From Wikipedia, the free encyclopedia
தனித்தொகுதி என்பது சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கோ நடக்கும் தேர்தல்களில், சில குறிப்பிட்ட தொகுதிகள் தாழ்த்தபட்ட மக்களுக்கோ அல்லது பழங்குடியின மக்களுக்கோ ஒதுக்கப்பட்டு, அத்தொகுதியில் அவர்கள் மட்டுமே போட்டியிட ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தனித்தொகுதிகள் ஆகும்.
1919 - ஆண்டு பிரித்தானி இந்தியாவில், இயற்றப்பட்ட அரசியல் யாப்பில் இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் இந்தியர்களும் பங்கேற்கலாம் என்ற வாய்ப்பை பிரித்தானிய அரசு தந்தது. இதை இரட்டை ஆட்சிமுறை என்பர். இதன்படி 1920இல் சென்னை மாகாணத்தின் முதல் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் சட்டமன்றத்துக்கு 98 பேர் தேர்வானார்கள். இவர்கள் அல்லாது 29 நியமன உறுப்பினர்கள் ஆங்கிலேய ஆளுநரால் நியமிக்கப்பட்டனர், இந்த நியமன உறுப்பினர்களில் தலித் மக்களுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது.[1]
1932 - வட்ட மேஜை மாநாடுகளுக்குப்பின், அம்பேத்கரின் முயற்சியின் விளைவாக பிரித்தானிய அரசு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கான ஆணை’யை 1932 ஆகஸ்ட் 16இல் வெளியிட்டது. இதன்படி இந்திய அளவில் 71 இடங்கள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டன. இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தரப்பட்ட இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, தலித்துகள் தங்களின் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒரு வாக்கும், பொதுத்தொகுதி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் போடலாம் என்பது இதில் உள்ள சிறப்பு. தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை தரும் திட்டத்தை காந்தி கடுமையாக எதிர்த்தார். “தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உறுப்பினரை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே கூடித் தேர்ந்தெடுக்கும் முறையானது, சமூக இணக்கத்துக்கு மாறாக, சமூகப் பிளவுக்கே வழிவகுக்கும்” என்று காந்தி செப்டம்பர் 18, 1932 இல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். காந்தியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அம்பேத்கருடனான பேச்சுவார்த்தை நடந்தது. சமரச ஏற்பாடாக பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், இரட்டை வாக்குரிமைக்கு பதிலாக தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 148 இடங்களானது. 1935 - பிரிட்டிசாரின் புதிய அரசியல் யாப்பு வந்தது. அதன்படி அதுவரை நடப்பில் இருந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு மாநிலசுயாட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட முதல் தேர்தல் 1937இல் நடந்தது. இதில் 18% தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
விடுதலைக்குப்பின் 1950இல் வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை தரும் ஜனநாயக நாடாக இந்தியா மலர்ந்து, 1951-1952 ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்தது. மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள்: 489. இதில் தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94 ஆகும். இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித், பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் - அதாவது ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித், பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறையும் என இருவகையாகவும் இருந்தன. இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள், பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். இரட்டை உறுப்பினர் முறையில் குழப்பம் ஏற்படுவதாகக்கூறி 1961 இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிக்கப்பட்டது.[2] தனித் தொகுதிகள் இன்றைக்கு உள்ளதுபோல, அதாவது தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்; அனைத்துத் தரப்பினரும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை அமலுக்கு வந்தது.
2016 - இந்திய மக்களவையில் உள்ள மொத்த இடங்கள்: 543. இதில் தனித் தொகுதிகள் 131 ஆகும்.
தமிழகச் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 235 இடங்கள் இதில் தனித் தொகுதிகள்: 46 ஆகும். இந்த தனித்தொகுதிகளில் பட்டியலில் இனத்தவருக்கு: 44. பழங்குடியினருக்கு: 2 இடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகள் தனித் தொகுதிகள்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.