From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Tropicalcyclone கண் என்பது பலமான வெப்ப மண்டல சூறாவளிகளின் மையத்தில் காணப்படும் பெரும்பாலும் அமைதியான வானிலையுள்ள பகுதியாகும். ஒரு புயலின் கண் அநேகமாக வட்டமான பகுதியாகவும் பொதுவாக 30–65 கி.மீ விட்டம் கொண்டதாகவும் இருக்கும். இதைச் சுற்றிலும் கண் சுவர் சூழ்ந்திருக்கும். கண் சுவர் என்பது சூறாவளியின் மிகவும் கடுமையான வானிலை நிலவுகின்ற, கடும் இடியுடன் கூடிய புயல்களின் ஒர் வளையப் பகுதியாகும். கண் பகுதியிலேயே சூறாவளியின் மிகக்குறைந்த பாரமானி அழுத்தம் நிலவும். மேலும், இது புயலுக்கு வெளியேயுள்ள வளிமண்டல அழுத்தத்தைவிட கிட்டத்தட்ட 15 சதவீதமளவுக்குக் குறைவாகவும் இருக்கலாம்.[1]
பலத்த வெப்ப மண்டல சூறாவளிகளில், கண் பகுதியில் மெதுவான காற்றும் தெளிவான வானமும் காணப்படும், மேலும் அனைத்துப் பக்கங்களிலும் இடி மின்னலுடன் கூடிய சமச்சீரான கண்சுவரால் சூழப்பட்டிருக்கும் என விவரிக்கப்படுகிறது. பலம் குறைந்த வெப்ப மண்டல சூறாவளிகளில், கண் பகுதியைத் தெளிவாக வரையறுக்க முடியாது. மேலும், மத்திய அடர் மேகப்பகுதியால் கண் பகுதி மூடப்பட்டிருக்கலாம். இந்த மத்திய அடர் மேகப் பகுதியே, செயற்கைக்கோள் புகைப்படத்தில் பிரகாசமாகத் தெரிகின்ற, தடிமனான மேகங்கள் கொண்ட பகுதியாகும். பலம் குறைந்த அல்லது சீரற்ற புயல்களிலும் கண் சுவர் காணப்படும், ஆனால் இது கண் பகுதியை முழுவதுமாக சுற்றி அமைந்திருக்காது, அல்லது கடும் மழை பொழியும் கண் பகுதியைக் கொண்டிருக்கும். எனினும், அனைத்து புயல்களிலும், கண் பகுதியே புயலின் பாரமானி அழுத்தம் குறைந்தபட்சமாக இருக்கும் இடமாகும், அதாவது கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கின்ற பகுதி.[1][2]
பொதுவாக ஒரு வெப்ப மண்டல சூறாவளி தோராயமாக 30-65 கி.மீ குறுக்களவுள்ள கண் பகுதியைக் கொண்டிருக்கும். வழக்கமாக கண் பகுதியானது புயலின் வடிவியல் மையத்தில் அமைந்திருக்கும். கண் பகுதி தெளிவாக இருக்கலாம் அல்லது பல புள்ளிகள் கொண்ட தாழ்ந்த மேகங்களைக் (தெளிவான கண் பகுதி) கொண்டிருக்கலாம். இதில் தாழ்ந்த-மற்றும் நடுமட்ட மேகங்கள் (நிரம்பிய கண் பகுதி ) நிறைந்திருக்கலாம் அல்லது மத்திய அடர் மேகங்கள் சூழ்ந்த பகுதிகளால் தெளிவாகப் புலப்படாமல் இருக்கலாம். எனினும் இங்கு குறிப்பாக மையத்துக்கு அருகில், மிகக் குறைந்த காற்றும் மழையும் காணப்படும். இது புயலின் மிகப் பலத்த காற்றைக் கொண்டுள்ள கண் சுவரின் இயல்புக்கு மிகவும் மாறானதாகும்.[3] வெப்ப மண்டல சூறாவளியின் இயக்கவியலின் காரணமாக, கண் பகுதியும் அதற்கு நேர் மேலேயுள்ள காற்றும் அவற்றின் சுற்றுச்சூழலைவிட வெப்பமாக உள்ளன.[4]
