From Wikipedia, the free encyclopedia
சுல்தான் இசுகந்தர் இப்னி சுல்தான் இசுமாயில் அல்லது ஜொகூர் சுல்தான் இசுகந்தர் இசுமாயில் (ஆங்கிலம்: Sultan Iskandar ibni Almarhum Sultan Ismail; மலாய்: Sultan Iskandar ibni Sultan Ismail; சீனம்: 苏丹马末·依斯干达; 8 ஏப்ரல் 1932 – 22 சனவரி 2010); என்பவர் ஜொகூர் மாநிலத்தின் சுல்தான் ஆவார்; 1981-இல் அவரின் தந்தை சுல்தான் இஸ்மாயில் மரணத்திற்குப் பிறகு ஜொகூர் சுல்தான் பதவியில் அமர்த்தப்பட்டவர்.
ஜொகூர் சுல்தான் இசுகந்தர் இசுமாயில் Sultan Iskandar of Johor Sultan Iskandar ibni Sultan Ismail | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மலேசியாவின் 8-ஆவது பேரரசர் | |||||||||
ஆட்சிக்காலம் | 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 | ||||||||
முன்னையவர் | பகாங் அகமட் சா | ||||||||
பின்னையவர் | பேராக் அசுலான் சா | ||||||||
ஜொகூர் சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 11 மே 1981 – 22 சனவரி 2010 | ||||||||
முன்னையவர் | சுல்தான் இசுமாயில் | ||||||||
பின்னையவர் | இப்ராகிம் இசுகந்தர் | ||||||||
பிறப்பு | இசுதானா செமாயாம், ஜொகூர், ஜொகூர் பாரு, மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் | 8 ஏப்ரல் 1932||||||||
இறப்பு | 22 சனவரி 2010 77) புத்திரி மருத்துவமனை, ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா | (அகவை||||||||
புதைத்த இடம் | 23 சனவரி 2010 மமுடியா அரச கல்லறை,ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா | ||||||||
துணைவர் |
| ||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
மரபு | தெமாங்கோங் | ||||||||
தந்தை | ஜொகூர் சுல்தான் இசுமாயில் | ||||||||
தாய் | சுல்தானா உங்கு துன் அமினா | ||||||||
மதம் | இசுலாம் |
1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரையில், மலேசியாவின் 8-ஆவது மாமன்னராகப் பொறுப்பு வகித்தார். 2010-ஆம் ஆண்டில் இருந்து அவர் இறக்கும் வரையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள், சுல்தான் இசுகந்தர் இசுமாயிலின் ஆட்சி நீடித்தது. அவரின் பிள்ளைகள் மலேசியாவின் வெவ்வேறு அரசக் குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டனர்.
அவரின் மூத்த மகள் துவாங்கு கமாரியா மைமுனா; சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு சுலைமான் சா என்பவரை மணந்தார்; அவரின் மூத்த மகன் இப்ராகிம் இசுகந்தர், பேராக் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சாரித் சோபியாவை மணந்தார்; அவரின் மகள் துவாங்கு அசீசா அமினா மைமுனா இசுகந்தரியா, பகாங்கின் சுல்தான் அப்துல்லாவை மணந்தார்; அவரின் இளைய மகன் துங்கு அப்துல் மஜீத் இட்ரிஸ்; கெடா அரச குடும்பத்தைச் சேர்ந்த துங்கு தே மசுனியை மணந்தார்.
சுல்தான் இசுகந்தர் இசுமாயிலின் தாத்தா ஜொகூர் சுல்தான் இப்ராகிம்; இவரைப் போலவே,[1] சுல்தான் இசுகந்தர் இசுமாயிலின் சுதந்திரமான மனநிலை, பல கட்டங்களில் மலேசிய மத்திய அரசாங்கத்துடனான உறவுகளை மோசமாக்கியது. மலேசிய மாமன்னராக[2] இருந்த காலத்தில் அந்த உறவுகள் அதிகமாக இருந்தன என அறியப்படுகிறது. இவர் தொடர்பான பல குறிப்பிடத்தக்க பொது நிகழ்வுகளும் நடந்துள்ளன.[3]
இருப்பினும், சுல்தான் இசுகந்தர் தம் குடிமக்கள் மீது மிகுந்த அக்கறை காட்டினார்; குடிமக்கள் பலரால் உயர்வாக மதிக்கப்பட்டார்; குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் மலேசியப் பழங்குடியினர் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்று இருந்தார்.[4][5] ஜொகூர் சுல்தானாக இருந்த காலத்தில் அவர் மீது சில வன்முறைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் அறியப்படுகிறது.[6][7]
