From Wikipedia, the free encyclopedia
நீலக்கால்சட்டை (blue jeans, நீல ஜீன்சு) என்பது ஒரு தனிப்பட்ட முரட்டுப்பருத்தித் துணி அல்லது டெனிம் வண்ணத்துணி என்னும் ரகத்தினால் உருவாக்கப்பட்ட முழுக்கால் சட்டை (சல்லடம்) ஆகும்[1]. ஜேக்கப் டபிள்யு டேவிசு என்பரும் லெவி சுடராசு என்னும் நிறுவனமும் இணைந்து 1871 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒருவகையான நீலவண்ணக்கால் சட்டைக்கு ஜீன்சு என்னும் பெயர் வழங்கப்பட்டு அழைக்கப்படுகிறது. பொதுவாக கடின உழைப்புக்கேற்ற உடையாக உருவாக்கப்பட்டது 1950களில் பதின்ம வயதினரால் புகழடைந்தது. 2010 களில் நீலக்கால்சட்டை சாதரணமாக அனைவரும் அணியும் உடையாக மிகவும் பிரபலமாக விளங்கியது. தற்காலத்தில் பொதுவான உடையாக உலகெங்கும் அணியப்படுவது பல நிறங்களிலும் வடிவமைப்பிலும் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்க மேற்கு (பழைய) கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக நீல வண்ணமே 'அமெரிக்க நாகரிகம்' என்று கருதப்படுகிறது. இது பொதுவாக அமெரிக்கப் பண்பாட்டின் ஓரு அங்கமாக கருதப்படுகிறது.
இதற்கு 1873 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.[2] இவர்கள் காப்புரிமை பெறும் முன்பே நீலநிறக்கால்சட்டை என்னும் சொல் வழக்கத்திலிருந்துள்ளது. பழங்காலத்தில் மேலை நாடுகளில் மாடு மேய்பவர்களும், சுரங்கத்தொழிலாளர்களும் அதிகமாக பயன்படுத்தி வந்தாலும்[3] 1950 களில் இளைஞர்களிடையே இது மிகவும் பிரபலமானது. 1960, 1970, 1980 களிலும் இது மிகவும் பிரபலமாக இருந்தது. கிப்பி (Hippies) என்னும் இயக்கத்தினரும் இதனை வெகுவாக அணிந்து மிகவும் பிரபலப்படுத்தினர். பல்வேறு வடிவங்களில் இது உருவாக்கப்பட்டு 2010 களில் இது மிகவும் நடப்பு வழக்காகத் (Fashion) திகழ்ந்தது. சிதைக்கப்பட்ட நீலக்கால்சட்டை (Distressed Jeans), பார்ப்பதற்கு கிழிந்தும் சாயம் போனதாக தெரிந்தாலும், பயன்படுத்துவதற்கு உகந்ததான இவ்வகையும் மிகவும் பிரபலமடைந்தன.
நீலக்கால்சட்டைக்கு வழிகாட்டியாய் அமைந்த உடையானது இந்தியாவில் 16ம் நூற்றாண்டில் டுங்கரீ என்றழைக்கப்பட்ட உடையே. இண்டிகோ எனப்படும் நீலச்சாயத்தில் செய்யப்பட்ட உறுதியான கடின பஞ்சால் நெய்யப்பட்ட இவ்வாடை மும்பை அருகே டுங்கரீ கோட்டையில் விற்கப்பட்டு, மாலுமிகளுக்கான ஆடைகளாக விற்கப்பட்டது.
இந்த வகையான துணி இத்தாலியின் செனோவா (Genova) நகரத்திலும், பிரான்சு நாடு நைம்சு (Nimes) என்னும் நகரத்திலும் ஆரம்ப காலத்தில் தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. நைம்சு நகரத்தின் நெசவாளர்கள் இந்த நீலக்கால்சட்டைத் துணியை நெய்ய முயற்சிக்கும் போது டெனிம் என்னும் துணியை நெய்து முடித்தனர். இது போலவே ஜெனோவா நகரத்திலும் ஒரு வகையான முரட்டுப் பருத்தி ஆடையை நெய்து வேலை செய்யும் பொழுது அணியும் ஆடையாக பயன்படுத்தி வந்தனர். நைம்சு நகரத்தில் நெய்த டெனிம் ஆடைகள் அதிக முரட்டுத்தன்மை வாய்ந்ததாகவும் தரத்திலும் விலையிலும் உயா்ந்ததாகவும் இருந்தது. மேலாடையாகவும் அணியப்பட்டு வந்தது.[4]. முதலில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கருநீல வண்ணக் கலவையைப் பயன்படுத்தினர்.[5] பின்னர் செர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை வண்ணக்கலவையைப் பயன்படுத்தினர்.