வழக்கமாக கண் பகுதிகள் பெரும்பாலும் சமச்சீரான வடிவத்தில் இருக்கின்றன என்றாலும் சிலவேளைகளில் குறிப்பாக பலவீனமான புயல்களில், இது நீள் சதுரமாகவும் ஒழுங்கற்ற வடிவத்திலும் இருக்கலாம். பெரிய கிழிந்த கண் பகுதிகள் எனப்படுபவை வட்டவடிவமற்ற கண் பகுதிகளாகும். துண்டு துண்டாகக் காணப்படும் இவை, ஒரு பலவீனமான அல்லது பலவீனமாகின்ற வெப்ப மண்டல சூறாவளியின் அடையாளங்களாகும். திறந்த கண் பகுதியானது வட்டமாக இருக்கலாம், ஆனால் கண் சுவரானது கண் பகுதியை முழுவதுமாகச் சூழ்ந்திருக்காது. அத்தோடு, இது பலவீனமாகின்ற, ஈரப்பதன் இழந்த சூறாவளியைச் சுட்டிக்காட்டுகிறது. வெப்ப மண்டல சூறாவளிகளின் தீவிரத்தை டிவோரக் பகுப்பாய்வு (Dvorak analysis) முறையில் மதிப்பிட இந்த இரு பண்புகளும் பயன்படுகின்றன.[5] கண் சுவர்கள் பொதுவாக வட்ட வடிவமானவை. எனினும், அவ்வப்போது இவை முக்கோணம் முதல் அறுகோணங்கள் வரையில் வேறுபடுகின்ற தெளிவான பல்கோண வடிவங்களிலும் இருக்கலாம்.[6]
வழக்கமான முதிர்ந்த புயல்களில் கண் பகுதிகள் சில டசன் மைல்கள் குறுக்களவில் காணப்படுகின்றன, ஆனால் துரிதமாக கடுமையாகின்ற புயல்கள் மிகவும் சிறிய, தெளிவான மற்றும் வட்ட வடிவத்திலான கண் பகுதியை உருவாக்கலாம். இந்தக் கண் பகுதியை சில வேளைகளில் குண்டூசித் துளைக் கண் பகுதி என அழைக்கின்றனர். குண்டூசித் துளைக் கண் பகுதிகளுடனான புயல்களின் தீவிரம் பெரியளவிலான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகக் கூடியவை. ஆகவே இவை வானிலை ஆய்வாளர்களுக்கு வானிலையை முன்கணிப்பதில் சிரமங்களையும் விரக்தியையும் கொடுக்கின்றன.[7]
குறுக்களவில் 10 கடல் மைல் அளவை விடக் குறைந்த அளவைக் கொண்ட சிறிய கண் பகுதிகள், அவ்வப்போது கண் சுவர் இடமாற்ற தொடர்நிகழ்வுகள் (உண்மையான கண் சுவருக்கு வெளியே ஒரு புதிய கண்சுவர் உருவாகும் நிகழ்வு) உருவாகச் செய்கின்றன. உட்புற கண் பகுதிக்கு வெளியே பத்து முதல் ஒரு சில நூறு மைல்கள் வரையிலான தொலைவில் இவை உருவாகலாம். அப்போது புயலில் இரண்டு ஒரே மையமுள்ள கண் சுவர்கள் காணப்படும் அல்லது ஒரு "ஒரு கண்ணுக்குள் இன்னொரு கண்" இருப்பது போன்ற வடிவத்தை உருவாக்கும். அநேக சந்தர்ப்பங்களில், வெளிப்புற கண் சுவரானது உருவாகிய சிறிது நேரத்தில் சுருங்கத் தொடங்கும். இதனால் உட்புறக் கண் பகுதியை அழுத்தப்பட்டு மிகவும் பெரிய, அதே நேரத்தில் கூடுதல் நிலைத்தன்மையுடைய கண் பகுதி உருவாகும். இடமாற்ற தொடர்நிகழ்வுகள் ஏற்படும் போது புயல் பலவீனமடைந்தாலும் பழைய கண் சுவர் கலந்து மறைந்த பின்னர், புதிய கண் சுவரானது மிகவும் விரைவாக சுருங்குவதால் புயல் மீண்டும் பலமடைகிறது. இது கண் மற்றொரு சுவர் இடமாற்ற தொடர்நிகழ்வைத் தூண்டலாம்.[8]
கண் பகுதிகளின் குறுக்களவு 320 கி.மீ (கார்மன் சூறாவளி) முதல் குறைந்த அளவான 3 கி.மீ (வில்மா புயல்) வரை வரை வேறுபடலாம்.[9] பெரிய கண் பகுதிகளைக் கொண்ட புயல்கள் மிகவும் கடுமையாக மாறுவது அரிது எனினும், குறிப்பாக வளைய வடிவான புயல்களில் இவ்வாறு கடுமையாக மாறும் நிகழ்வு காணப்படுகிறது. இதுவரை பதிவாகியுள்ள வரலாற்றில், இசபெல் புயல் என்பதே பதினோராவது மிகவும் சக்திவாய்ந்த அட்லாந்திக் புயல் ஆகும். இதில் பெரிய, 56-80 கி.மீ அகலம் கொண்ட கண் பகுதி பல நாட்களுக்கு நீடித்திருந்தது.[10]
