பிரமோத் குமார் சூல்கா
இந்திய புற்றுநோய் நிபுணர் From Wikipedia, the free encyclopedia
இந்திய புற்றுநோய் நிபுணர் From Wikipedia, the free encyclopedia
பிரமோத் குமார் சூல்கா (Pramod Kumar Julka) என்பவர் ஓர் இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணராவார். மருத்துவ கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகவும் நன்கு அறியப்படுகிறார். இந்தியாவில் அதிதீய மார்பகப் புற்றுநோய்க்கு உயர் அளவு வேதி சிகிச்சையைத் தொடர்ந்து புற இரத்தத் தண்டு உயிரணு மாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலாக மேற்கொண்ட பெருமைக்கு உரியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.[1] மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வித் துறைகளில் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு வழங்கும் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு 2013 ஆம் ஆண்டு வழங்கி கெளரவிக்கப்பட்டது.[2] அமெரிக்கப் புற்றுநோய் மருத்துவ நிறுவனம் இவருக்கு இவ்வமைப்பின் கௌரவ உறுப்பினர் உரிமையை வழங்கி சிறப்பித்துள்ளது.
பிரமோத் குமார் சூல்கா Pramod Kumar Julka | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | புற்று நோய் சிகிச்சை நிபுணர் |
விருதுகள் | பத்மசிறீ முன்னணி விஞ்ஞானி விருது மருத்துவர் பாண்டே சொற்பொழிவு விருது இந்திய மருத்துவ சங்கம் வழங்கிய புற்றுநோய் மருத்துவ விருது பி கே அல்தார் சொற்பொழிவு விருது |
தில்லியைச் சேர்ந்த பிரமோத் குமார் இங்குள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி யில் 1979 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ பட்டமும் கதிரியக்க சிகிச்சையில் முதுநிலை பட்டமும் பெற்றார். [1][3] உலக சுகாதார நிறுவனம் சார்ந்த அமெரிக்காவின் டெக்சாசிலுள்ள எம். டி. ஆண்டர்சன் மருத்துவமனையில் உயர் சிகிச்சைப் பயிற்சியும், பின்னர் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் உள்ள லாங் பீச் நினைவு புற்றுநோய் மையத்திலும் உயர் பயிற்சியும் பெற்றார்.[1] 1984 ஆம் ஆண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் புதுதில்லியில் அந்நிறுவனத்தின் கல்வி தலைவராகவும், கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் துறை பேராசிரியராக 2016 ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார்.[1][3] பின்னர் புற்றுநோய் தினசரி உடல்நல சிகிச்சை மையமான மேக்சு உடல்நலத்துறையின் இயக்குநராக தற்போது பணியாற்றுகிறார். மேலும் மருத்துவ புற்றுநோயியல், கதிர்வீச்சு உயிரியல் மற்றும் வேதிச்சிகிச்சை மருத்துவம் ஆகியவற்றில் விரிவான ஆராய்ச்சிகள் பல செய்துள்ளார்.[1]
புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமும், அத்துறைகளில் பெரிய முன்னேற்றங்களுக்கும் பெருமை சேர்த்த இவர், சமூகத்தின் அனைத்துப் பிரிவு புற்றுநோய் நோயாளிகளுக்கும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி சிகிச்சை அளித்துள்ளார். நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவமனையின் நெரிசலான தாழ்வாரங்களில் கூட நோயாளிகளை வரவேற்று பயங்கரமான இந்த நோய்க்கு பொறுமையாக இவர் சிகிச்சையளித்தார். புற்றுநோயைப் போன்ற ஒரு தீயநோயை இடைவிடாமல் எதிர்த்துப் போராடுவதற்கான சிகிச்சையை அளித்தது இவரது அர்ப்பணிப்பு தொண்டேயாகும்.