17ஆம் நூற்றாண்டில் வடக்கு இத்தாலி நாட்டில் தொழிலாளர்களுக்கு நீலக்கால்சட்டை முக்கியமான ஆடையாக மாறிவிட்டது. 17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட பல ஓவியங்களிலிருந்து இது தெளிவாகின்றது. குறிப்பாக இந்த ஒவியர் “நீலக்கால்சட்டையின் வல்லுனர்” (Master of Jeans) என்று அழைக்கப்பட்டவர்.[6]
தொழிலாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான முரட்டுத்துணி “டெனிம்” மட்டுமல்லாமல் மற்றொருவகை முரட்டுத்துணியும் நீலவண்ணத்திலேயே பரவலாக தொழிலாளிகளால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பெரும்பாலும் மும்பை நகரில் பயன்படுத்தப்பட்ட இந்த துணியின் பெயர் டுஙரீ (Dungaree) ஆகும். மும்பை அருகிலுள்ள டுங்ரி (Dungre) என்னும் சிறிய கிராமத்தில் நெய்யப்பட்ட இந்தத்துணி [7] இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு தொழிலாளர்கள் அணியும் மலிவான கெட்டியான ஆடையாகப்பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆடைகளின் வணிகத்திலும், இந்தத் துணியின் அருமை தெரிய வந்தது. ஜினோசின் கடல் மாலுமிகள் தங்களின் கப்பல்களில் பொருட்களைப் பாதுகாப்பாக மூடிவைப்பதற்கும் இவ்வகையான துணிகளையே பயன்படுத்தினர். ஜினோவா குடியரசு ஆட்சிக்காலத்தில் ( Republic of Genova) 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மாலுமிகள் ஐரோப்பா கண்டம் முழுவதும் இத்துணியை ஏற்றுமதி செய்தனர். வைட்கம்ப எல் ஜட்சன் ( Whitecomb L Judson) என்பவரின் கண்டுபிடிப்பான குறுக்கம் (Zipper), இத்துணியின் பயன்பாடு மேலும் அதிகரிக்க பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருந்தது.
லெவிசுடராசு (Levi strauss and co) நிறுவனம் 1873 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இதனை அறிமுகப்படுத்திய பின் அமெரிக்கா முழுவதும் நீலக்கால்சட்டை மிகவும் பிரபலமடைந்தது
1851 ஆம் ஆண்டு லெவிசுடராசு (Levi strauss) தம் இளம்வயதில் செர்மனியிலிருந்து நியூயார்க் சென்று அங்கு ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த தமது சகோதரருடன் சேர்ந்து கொண்டார். 1853 ஆம் ஆண்டு சொந்தமாக வாணிகம் செய்ய சான்பிரான்சிசுகோ நகருக்குச் சென்றார். ஜேக்கப் டேவிசு என்னும் தையற்கலைஞர் வழக்கமான லெவிசுடராசு நிறுவனத்திடம் துணி வாங்குபவர். அவர்களிடம், தம்முடன் இணைந்து கடையாணி பொருத்தப்பட்ட துணிக்கு உரிய காப்புரிமை பெற முயற்சிக்கலாம் என்று கேட்டுக்கொண்டதை [8] ஏற்றுக்கொண்டு [9] இருவரும் சேர்ந்து முயற்சி செய்து அமெரிக்க காப்புரிமை (US Patent 139.121) “கைப்பை துவக்கத்தை மேம்படுத்தும் முறைக்காக” ( Improvement in Fastening Pocket Openings) பெற்றனர்.[10] செம்பு கடையாணிகள் கால் சட்டையில் கைப்பைகளின் துவக்கத்திலும் வேறு எங்கெல்லாம் துணி அழுத்ததிற்கு உட்படுமோ அங்கெல்லாம் வைத்துத் தைத்து துணியை மேம்படுத்தினர்.[8]
1795 ஆண்டு சுவிஸ்நாட்டு வங்கியாளர் ஜீன் கேப்ரியல் ஐநாட்டு (John Gabriel Eynard)என்பவர் தனது சகோதரர் ஜேக்கசு (Jacques) என்பவருடன் ஜெனோவா நகருக்குச் சென்று தொழில் புரிந்த பொழுதுதான் ஜீன்சு என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. 1800 ஆம் வருடம் மச்சிநா (Massena) படைகள் அந்நகருக்குள் நுழைந்த பொழுது அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. அவர் படைகளுக்கு நீலவண்ணத்துணியில் சீருடைகளை (blue de genes) “புளு டி ஜுன்சு” என்றழைக்கப்பட்ட துணியில் தைத்துக் கொடுத்தார். இதுதான் பிற்காலத்தில் நீலக்கால்சட்டை (Blue Jeans) என்று வழங்கலாயிற்று. லெவி சுடராசு நிறுவனம் இதற்கே காப்புரிமை பெற்று பெருமளவில் உற்பத்தி செய்த போது இந்தக்கால் சட்டைகளில் முன்புறம் இரண்டு கைப்பைகளும் (pocket) பின்புறம் ஒரு கைப்பையும் வைத்திருந்தனர். கைப்பைகளில் கடையாணிகளும் வைக்கப்பட்டு இருந்தன. பின்பு ஐந்து கைப்பையும் கடிகாரம் வைக்கும் பையும் கடையாணிகளுடன் தைப்பது வழக்கமாயிற்று.[11]