பொதுவாக வெப்ப மண்டல சூறாவளிகள், வெப்ப மண்டலப் பிரதேசங்களில் பரவலான வானிலையின் பெரிய சீரற்ற பகுதிகளிலிருந்து உருவாகின்றன. மேலும் மேலும் இடியுடன் கூடிய புயல்கள் உருவாகி ஒன்றுசேர்வதால், புயலானது மழைப்பட்டிப் பகுதிகளை உருவாக்குகிறது. இவை பொதுவான ஒரு மையத்தைச் சுற்றி வட்டமிட ஆரம்பிக்கின்றன. புயலானது பலமடைய அடைய, உருவாகிவரும் புயலின் சுழற்சி மையத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தூரத்தில் பலமான வெப்பச்சலன வளையம் உருவாகிறது. பலமான இடியுடன் கூடிய புயல்களும் கடுமையான மழையும் பலத்த காற்றின் மேல் நோக்கிய வீச்சுகளுள்ள பகுதிகளை உணர்த்துகின்றன, இதனால் மேற்பரப்பிலுள்ள பாரமானி அழுத்தம் குறையத் தொடங்கி, சூறாவளியின் மேல் மட்டங்களில் காற்று சேரத் தொடங்குகிறது.[11] இதனால் உயர் பகுதியில் எதிர்ச்சூறாவளி உருவாகிறது அல்லது மத்திய அடர் மேகப் பகுதிக்கு மேலே உயர் வளிமண்டல அழுத்தப் பகுதி உருவாகிறது. இதன் விளைவாக இவ்வாறு சேர்ந்த காற்றின் பெரும்பகுதியானது வெப்ப மண்டல சூறாவளிக்கு மேலாக எதிர்ச்சூறாவளியாக வெளிநோக்கி வீசுகிறது. இதனால், உருவாகிக்கொண்டிருக்கின்ற கண் பகுதிக்கு வெளியே, வளிமண்டலத்தின் மேல் மட்டங்களிலுள்ள எதிர்ச்சூறாவளியானது, கண் சுவரை நோக்கி காற்றைத் தள்ளுவதன் மூலம் சூறாவளியின் மையத்தை நோக்கிய காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நேர்மறைப் பின்னூட்ட தொடர்நிகழ்வு உருவாகிறது.[11]
எனினும், மேல் மட்டத்தில் சேர்ந்த காற்றின் சிறு பகுதியானது வெளிநோக்கி வீசாமல் உள்நோக்கி, புயலின் மையத்தை நோக்கி வீசுகிறது. இதனால் காற்று அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தில் புயலின் மையத்தில், காற்றின் எடையானது காற்றின் மேல் நோக்கிய வீச்சுகளின் பலத்தை எதிர்த்து இயங்குகிறது. புயலின் மையத்தில் காற்று கீழி நோக்கி வீசத் தொடங்கும், இதனால் அநேகமாக மழை இல்லாத பகுதி உருவாகிறது, இதுவே புதிதாக உருவாக்கப்பட்ட கண் பகுதியாகும்.[11]
இந்த செயற்பாட்டின் பல அம்சங்கள் இப்போதும் புதிராக உள்ளன. வெப்பச்சலன வளையமானது சுற்றோட்டத்தின் மேற்புறத்தில் உருவாகாமல் ஏன் அதன் மையத்தில் உருவாகிறது, அல்லது மேல் மட்ட எதிர்ச்சூறாவளியானது புயலின் மேலாகவுள்ள மேலதிக காற்றின் ஒரு பகுதியை மட்டும் ஏன் வெளியேற்றுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விஞ்ஞானிகளுக்கு விடை தெரியவில்லை. கண் பகுதி உருவாகின்ற துல்லியாம செயற்பாட்டை விவரிக்கும் பல கோட்பாடுகள் உள்ளன: இவை எல்லாவற்றிலிருந்தும் உறுதியாகத் தெரியும் தகவல் என்னவென்றால், வெப்ப மண்டல சூறாவளிகள் உயர் காற்று வேகங்களை அடைவதற்கு கண் பகுதி அவசியம் என்பதே ஆகும்.[11]
கண் பகுதி உருவாவதென்பது அநேகமாக எப்பொழுதும், வெப்ப மண்டல சூறாவளியின் சீர்தன்மையும் பலமும் அதிகரிப்பதன் அடையாளமாகும். இதன் காரணமாக, வானிலை ஆய்வாளர்கள் புயல்களில் கண் பகுதி உருவாகும் அறிகுறிகள் உள்ளனவா என்று மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.
