புறச்சித்தாந்த சைவம் என்பது, சித்தாந்தம் அல்லாத எல்லா மந்திர மார்க்கச் சைவப்பிரிவுகளையும் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.

தோற்றம்

சைவமானது, ஆதிமார்க்கம், மந்திரமார்க்கம் எனும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டது. ஆதிமார்க்கத்தின் மூன்றாம் தலைமுறையான காபாலிகம், மந்திரமார்க்கத்துடன் உரையாடியதன் பயனாக, அதில் புறச்சித்தாந்தம் எனும் தனிப்பிரிவுகள் தோன்றின என்பது ஆய்வாளர் முடிவு.[1] சித்தாந்தம் போலன்றி, தனியே சிவனை வழிபடாமல், சக்தியையும் போற்றிய - அல்லது சக்திக்கு ஒருபடி அதிக முன்னுரிமை அளித்த மந்திர மார்க்க சைவப்பிரிவுகள் "புறச்சித்தாந்தம்" என்று வகைபிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பெருக்கமே "சாக்தம்" எனும் தனிப்பிரிவை உருவாக்கியதா, அல்லது சாக்தமும் சைவமும் ஒன்றாகவே பண்டுதொட்டு இணைந்து வளர்ந்துவந்தனவா என்பது இன்றும் ஆய்வாளர் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்துவருகின்றது. புறச்சித்தாந்தப் பிரிவுகளில் ஒன்றாக இருந்த குலமார்க்கம் அல்லது கௌலம் எனும் சைவ - சாக்தப் பிரிவு, தனிச்சாக்தப்பிரிவாக பின்னாளில் வளர்ந்தது என்பதை பல ஆதாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.[2]

பிரிவுகள்

புறச்சித்தாந்தப் பிரிவுகள், பைரவனுக்கே அதிக முன்னுரிமை அளிப்பன. அதன் வழிபாட்டில் பயன்படும் அனைத்துத் தேவதைகளும் பெரும்பாலும் உக்கிரதேவதைகளே. புறச்சித்தாந்த சைவத்தின் நூல்கள் பொதுவாக "பைரவ தந்திரங்கள்" என்று அறியப்படினும் அவை தாம் உருவாக்கிய கிளைநெறிகளுக்கேற்ப பலவகைப்படுகின்றன. இன்று "காஷ்மீர சைவம்" என்று அறியப்படுவது, பல புறச்சித்தாந்தப் பிரிவுகளின் தொகுதி ஆகும். முக்கியமான புறச்சித்தாந்தப் பிரிவுகளைக் கீழே காணலாம்:

Thumb
வாமமார்க்கத் தெய்வங்கள், தும்புருவும் நான்கு சோதரிகளும், தேவியின் முன்னிலையில்.

வாமம்

ஜயை, விஜயை, அஜிதை, அபராஜிதை ஆகிய நான்கு தேவியரையும் அவர்களின் தமையன் தும்புருவையும் வழிபடும் பிரிவு. விநாசிகம், தேவீதந்த்ர ஸத்பாவசாரம் என்பவை முக்கியமான தந்திரங்கள்.

தட்சிணம்

சுவச்சண்ட பைரவரை வழிபடுவது. அவர் தேவியான அகோரேசுவரியும் முன்னிலைப்படுத்தப்படுவதுண்டு. "ஸ்வச்சண்ட தந்திரம்" என்பது இவர்களுக்குரிய ஆகம நூல்.

யாமளம்

கபாலீச வைரவரும் அகோரேசுவரியும் இவர்களது வழிபடுதெய்வங்கள். சில யாமள நூல்கள், அகோரேசுவரியை, சண்டகபாலினி என்று அழைக்கின்றன. பிரமயாமள தந்திரம்/பிசுமத தந்திரம், பிங்களாமத தந்திரம் முதலானவை இவர்களுக்குரியவை.

நேத்திரம்

"அம்ருதேசவிதானம்" அல்லது "மிருத்யுஜித்" என்று இப்பிரிவினர் தம்மை அழைத்துக்கொள்வதுண்டு. சிவமும் சக்தியும், அமிர்தேசுவரன் - அமிர்தலட்சுமி என்றபெயரில் இவர்களால் போற்றப்படுகின்றனர். பொ.பி 700 - 850 ஆண்டுகளுக்கிடைப்பட்ட "நேத்திர தந்திரம்" என்பது இவர்களது முதனூல்.

Thumb
தட்சிணநெறியின் இறைவன் சுவச்சண்ட வயிரவர்.

திரிகம்

பரை, அபரை, பராபரை எனும் மூன்று தேவியரும் மாத்ருஸத்பவரும் இவர்களது வழிபாட்டுக்குரியோர். இன்றைய காஷ்மீர சைவத்தின் முக்கியமான கிளை. மாலினிவிஜயோத்தரம், சித்தயோகேஸ்வரிமதம், தந்திரசத்பவம் முதலான தந்திரநூல்கள் இவர்க்குரியவை.

குப்ஜிகம்

குப்ஜிகையும் நவாத்ம பைரவரும். குப்ஜிகாமத தந்திரம் எனும் நூல் இவர்க்குரியது. நேபாளத்தின் தெராய் பகுதியில் இன்றும் வழக்கிலிருப்பது.

காளிகுலம்

"காலசங்கர்ஷணி" என்ற பெயரில் காளியைப் போற்றுவது. வங்கப்பகுதியில் பிரசித்தமானது. ஜ்யத்ரதயாமளம்/ சிரச்சேதம்/ தந்த்ரயாமள பட்டாரிகை போன்ற நூல்களும், காளிகுல க்ரமஸத்பாவம் முதலான கிரம நூல்களும் இவரால் போற்றப்படுகின்றன.

ஸ்ரீகுலம்

இலலிதையை வழிபடுவோர்.தென்னகத்தினர். ஸ்ரீவித்தியா வழிபாடும், நித்யஷோடசீகார்ணவம், யோகினீஹ்ருதயம் முதலிய தந்திரங்களைப் போற்றுவதும் இவர் வழக்கம்.

இவற்றில் இறுதி நான்கும், "சிஞ்சினிதந்திரம்" எனும் நூலில் சாக்தக் கிளைநெறிகளாகச் சொல்லப்படுபவை. எனினும், குப்ஜிகநெறியும் திரிகமும் சமகாலத்தில் சைவக்கிளைநெறிகளாகவே கருத்திற்கொள்ளப்படுகின்றன.[3]

பூத காருட தந்திரங்கள்

பேயோட்டுதல், விடமிறக்குதல், இயற்கையைக் கட்டுப்படுத்தல், மழை பொழிவித்தல் முதலான மீமாந்தச் செயல்களுடன் தொடர்பானது. நூல்வடிவில் மட்டும் கிடைப்பன. தந்த்ரசமுச்சயம், க்ரியாகாலகுணோத்தரம் முதலான தந்திரங்கள்.

உசாத்துணைகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.