ஆரம்பத்தில் இவைகள் ஒரு வலிமையுள்ள கால்சட்டையாக, தொழிலாளிகள் வழக்கமாக பயன்படுத்தும் ஆடையாக இருந்தது. பிற்காலத்தில் அமெரிக்க போர்வீரர்கள் இத்துணியை கையில்லா மேல் சட்டைக்கும் பயன்படுத்தினர். பின்பு இவைகள் குறுக்கம் (Zipper) வைத்துத் தைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்துவதாக வழக்கத்தில் வந்து விட்டது
1950 களில் (Rebel without a cause) காரணமில்லா புரட்சி என்னும் திரைப்படத்தில் ஜேம்சு டீன் இதனைப் பிரபலப்படுத்தியதன்பின் ref>Lauren Cochrane and Helen Seamons. "James Dean: an enduring influence on modern fashion | Fashion". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.</ref> இது இளைஞா் மத்தியில் புரட்சியின் சின்னமாக அறியப்பட்டது. 1960 க்குப்பின் எல்லோராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.[12]
லிம்போ என்னும் நியூயார்க் நகர கடைக்காரர் ஒரு புதிய கால்சட்டையை சலவைசெய்வதன் மூலம் பழையது போன்ற தோற்றத்தை கொடுக்க முடியும் என்று “விளையாட்டுத்துணி பன்னாட்டுப் பத்திரிக்கை” (Sportswear International Magazine) ஆசிரியர் மைக்கேல் பெல்லுமா (Michael Belluomo) எழுதிய கட்டுரை இந்நீலக்கால் சட்டைகளை ‘பயன்படுத்தியது போல் தோற்றத்தை’ ஏற்படுத்தும் பழக்கம் மிகவும் பிரபலமடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்நீலக்கால் சட்டைகளை ‘பழையது போன்ற தோற்றத்தை’ உருவாக்கி ‘ஒட்டு போடுவதும்’ செய்து உபயோகிப்பவர்களுக்கு விற்கத் தொடங்கினர். “கிரேட் வெஸ்டர்ன் கார்மண்ட்” (Great Western Garment Company) என்னும் நிறுவனம் கல்துவைப்புமுறை (Stone washing technique) என்னும் முறையை டெனிம் தொழிலுக்கு அறிமுகப்படுத்தியது.[13] ஆல்பர்டா, எட்மான்டன் (Alberta, Edmonton) பகுதியைச்சாா்ந்த டொனால்டு பீாிட்மென் என்பவரால் உருவாக்கப்பட்டது இது. பிற்காலத்தில் இந்த நீலக்கால்சட்டை அனைவராலும் விரும்பி அணியும் ஆடையாகத் திகழ்கிறது
முதலில் நீலக்கால்சட்டைக்குத் தேவையான துணி இயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட நீலவண்ணக்கலவை பயன்படுத்தப்படுதிச் செய்யப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் பெரும்பாலும் டெனிம் துணிகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நீலக்கலவையையே பயன்படுத்துகின்றனர். ஒரு சில கிராம் கலவையே ஒரு நீலக்கால்சட்டைக்குத் தேவைப்பட்டாலும் ஏறக்குறைய 20000டன் கலவை தயார் செய்யப்பட்டது.[14] மற்ற வண்ண டெனிம் துணிகளுக்கு வேறு வண்ணக்கலவைகள் பயன்படுத்தப்பட்டன. தற்பொழுது நீலக்கால்சட்டைகள் பலவிதமான வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கால் சட்டையை வாங்கியபின் துவைக்கும் பொழுது சுருங்காமலிருக்க துணியை விற்பதற்கு முன்பே சுருங்க வைத்து விட்டால் பின்னர் அது சுருங்காது என்பதால் 1962 ஆம் ஆண்டு லெவி சுடராசு இம்முறையைப் பயன்படுத்தி சுருங்காத நீலக்கால் சட்டையை அறிமுகம் செய்தார்.[15] இதனால் நுகர்வோர் இவைகளை வாங்கும் பொழுதே தமக்கு சாியான அளவுடைய கால்சட்டைகளை வாங்கமுடியும். இவை 505 நீலக்கால் சட்டை என்றழைக்கப்பட்டன. 501, 517, மற்றும் 527 என்று பல விதங்களில் நீலக்கால் சட்டைகள் வெளியிடப்பட்டன. இவையல்லாமல் இருக்கமானவை, தளர்ச்சியானவை, இன்பநலமானவை (comforts), சாய்ந்தவை, வழக்கமானவை என்று பலவிதமான கால்சட்டைகளும் வெளியிடப்பட்டன.