தெளிவான கண் பகுதி உள்ள புயல்களில் கண் பகுதியைக் கண்டுபிடிப்பது என்பது வானிலை செயற்கைக்கோளிலிருந்து கிடைக்கும் படங்களைப் பார்ப்பது போல மிக எளிதாகும். எனினும், நிரம்பிய கண் பகுதி அல்லது மத்திய அடர் மேகம் சூழ்ந்த பகுதியால் முழுவதும் மறைக்கப்பட்ட கண் பகுதியைக் கொண்ட புயல்களின் கண் பகுதியைக் கண்டுபிடிக்க பிற முறைகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. கப்பல்களிலிருந்து கவனிக்கும் போது அல்லது ஹரிக்கேன் ஹண்டர்ஸ் (Hurricane Hunters) எனப்படும் சூறாவளி ஆய்வுக் கலங்களிலிருந்து கவனிக்கும் போது, காற்றின் வேகம் குறைவதைக் கொண்டோ அல்லது புயலின் மையத்தில் மழை வீழ்ச்சி இல்லாததைக் கொண்டோ ஒரு கண் பகுதி இருப்பதைக் காட்சி வடிவில் கண்டுபிடிக்க முடியும். அமெரிக்க ஒன்றியம், தென்கொரியா மற்றும் பிற சில நாடுகளில் NEXRAD டாப்ளர் வானிலை ராடர் நிலையங்களின் வலையமைப்பானது கடற்கரைக்கு அண்மையிலுள்ள கண் பகுதிகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. வானிலை செயற்கைக்கோள்களிலும் வளிமண்டல நீராவி மற்றும் மேக வெப்பநிலைகள் ஆகியவற்றை அளப்பதற்கான கருவிகள் உள்ளன. இந்த அளவீடுகளைப் பயன்படுத்தி கண் பகுதி உருவாகுவதைக் கண்டுபிடிக்கலாம். மேலும், ஓசோன் அதிகமாகவுள்ள அடுக்குமண்டலத்திலிருந்து (ஸ்டிரேட்டோஸ்பியர்) காற்று வீழ்வதால், கண் பகுதியிலுள்ள ஓசோன் அளவு கண் சுவரிலுள்ள ஓசோன் அளவைவிட மிகவும் அதிகமாக உள்ளது என விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். ஓசோன் உணர்திறன் மிக்க கருவிகள் காற்றின் உயர்ச்சி மற்றும் வீழ்ச்சி நிரல்களை அளக்கப் பயன்படும் ஓசோன் அளவீடுகளை எடுக்கின்றன. மேலும், இந்த அளவீடுகளைக் கொண்டு கண் பகுதி உருவாவதை செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தீர்மானிக்கும் முன்பே கூட கண்டுபிடிக்க முடியும்.[12]
கண் சுவர் இடமாற்ற தொடர் நிகழ்வுகள், ஒரே மையமுள்ள கண்சுவர் வட்டங்கள் என்றும் அழைக்கப்படும். இவை பொதுவாக 185 கி.மீ/ம என்ற அளவுக்கும் அதிகமான வேகத்திலான காற்று வீசுகின்ற கடுமையான வெப்ப மண்டல சூறாவளிகளிலோ அல்லது பெரிய புயல்களிலோ (வகை 3 அல்லது அதற்கும் அதிகமானது) உருவாகின்றன. வெப்ப மண்டல சூறாவளிகள் இந்தத் தீவிரத்தை அடையும்போது மற்றும் கண்சுவர் சுருங்கும்போது அல்லது போதியளவுக்கு இது ஏற்கனவே சிறிதாக இருக்கும்போது ({0}மேலே{/0} பார்க்கவும்), வெளிப்புற மழைப்பட்டிப் பகுதிகள் சில பலப்பட்டு, இடியுடன் கூடிய புயல்களின் வளையமாக உருவாகலாம், அதாவது இந்த வளையம் என்பது வெளிப்புற கண் சுவராகும். இது மெதுவாக உள்நோக்கி நகர்ந்து, இதற்குத் தேவைப்படும் ஈரப்பதன் மற்றும் கோண உந்தம் ஆகியவற்றைக் கொண்டுள்ள உட்புறக் கண் சுவரை விழுங்கிக்கொள்கிறது. சூறாவளியின் கண் சுவரிலே பலமான காற்று வீச்சு உள்ளதால், உட்புறச் சுவர் வெளிப்புறச் சுவரினால் "தடைப்படுத்தப்படும்" இந்தக் கட்டத்தின்போது வெப்ப மண்டல சூறாவளியானது பலவீனமாகிறது. இறுதியாக உட்புறச் சுவரை வெளிப்புறக் கண் சுவர் முழுவதுமாக இடமாற்றுகிறது. எனவே புயல் மீண்டும் தீவிரமடைய முடிகிறது.