சூல்கா கல்வி கற்பித்தலில் மிகுந்த விருப்பம் கொண்டவராக இயங்கினார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றினார். அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றிய காரணத்தால் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புற்றுநோய் மையங்களை ஆய்வு செய்ய இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார்.தேசிய தேர்வு வாரியத்தின் உறுப்பினராக பணியாற்றிய இவர் கதிரியக்க மருத்துவம் தொடர்பான பாடத்திட்ட உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். கதிரியக்க சிகிச்சையின் முனைவர் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு புற்றுநோய் மருத்துவமனைகளில் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிபுணராகவும் சூல்கா பணியாற்றியுள்ளார். புதுதில்லியிலுள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்தின் கல்வி கழகத்தின் உறுப்பினருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பின்பு உருவரைவு மற்றும் கதிரியக்க சிகிச்சை துறைக்கான இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
புற்றுநோய் குறித்து தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் சூல்கா தீவிரமாக பங்கேற்றார். 1980 ஆம் ஆண்டு முதல் தேசிய தூர்தர்சன் அலைவரிசையில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அதன் மேலாண்மை குறித்து தொடர் பேச்சுக்களை சூல்கா நிகழ்த்தினார். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் “பெண்களின் புற்றுநோய்”, “புகைத்தல் மற்றும் புற்றுநோய்”, “கைப்பேசி மற்றும் புற்றுநோய்” போன்ற தலைப்புகளில் பல்வேறு தொலைபேசி-நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொது மக்கள் மற்றும் நோயாளியின் கேள்விகளுக்கு இவர் பதிலளித்துள்ளார். ஓர் உண்மையான மனிதநேயன் என்ற முறையில் இவர் தன்னுடைய சேவையை செய்வதிலும் ஐயங்களை களைவதற்கும் எப்போதும் தயாராகவே இருந்தார். எனவே ஏராளமான ஊடக நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளால் பெரிதும் மதிக்கப்பட்டார். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற பொது ஊடகங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் தேசிய மற்றும் சர்வதேச சக மதிப்பாய்வு பத்திரிகைகளில் சூல்கா சுமார் 250 [4] எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[1][5][6] மேலும் ஆராய்ச்சி பாதை என்ற சமூகவளைதளத்தில் 184 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். [7] வெற்றிகரமான மருத்துவ சோதனை ஆய்வாளர் என்ற பெயரில் ஒரு புத்தகத்தையும் சூல்கா எழுதியுள்ளார்.[8]
இந்தியாவில் முதன்முதலாக 1995 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி அதிதீய மார்பக புற்றுநோயில் உயர் கதிர்வீச்சு சிகிச்சையை தொடர்ந்து புற இரத்த தண்டு உயிரணு மாற்று அறுவை சிகிச்சைக்சையைச் செய்து பெருமை பெற்றார். இச்சாதனை லிம்கா உலக சாதனைப் பட்டியலில்1998 ஆம் ஆண்டு இடம்பெற்றது.[1][9] ஒரு புற்றுநோயியல் நிபுணராக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சங்கங்களின் இந்திய கூட்டமைப்பு சூல்காவை அழைத்து சிறப்பித்தது.[1] நாடு முழுவதும் புற்றுநோய் ஆராய்ச்சி திட்டங்களை அமைப்பதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவில் உறுப்பினராக சூல்கா இருந்தார். மேலும் 1996 முதல் ஐ.சி.எம்.ஆர் திட்ட மறுஆய்வுக் குழுவில் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணராகவும் பொறுப்பேற்றார்.[1] புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம்[10] மற்றும் உலகளாவிய புற்றுநோய் உச்சிமாநாட்டு தேசிய ஆலோசனைக் குழுவின் 2015[11] ஆம் ஆண்டுக்கான உறுப்பினராக இருந்தார். இந்திய கதிர்வீச்சு புற்றுநோயியல் சங்கத்தின் முன்னாள் தலைவர் [1] இந்திய கதிர்வீச்சு புற்றுநோயியல் கல்லூரியின் 2000-2009 ஆம் ஆண்டு தலைவர் போன்ற பல பொறுப்புகளில் மருத்துவர் சூல்கா இருந்தார்.[1]
பிரமோத் குமார் சூல்கா பல விருதுகளையும் கௌரவங்களையும் வென்றுள்ளார். இந்திய அரசு வழங்கும் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை 2013 ஆம் ஆண்டில் வென்றார்.[2]
" புற்றுநோயாளிகளில் சுமார் 70% நோயாளிகள் நோயின் மூன்று அல்லது நான்கு நிலையில்தான் மருத்துவமனைகளை நாடுகின்றனர். 30% நோயாளிகள் மட்டுமே ஒன்று அல்லது இரண்டாவது நிலைகளில் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
குணப்படுத்தும் விகிதம் இதனால் வெளிப்படையாகவே பாதிக்கப்படுகிறது. எங்களுடைய புற்றுநோய் மையத்திற்கு, ஒவ்வோர் ஆண்டும் 15,000 புதிய புற்றுநோய்களிகள் வருகின்றனர்.[13] -பிரமோத் குமார் சூல்கா
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.