பல வேதியல் பொருட்களின் மூலம் “பயன்படுத்தியவை” போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியும் ஒருவகையான கால்சட்டைகள் தயாரிக்கப்பட்டன [16]
ஒரு நீலக்கால்சட்டையை தயார் செய்வதற்கு ஏறக்குறைய 3479 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் இந்தத் துணிக்குத் தேவையான பருத்தியை விளைவிப்பதற்கு தேவையான தண்ணீர், துணியை நெய்தல் மற்றும் பலமுறை துணியை துவைத்தல் போன்ற அனைத்து தேவைகளும் அடங்கும் [17]
பயன்படுத்தப்பட்ட தோற்றம் (used look) கொடுக்கும் கால்சட்டைகள் தயாரிப்பது சதாரண நீலக்கால்சட்டையைத் தயாரிப்பதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக கேடுவிளைவிக்கும் செயலாகும். இது பயன்படுத்தப்படும் பொருள்களைச் சார்ந்து வேறுபடும். மணல் மூலம் துவைத்தல் (Sand washing) கல் காகிதத்தால் (sand paper) துவைத்தல் போன்ற செயல்முறைகளால் துணியைத் தயார் செய்வதனால் “சிலிகோசிஸ்” என்னும் நோய் தொழிலாளர்களைத் தாக்கும் அபாயத்தை ஏற்படுகிறது. துருக்கி நாட்டில் 5000 க்கு மேற்பட்ட ஜவுளித் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[18] 46 பேர் இறந்து விட்டனர். ஒருசில நிறுவனங்கள் இதுபோன்ற செயல்முறைகளைகள் பயன்படுத்துவதை தடைசெய்துவிட்டன.
சுருக்கமற்ற துணியாக பல நீலக்கால்சட்டைகள் விற்கப்பட்ட போது சலவை செய்யும் போது மேலும் சுருங்கவாய்ப்புண்டு லெவி சுடராசு (Levi Strauss) நிறுவனம் இத்துணியை அதிகமாக துவைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது. லெவி சுடராசு நிறுவனத்தின் இயக்குநர் கார்சியாரா (Carl Chiara) இத்துணி எவ்வளவு குறைவாக துவைக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது என்று விளம்பரப்படுத்துகிறார்[19]. இதுபோன்று கால்சட்டையை அதிகமாக துவைப்பதை தவிா்க்க வேண்டும் என்ற பரவலான கருத்து விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த எல் எஸ் & கோ என்னும் பத்திரிகையின் ஆசிரியர் கோரிவாரன் ( Corey Warien )“அதிகமாகத் துவைப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டாலும் உங்கள் தேவையை அனுசரித்துச் செய்யுங்கள். அழுக்கு படியாத நாட்களில் இவைகளை ஒரிரு நாட்கள் பயன்படுத்தாலம் குளிர்காலத்தில் அதிகமாகத் துவைக்கத் தேவைப்படாது. ஆனால் கோடைகாலத்திலும், அழுக்குப்படிந்த நேரங்களில் துவைக்கலாம்” என்று விளக்கம் தருகிறார்.