இந்தச் செயற்பாட்டின் கண்டுபிடிப்பானது அமெரிக்க ஒன்றிய அரசாங்கத்தின் புராஜெக்ட் ஸ்டோர்ம்ஃபரி என்ற புயலைச் சரிசெய்யும் பரிசோதனையின் முடிவுக்கு ஒரு பகுதி காரணமாகியது. இந்தத் திட்டத்தில் கண் சுவருக்கு வெளியே மேகங்களைத் தோன்றச்செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டது. இதனால் புதிய கண் சுவர் ஒன்று உருவாகி புயல் பலவீனமாகிறது. இது புயலின் இயக்கவியல் காரணமாக நிகழுகின்ற ஒரு இயற்கையான செயற்பாடு என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட்டது.[8]
பெரும்பாலும் கடுமையான புயல்கள் அனைத்துமே, அவை நீடித்திருக்கின்ற காலக்கட்டத்தில் ஒரு முறையேனும் இந்த தொடர்நிகழ்வை உண்டாக்கும். 1980 ஆம் ஆண்டில் வந்த ஆலென் புயல் சாஃபீர்-சிம்ப்ஸன் அளவுகோலில் வகை 5 க்கும் வகை 3 க்கும் இடைப்பட்ட நிலையில் வெவ்வேறு அளவுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்த கண் சுவர் இடமாற்ற தொடர் நிகழ்வுகளை உருவாக்கியது. ஜூலியட் புயலின் போதே, மும்மடி கண் சுவர்கள் உருவாகும் அரிய நிகழ்வு ஏற்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[13]
ஒரு வெப்ப மண்டல சூறாவளியிலுள்ள அகழி என்பது கண் சுவருக்கு வெளியேயுள்ள அல்லது ஒரே மையமுள்ள கண் சுவர்களுக்கு இடைப்பட்ட தெளிவான வளையம் ஆகும். மெதுவாக வீழ்ச்சியுறும் காற்று, சிறிதளவு வீழ்ப்படிவு (காற்றின் நீராவியின் சுருங்கிய வடிவம் கீழ் நோக்கி வீழ்வது, எ-கா: மழை, பனி, கல்மழை போன்றவை) அல்லது வீழ்ப்படிவு இல்லாமை மற்றும் திரிபின் ஆதிக்கமுள்ள பாய்வு ஆகியவை அகழிகளின் சிறப்பு இயல்புகளாக விவரிக்கப்படுகின்றன.[14] கண் சுவர்களுக்கு இடையிலான அகழி என்பது ஒரு துரித இழையாக்கப் (filamentation) பகுதிக்கான எடுத்துக்காட்டாகும். அல்லது புயலில், காற்றின் சுழற்சி வேகமானது புயலின் மையத்திலிருந்து அதன் தொலைவுக்கு நேர்விகிதத்தில் பெரிதும் மாறுகின்ற ஒரு பகுதிக்கான எடுத்துக்காட்டாகும். இதுபோன்ற திரிபின் ஆதிக்கமுள்ள பகுதிகள் போதுமான வலிமை கொண்ட பாய்மச்சுழலுக்கு அருகில் காணப்பட வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலானவை பலத்த வெப்ப மண்டல சூறாவளிகளிலேயே காணப்படுகின்றன.
கண் சுவர் இடை பாய்மச்சுழல்கள் என்பவை சிறிய அளவிலான சுழற்சிமுறை அம்சங்கள் ஆகும். இவை கடுமையான வெப்ப மண்டல சூறாவளிகளின் கண் சுவர்களில் காணப்படும். கோட்பாட்டளவில் இவை, பெரும்பாலும் பல பாய்மச்சுழல் கொண்ட குழல் காற்றுகளில் காணப்படும் "உறிஞ்சல் பாய்மச்சுழல்களை" (சக்ஷன் வோர்ட்டிசஸ்) ஒத்தவை ஆகும். இந்த பாய்மச்சுழல்களில், காற்று வேகமானது கண் சுவரின் மற்ற பகுதிகளை விட 10% வரை அதிகமாகக் காணப்படலாம். வெப்ப மண்டல சூறாவளிகளில் வலுவடையும் காலப்பகுதிகளில் கண் சுவர் இடை பாய்மச்சுழல்கள் உருவாவது பொதுவான ஒன்றாகும்.