சுல்தான் இசுகந்தர், சில வேளைகளில் தம்முடைய ஊழியர்கள் மீதும்; பொது மக்கள் மீதும், கடும் சினம் கொண்டு வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் அறியப்படுகிறது.[8] 1992-ஆம் ஆண்டில் கோமஸ் நிகழ்வு (1992 Gomez Incident) எனும் ஒரு துர்நிகழ்வு நடைபெற்றது. வளைகோல் பந்தாட்டப் பயிற்றுனர் டகளஸ் கோமஸ் (Douglas Gomez) என்பவரை சுல்தான் இசுகந்தர் தாக்கியதான நிகழ்வு மலேசிய ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக மலேசிய நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வுகளும்; மக்களவை விவாதங்களும் நடைபெற்றன. உச்சக்கட்டமாக, மலேசியாவில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்களுக்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட "சட்ட விலக்கு" சலுகைகளில் (Royal Immunity) மாற்றங்கள் செய்யப்பட்டன. மலேசிய அரசியலமைப்பு 1993 திருத்தங்கள் சட்டம் (1993 amendments to the Constitution of Malaysia) எனும் ஒரு புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டது. மலேசியாவில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு ஒரு சிறப்பு நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது.[9]
சுல்தான் இசுகந்தர் இசுமாயில் இளவரசராக இருந்த இளமை நாட்களில்,[15] பொதுவாக "மகமூத்" அல்லது "மகமூத் இசுகந்தர்" என்ற பெயரால் அறியப்பட்டார். 1981-இல் சுல்தான் பதவியில் அமர்த்தப்பட்ட பிறகு மகமூத் எனும் பெயர் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்.[10][11]
சுல்தான் இசுமாயிலின் மூன்றாவது மற்றும் மூத்த மகன் ஆவார். அவர் 8 ஏப்ரல் 1932-இல் ஜொகூர் பாரு இசுதானா செமாயாம் அரண்மனையில் காலை 11:30 மணிக்கு பிறந்தார்.[12]
சுல்தான் இசுகந்தர் தன் தொடக்கநிலைக் கல்வியை ஜொகூர் பாரு நீ கெங் தொடக்கப் பள்ளியிலும், ஜொகூர் பாரு ஆங்கிலக் கல்லூரியிலும் பெற்றார். 1952 இல், அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள டிரினிட்டி கிராமர் பள்ளிக்கு உயர்நிலைக் கல்விக்காக அனுப்பப்பட்டார். 1953-இல் உயர்நிலைப் பள்ளியை முடித்த பிறகு, ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றார். அங்குள்ள சைன் உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் படித்து 1956-இல் மலாயாவிற்குத் திரும்பினார்.[13]
1959 முதல் 1961 வரை ஜொகூரின் துங்கு மகோத்தாவாகவும்; 1966 முதல் 1981 வரை ஜொகூர் ராஜா மூடாவாகவும் நியமிக்கப்பட்டார். 10 மே 1981 இல், அவரின் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, ஜொகூர் சுல்தானின் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்; மேலும் ஒரு நாள் கழித்து, அவரின் தந்தை அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு ஜொகூர் மாநிலத்தின் சுல்தானாகப் பதவியேற்றார்.[14]
9 பிப்ரவரி 1984-இல், மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையின் சந்திப்பு நிகழ்வில் மலேசிய மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15][16] பின்னர் 1989-ஆம் ஆண்டு வரையில் மலேசிய மாம்ன்னர் பதவியை வகித்தார்.
டிசம்பர் 2007 இல், ஜொகூர் மாநிலத்தில் உள்ள முசுலிம்கள் யோகா பயிற்சி செய்வதைத் தடை செய்யும் சட்டம் இயற்ரப்படுவதற்கு, சுல்தான் இசுகந்தர் முன்மொழிவு செய்தார். யோகா பயிற்சியில் உள்ள இந்துத்துவ கூறுகள் இசுலாமிய போதனைகளுக்கு எதிரானவை என்று மேற்கோள் காட்டினார். [17][18]
1 டிசம்பர் 2008-இல், சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்தப்படுத்தல் வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.[19]
ஜொகூர் சுல்தான் பதவி; மலேசிய மாமன்னர் பதவி; எனும் இரு பதவிகளையும் ஏற்பதற்கு முன்னர், இவரின் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள், அவ்வப்போது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன.[20]1961-ஆம் ஆண்டு ஜொகூர் மக்கோத்தா பதவியை (சுல்தான் பதவிக்கு அடுத்த பதவி) அவரிடம் இருந்து மீட்கப்பட்டது ஒரு முக்கியச் செய்தியாகப் பார்க்கப்பட்டது.