அதிகமாகத் துவைக்க விரும்பாதவர்கள் இவைகளைத் துர்நாற்றம் எற்படுத்தும் கிருமிகளைத் தவிர்க்க உறைய வைக்கின்றனர். ஆனால் இம்முறை உகந்தது அல்ல என்றும், இதற்கு பதிலாக 250 டிகிரி பாரன்கீட்டில் இடுதல் (baking) நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.[20] (120 °C).
மேலை நாகரிகத்தின் அடையாளமாக சோவியத் உருசியாவில் நீலக்கால் சட்டை காணப்பட்டது. 1957 ஆம் ஆண்டு உலக இளைஞர் மற்றும் மாணவர் திருவிழா (World Festival of Youth and Students) கொண்டாட்டத்தின் போது இவை பிரபலமடைந்தன. உருசியாவின் ஜவுளித் தொழில் அகராதியின் படி நீலக்கால்சட்டை என்னும் சொல்லுக்கு ‘தொழிலாளர் சீருடை’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது[21] According to a 1961 Russian textile dictionary, jeans were initially referred to as a "worker's uniform" (рабочий костюм, rabochii kostyum).[22]. அங்கு இக்கால் சட்டைகள், இவைகளை ஆதரித்த ரோகோடோல் ( Rokotov- Faibshenko) மற்றும் பெயின்பர்க் ஆகியோர் பெயரிலேயே அறியப்படுகிறது. இவர்கள் மற்ற குற்றங்களுடன் நீலக்கால் சட்டைகளைக் கடத்திய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டனர்[21]
கால்சட்டை குறித்த சட்டங்களில் இந்த நீலக்கால் சட்டையும் வருகிறது. இது மட்டுமல்லாமல் நீலக்கால் சட்டை குறித்து சில வழக்குகளும் உள்ளன. 1992 ஆம் ஆண்டு ரோம் நகரில் வாகன ஒட்டும் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் தம்மிடம் பயில வந்த ஒரு இளம் பெண்ணைக் கற்பளித்து விட்டார். இது குறித்து வழக்கில் இவர் தண்டிக்கப்பட்டார். இது குறித்து மேல் விசாரணை செய்த இத்தாலிய நாட்டு உச்ச நீதிமன்றம் இந்த இளம் பெண் இருக்கமான நீலக்கால் சட்டை அணிந்திருந்ததாகவும் அதனை நீக்குவது கடினம், அந்த பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடவாது என்றும் ஆதலால் இது அந்த பெண்ணின் இசைவின் பேரிலேயே நடந்திருக்க வேண்டும், கற்பழிப்பாகாது என்று தீர்ப்பு வழங்கியது."[23] இந்த தீர்ப்பு மகளிர் அமைப்புகளிடமிருந்து பெருத்த எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பிற்கு மறுநாள் இத்தாலிய பாராளுமன்றத்தில் பெண்கள் நீலக்கால் சட்டை அணிந்து கொண்டு “நீலக்கால் சட்டை – கற்பழிப்பிற்கு மாற்று” என்னும் பதாதையை ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இத்தாலிய உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்து தள்ளுபடி செய்தது.
2014 ஆம் ஆண்டு மும்பையில் ஒரு குடும்ப நீதிமன்றம் (family court) கணவன் மனைவியை நீலக்கால் சட்டை அணிவதைத் தவிர்த்து சேலை தான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும்[24] அவ்வாறு கட்டாயப்படுத்துவது ‘கொடுமைப்படுத்தல்’ என்று வகைப்படுத்தப்பட்டு விவாகரத்து வழங்கப்படும் என்று தீர்பளித்து விவாகரத்து வழங்கியது.[24]
நீலக்கால் சட்டைக்கான உலகச்சந்தையில் வட அமெரிக்கா மட்டும் 39 விழுக்காடும், மேற்கு ஐரோப்பா 20 விழுக்காடும், ஜப்பான் மற்றும் கொரியா 10 விழுக்காடும் மீதம் 31 விழுக்காடு உலகின் பிறபகுதிகளும் பங்காகக் கொண்டுள்ளன.[25] அமெரிக்காவில் மட்டும் நுகர்வோர் 2004 ஆம் ஆண்டில் 14 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், 2005 ஆம் ஆண்டில் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் நீலக்கால் சட்டை வாங்குவதற்காகச் செலவிட்டுள்ளனர்.[26] இது 2011 ஏப்ரல் மாதம் 30 ம் தேதி வரை 13.8 பில்லியன் டாலராக இருந்துள்ளது.[27]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.