குறித்த நூல்" என்னும் அவரது இன்னொரு கையெழுத்துப்படியில் தன்னைப் பற்றிய மேலும் விபரங்களைக் கொடுத்துள்ளார். ரெசென்டே 1614 ஆம் ஆண்டில், டொம் மனுவேல் குட்டின்கோ என்பவரின் தலைமையிலான கப்பல் அணியைச் சேர்ந்த "கான்செப்சன்" என்னும் கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். வழியில் தாகுஸ் ஆற்றுப் பகுதியில் சேதம் அடைந்ததால் கப்பல் பிரேசிலை நோக்கிச் செல்லவேண்டியதாயிற்று. அங்கிருந்து ரெசென்டே மீண்டு போர்த்துகலுக்கே திரும்பினார்.
அடுத்த ஆண்டில் அவர் வட ஆப்பிரிக்காவுக்குச் சென்றார் அங்கே 1628 வரை பணியாற்றினார். 1629 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கான புதிய வைசுராய் டொம் மிகுவேல் டி நோரன்காவின் செயலராக அவரது கப்பல் அணியில் இணைந்து இந்தியாவுக்குப் பயணமானார். அந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி அக்கப்பல் அணி கோவாவை அடைந்தது. கோவாவில், வைசுராயின் தனிச் செயலராக மட்டுமன்றி, மேலும் பல பதவிகளையும் ரெசென்டே வகித்தார். இதனால், போர்த்துக்கேயக் கிழக்கிந்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல கோட்டைகளில் இருந்து கிடைக்கும் ஆவணங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரெசென்டேக்குக் கிட்டியது. தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ஒரு நூலை எழுதும் நோக்கத்துடன் அவற்றிலிருந்து தகவல்களையும் இவர் சேகரித்து வந்தார். இந்த நூலுடன் இணைக்கும் நோக்குடன் போர்த்துக்கேயரின் கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த படங்களையும் அவர் வரைந்து வைத்திருந்தார்.
இந்த வேளையில், போர்த்துக்கேய அரசர் மூன்றாம் பிலிப்பு, கிழக்கிந்தியாவைச் சேர்ந்த கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த தகவல்களை அனுப்புமாறு வைசுராய்க்குக் கட்டளை இட்டிருந்தார். வைசுராய் இந்தப் பணியை அந்தோனியோ பொக்காரோவிடம் ஒப்படைத்தார். பொக்காரோ உரைப்பகுதியை மட்டும் எழுதுவதற்குச் சம்மதித்து ரெசேன்டேயின் படங்களை அத்துடன் இணைத்து அனுப்பலாம் என்று ஆலோசனை கூறினார். ரெசென்டே, பொக்காரோவிடம் இருந்து உரைப் பகுதியைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகத் தனது படங்களைக் கொடுக்கச் சம்மதித்தார். ரெசென்டே வரைந்த 52 படங்கள் போர்த்துகலுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
1629 இலிருந்து 1636 ஆம் ஆண்டுவரை கோவாவில் பணியாற்றிய ரெசென்டே 1651 ஆம் ஆண்டில் லிசுபனில் காலமானார்.[2]
அந்தோனியோ பொக்காரோவினால் தொகுத்து அனுப்பப்பட்ட கிழக்கிந்தியாவைச் சேர்ந்த கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட ஆவணத்தின் மூலப்படி அதன் பிற படிகள் என்பவற்றுக்குப் புறம்பாக, "ரெசென்டேயின் கிழக்கிந்திய அரசு தொடர்பான நூல்" எனக் குறிப்பிடப்படும் ஏறத்தாழ அதே போன்ற கையெழுத்துப்படிகள் பாரிசில் உள்ள தேசிய நூலகத்திலும், இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்திலும் காணப்படுகின்றன. ரெசென்டேயின் இந்த நூலில் பெருமளவுக்கு பொக்காரோவின் உரைப்பகுதியே பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும், படங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 1646 ஆம் ஆண்டைச் சேர்ந்த இலண்டனில் உள்ள படியில் 76 படங்கள் உள்ளன. இவற்றுள் 66 படங்கள் ரெசென்டேயுடையவை. ஏனைய பத்தும் பிறரால் வரையப்பட்டவை. 1636 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாரிசில் உள்ள படியில் 70 படங்கள் உள்ளன. இவை அனைத்தும் மூலப் படங்களில் இருந்து பெயர் தெரியாத ஒருவரால் படியெடுக்கப்பட்டவை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.