கண் சுவர் இடை பாய்மச்சுழல்கள், வெப்ப மண்டல சூறாவளிகளில் அவ்வப்போது வழக்கத்துக்கு மாறான இயல்புகளைக் கொண்டிருக்கும். அவை வழக்கமாக தாழ் அழுத்த மையத்தைச் சுற்றி சுழலும். ஆனால் சில வேளைகளில் அவை அசையாமல் நிலைத்திருக்கும். கண் சுவர் இடை பாய்மச்சுழல்கள் புயலின் கண் பகுதியைக் கடப்பதாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் அவதானிப்பாகவும் [15] பரிசோதனை ரீதியாகவும்[16] கோட்பாடு ரீதியாகவும்[17] ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
வெப்ப மண்டல சூறாவளி கரைகடந்த பின்னர், குழல் காற்றுகள் உருவாக்கத்தில் கண் சுவர் இடை பாய்மச்சுழல்கள் முக்கியமான காரணிகளாகும். இடை பாய்மச்சுழல்கள், தனித்த இடியுடன் கூடிய புயல்களில் சுழற்சியை உற்பத்தி செய்யக்கூடியவை (இடை சூறாவளி) இந்த சுழற்சி குழல் காற்று ஏற்பட வழிவகுக்கும். சூறாவளி கரை கடந்த பின்னர், வெப்ப மண்டல சூறாவளிச் சுற்றோட்டத்துக்கும் நிலத்துக்கும் இடையே உராய்வு ஏற்படுகின்றது. இதனால் இடை பாய்மச்சுழல்கள் தரையின் மேற்பரப்பு நோக்கி இறங்குகின்றன, இதன் விளைவாக பெரிய குழல் காற்றுகள் உருவாகின்றன.
அரங்க விளைவு என்பது பலத்த வெப்ப மண்டல சூறாவளிகளில் காணப்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இது பெரும்பாலும் ஒரு பொதுவான நிகழ்வாகும். இந்நிகழ்வின் போது கண் சுவரின் மேகங்கள் உயரத்துடன் மேற்பரப்பிலிருந்து வெளிநோக்கி வளைகின்றன. இது கண் பகுதிக்கு விளையாட்டு அரங்கத்தை ஒத்த, வானிலிருந்து திறந்த குவிமாடம் போன்ற ஒரு தோற்றத்தை வழங்கும். கண் பகுதியானது எப்போதும் புயலின் மேற்பகுதியில் பெரிதாகவும், புயலின் அடியில் மிகச்சிறிதாகவும் இருக்கும். ஏனெனில் கண் சுவரில் எழுகின்ற காற்று சமமான கோண உந்தத்தின் ஒரே பெறுமதிக்கோடுகளைப் பின்பற்றும். இது உயரத்துடன் வெளிநோக்கிச் சாயும் பண்பையும் கொண்டுள்ளது.[19][20][21] சாய்கின்ற நிகழ்வானது மிகச் சிறிய கண் பகுதிகளுடைய வெப்ப மண்டல சூறாவளிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது, இதில் இந்த சாய்வு நிகழ்வானது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பலமடைகின்ற வெப்ப மண்டல சூறாவளிகளில் கண் போன்ற அமைப்பு பெரும்பாலும் காணப்படுகிறது. இதுவும் புயல்களில் அல்லது சூறாவளிகளில் காணப்படும் கண் பகுதியைப் போலவே, புயலின் சுற்றோட்ட மையத்திலுள்ள வெப்பச்சலனம் இல்லாத வட்டமான பகுதியாகும். இந்த கண்-போன்ற அமைப்புகள் பலமடைகின்ற வெப்ப மண்டல புயல்கள் மற்றும் சாசாஃபீர்-சிம்ப்சன் அளவுகோலில் வகை 1 என்ற வலிமை வகையினைச் சேர்ந்த புயல்கள் ஆகியவற்றில் பொதுவாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அதிகபட்ச காற்று வேகங்கள் 50 மீ/ம என்ற அளவுகளில் இருந்த பீட்டா புயலில் இந்த கண்-போன்ற அமைப்பு காணப்பட்டது.[22] இந்த கண்-போன்ற அமைப்புகளை கண்ணுக்கு புலப்படக்கூடிய அலைநீளங்கள் அல்லது புற ஊதா அலைநீளங்கள் ஆகியவற்றினால் விண்வெளியிலிருந்து காண முடியாது. எனினும் அவற்றை நுண்ணலை செயற்கைக்கோள் புகைப்படத்தில் எளிதாகப் பார்க்கலாம்.[23] வளிமண்டலத்தின் மத்திய மட்டங்களில் இந்த அமைப்பின் உருவாக்கமானது முழுமையான கண் பகுதியின் உருவாக்கத்தை ஒத்ததாக உள்ளது. ஆனால் இதன் இருப்பிடம் செங்குத்தான காற்று வெட்டுக் காரணமாக கிடைநிலையில் இடம்பெயர்க்கப்பட்டிருக்கலாம்.[24][25]
கண் பகுதியானது மையத்தில் காற்று இல்லாமல், புயலின் மிகவும் அமைதியான பகுதியாகவும், பொதுவாக தெளிவான வானத் தோற்றத்துடனும் காணப்பட்டாலும், கடலில் இதுவே அதிகளவின் தீங்கான பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது. கண் சுவரில், காற்றால் இயக்கப்படும் அலைகள் ஒரே திசையில் பயணிக்கின்றன, எனினும் கண் பகுதியின் மையத்தில், அனைத்து திசைகளில் இருந்துவரும் அலைகளும் ஒருங்கிணைந்து ஒன்றின் மீது ஒன்று பொருந்தி ஒழுங்கற்ற அலை முகடுகளை உருவாக்குகின்றன. இதன் விளைவாக முரட்டு அலைகள் உருவாகின்றன. புயல் அலைகளின் அதிகபட்ச உயரம் அறியப்படவில்லை. ஆனால் வகை நான்கு புயலான ஐவான் புயல் இருந்தபோது எடுக்கப்பட்ட அதன் அளவீடுகளிலிருந்து, கண் சுவருக்கு அருகிலான அலைகளின் முகடிலிருந்து (உச்சி) அகடு (தாழ் மட்டம்) வரையிலான உயரம் 40 மீட்டருக்கும் அதிகம் என மதிப்பிட்டது.[26]
மக்கள், குறிப்பாக புயல்கள் ஏற்படுவது அரிதான பகுதிகளிலுள்ளவர்கள் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், கண் பகுதியானது அப்பகுதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, புயல் ஓய்ந்துவிட்டதாக தவறாக நினைத்துக்கொண்டு, சேதங்களைப் பார்வையிடுவதற்காக வெளியில் திரிவதாகும். பின்னர் எதிரான கண் சுவரிலான உக்கிரமான காற்றைக் கண்டு பயத்துடன் வியப்படைவார்கள். கண் பகுதி கடந்துகொண்டிருக்கும் நிலையில், வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்குமாறு தேசிய வானிலை சேவை கடுமையாக எச்சரிக்கிறது.[27]
அதிகாரபூர்வமாக "கண் பகுதிகள்" என அழைக்கப்படுகின்ற அமைப்புகள் வெப்ப மண்டல சூறாவளிகளில் மட்டுமே உள்ளன என்றபோதிலும்,[1][28] பிற புயல்களும் கண் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன:
துருவ மண்டல தாழ்வழுத்தப் பகுதிகள் என்பவை, துருவங்களுக்கு அருகில் காணப்படுகின்ற நடுத்தர அளவு (பொதுவாக 1,000 கி.மீ அல்லது 600 மைல்கள் (970 km) குறுக்களவுக்கும் குறைவான அளவுடையவை) வானிலை அமைப்புகளாகும். வெப்ப மண்டல சூறாவளிகள் போலவே இவை, ஒப்பீட்டளவில் இள வெப்பமான நீருக்கு மேலே உருவாகும், ஆழமான வெப்பச்சலனத்தையும் (இடியுடன் கூடிய புயல்கள்) கடுங்காற்றையும் (51 கி.மீ/ம, 32 மை/ம அல்லது அதிகமான) கொண்டிருக்கலாம். இருப்பினும், வெப்ப மண்டல இயல்பான புயல்களைப் போலன்றி, இவை மிகுந்த குளிரான வெப்பநிலைகளிலும், மிகவும் உயரமான அட்சரேகைப் பகுதிகளிலும் உற்பத்தியாகி வளர்கின்றன. மேலும் இவை சிறியவையாகவும் குறைந்த காலமே (சில ஒரு நாளைவிட அதிகமாக அல்லது ஒரு நாளே நீடிக்கும்) நீடித்தும் இருக்கும். இந்த வேறுபாடுகள் இருந்தும், இவை கண் சுவர் மற்றும் மழை/உறைபனி பட்டிப் பகுதிகளால் சூழப்பட்ட தெளிவான கண் பகுதியைக் கொண்டு, அமைப்பில் வெப்ப மண்டல சூறாவளிகளை மிகவும் ஒத்ததாக இருக்கலாம்.[29]
மிதவெப்ப மண்டல புயல்கள் தாழ் அழுத்தமுடைய பகுதிகளாகும். இவை வேறுபட்ட காற்றுப் பகுதிகளின் எல்லையில் காணப்படுகின்றன. கிளாசிக் வட அமெரிக்க நாரீஸ்டர்கள் மற்றும் ஐரோப்பியன் புயல்காற்றுகள் உள்ளிட்ட, இடை-அட்சரேகைப் பகுதிகளில் காணப்படுகின்ற அனைத்து புயல்களும் பெரும்பாலும் இயல்பில் மிதவெப்ப மண்டல புயல்களே. இவற்றில் மிகவும் தீவிரமானவற்றில் மிகக்குறைந்த பாரமானி அழுத்தப் பகுதியில் ஒரு தெளிவான "கண் பகுதி" இருக்கலாம். இருப்பினும் வழக்கமாக இவற்றின் கண் பகுதியானது தாழ்வான, வெப்பச்சலனமற்ற மேகங்களால் சூழப்பட்டிருக்கும். மேலும், கண் பகுதியானது புயலின் பின்பகுதி எல்லையின் அருகில் காணப்படும்.[30]
துணைவெப்ப மண்டல புயல்கள் என்பவை, சில மிதவெப்ப மண்டல இயல்புகளையும் சில வெப்ப மண்டல இயல்புகளையும் கொண்டுள்ள சூறாவளிகளாகும். எடுத்துக்காட்டாக, அவற்றில் கண் பகுதி இருக்கலாம். ஆனால் அவை உண்மையான வெப்ப மண்டல புயல்கள் அல்ல. அதிக காற்று மற்றும் கடல் அலைகளைக் கொண்டுள்ள துணைவெப்ப மண்டல புயல்கள் மிகுந்த தீங்கானவையான இருக்கலாம். மேலும் இவை பெரும்பாலும் உண்மையான வெப்ப மண்டல புயல்களாக மாறக்கூடும். ஆகவே 2002 ஆம் ஆண்டில் தேசிய புயல் மையம் தனது பெயரிடும் முறையில் துணைவெப்ப மண்டல புயல்களையும் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியது.[31]
குழல் காற்றுகள் அழிவுண்டாக்கக்கூடிய, சிறியளவு புயல்கள் ஆகும். இவை பூமியில் மிகவேகமான காற்றுகளை உருவாக்கும். இதில், சுழற்சியுறுகின்ற ஒரே காற்று நிரலைக் கொண்டுள்ள ஒற்றை-பாய்மச்சுழல் குழல் காற்றுகள் மற்றும் சிறிய உறிஞ்சல் இடை பாய்மச்சுழல்களைக் கொண்டுள்ள பல பாய்மச்சுழல் குழல் காற்றுகள் என இரு பிரதான வகைகள் உள்ளன. பல பாய்மச்சுழல் குழல் காற்றுகளில் உள்ள உறிஞ்சல் இடை பாய்மச்சுழல்கள் தாமே சிறிய குழல் காற்றுகளை ஒத்திருக்கும், அவை அனைத்தும் ஒரு பொது மையத்தைச் சுற்றிச் சுழலும். இந்த இரு வகை குழல் காற்றுகளும் நடுப் பகுதியில் அமைதியான மையங்களைக் கொண்டுள்ளன என கோட்பாடுகள் உள்ளன, அவற்றை சில வானிலை ஆய்வாளர்களால் "கண் பகுதிகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தக் கோட்பாடுகளுக்கு வானிலை ராடர்கள்[32] எடுத்துள்ள டாப்ளர் திசைவேக அளவீடுகளும் கண்களால் பார்த்தவர்கள் வழங்கிய தகவல்களும் இந்தக் கோட்பாட்டுக்கு ஆதரவாக உள்ளன .[33]
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சனிக் கிரகத்தின் தென் துருவத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்ட கண் சுவரைக் கொண்டிருந்த ஒரு 'புயலை-ஒத்த சூறாவளியானது அமைந்திருந்ததாக காஸினி விண்வெளிக்கலம் கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்தது. இந்தக் கண்டுபிடிப்பு சிறப்பாகக் குறிப்பிடக்கூடியதாகும், ஏனெனில், புவியைத் தவிர வேறு எந்தவொரு கிரகத்திலும் கண் சுவர் மேகங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதில்லை (கலீலியோ விண்கலம், வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட பெரும் சிவப்புப் புள்ளி எனப்படும் புயலில் கண் சுவரைக் கண்டறிய முயற்சி செய்ததில் தோல்வி அடைந்தது உட்பட).[34] 2007 ஆம் ஆண்டில், வெள்ளி கிரகத்தின் இரு துருவங்களிலும் மிகவும் பெரிய பாய்மச்சுழல்கள் ஒரு இரு-துருவ கண் அமைப்பைக் கொண்டிருப்பததை ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வீனஸ் எக்சுபிரசு குழுவினர் கண்டறிந்தனர்.[35]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.