இரு காவல்துறை அதிகாரிகளை ஒரு நாய்க்கூண்டில் அடைத்து வைத்த நிகழ்வு, மலேசிய ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் செய்தியை அறிந்த அவரின் தந்தையார் சுல்தான் இசுமாயில்; ஏற்கனவே இசுகந்தருக்கு வழங்கப்பட்ட ஜொகூர் பட்டத்து இளவரசர் பதவியை மீட்டுக் கொண்டார்.[21]
1972-ஆம் ஆண்டில், தன் காரை முந்திச் சென்றதற்காக இருவர் மீது இரசாயனக் கலவையை (Chemical Spray) பயன்படுத்தி தாக்கியதாகக் இசுகந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றத்திற்காக மறு ஆண்டில் அவர் தண்டனை பெற்றார்.[22] ஓர் ஆண்டு கழித்து, ஓர் இளம் தம்பதியினர் மீது இதே போன்று மற்றோர் இரசாயனக் கலவை தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.[23]
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1977-ஆம் ஆண்டில், ஒரு மனிதப் படுகொலைக்காகக் குற்றம் சாட்டப்பட்டு; சுடுதல் மற்றும் கொலை என இரு தண்டனைகள் இசுகந்தர் மீது சுமத்தப்பட்டன.[24][25] தன்னுடைய உலங்கு வானூர்திக்கு அருகில் நின்ற ஒருவரை, கடத்தல்காரன் என நினைத்து அவனைச் சுட்டுக் கொன்றார். அந்த இரண்டு நிகழ்வுகளிலும், அவரின் தந்தை சுல்தான் இசுமாயில் தலையிட்டு அதிகாரப்பூர்வமான மன்னிப்பை வழங்கினார்.[26]
1987-ஆம் ஆண்டில், கேமரன் மலையில் ஒரு குழிப்பந்தாட்ட உதவுநர் மரணத்தின் காரணமாக சுல்தான் இசுகந்தர் மீது மேலும் ஒரு குற்றப்பதிவு கொண்டு வரப்பட்டது. அந்த நிகழ்வில் ஒரு குழிப்பந்தாட்ட குறியை இசுகந்தர் தவறவிட்டதால்; அதைப் பார்த்து அந்தக் குழிப்பந்தாட்ட உதவுநர் சிரித்தார் என்பதற்காக அந்த உதவுநர் குழிப்பந்தாட்ட இரும்புக் கோலால தாக்கப்பட்டார்.[27]
முன்னாள் மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட விலக்கு காரணமாக சுல்தான்கள் மீதும்; மற்றும் மலேசிய மாமன்னர் மீதும் வழக்குகளைத் தொடர முடியாது என்று சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் அவ,ர் சுல்தான் இசுகந்தரின் செயல்களையும் கண்டித்தார். குழிப்பந்தாட்ட உதவுநரின் சகோதரரும் அந்தச் சம்பவத்தின் போது காயமடைந்தார். பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.[28][29]
1992-இன் பிற்பகுதியில், வளைகோற் பந்தாட்டப் பயிற்றுனர்கள் மீது சுல்தான் மற்றும் அவரின் இளைய மகன் துங்கு அப்துல் மஜித் இட்ரிஸ்; ஆகிய இருவரும் நடத்திய தாக்குதல்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. அதே வேளையில், மலேசிய ஆட்சியாளர்கள், நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடும் வழக்குத்தடுப்பு எனும் சட்ட விலக்கு தொடர்பான சர்ச்சைகளும் உச்சக்கட்டத்தை அடைந்தன. இரண்டு நிகழ்வுகளும் உள்ளூர் மற்றும் பன்னாட்டுச் செய்திகளில் கணிசமான தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றன. வளைகோற் பந்தாட்டப் பயிற்றுனர் டகளஸ் கோமஸ் தாக்கப்பட்ட நிகழ்வு "கோம்ஸ் சம்பவம்" என்றும் பெயரிடப்பட்டது.[30][31]
இந்தத் தாக்குதல் நிகழ்வுகளை விசாரிக்க மலேசிய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.[32][33] நாளிதழ்களில் எழுப்பப்பட்ட கடுமையான விமர்சனங்களினால், 10 டிசம்பர் 1992 அன்று, மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் பலர் ஒரு சிறப்பு அமர்வில் அந்தத் தாக்குதல் நிகழ்வுகள் விசாரிக்கப்பட்ட வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.[34]
10 டிசம்பர் 1992 அன்று மலேசிய நாடாளுமன்றத்தில் கூடியிருந்த 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றினர். தேவைப்பட்டால் ஆட்சியாளர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
அந்தச் சிறப்புக் கூட்டத்தில், சுல்தான் இசுகந்தர் மற்றும் அவரின் இரு மகன்களின் கடந்தகாலக் குற்றப் பதிவுகள்; மலேசிய நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டன. அவர்கள் மூவரும் குறைந்தது 23 தாக்குதல்கள் மற்றும் படுகொலை வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டது.[35][36][37]
1993-ஆம் ஆண்டு சனவரி 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் மலேசிய மக்களவை மற்றும் மலேசிய மேலவை ஆகிய இரு அவைகளிலும் ஒரு சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது..[38] ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ விதிவிலக்கை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட இந்தச் சட்ட முன்வரைவு தீபகற்ப மலேசியாவின் ஒன்பது சுல்தான்களில் ஆறு சுல்தான்களால் அங்கீகரிக்கப்பட்டது.[39]
ஆனால் மூன்று சுல்தான்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்நோக்கியது. அவர்களில் கிளாந்தான் சுல்தான் இசுமாயில் பெட்ரா மற்றும் ஜொகூர் சுல்தான் இசுகந்தர் ஆகியோர் அடங்குவர். மலேசிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட சட்ட முன்வரைவைச் செயல்படுத்துவதில் இருந்து தடுக்க, சுல்தான் இசுகந்தர் முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆட்சியாளர்கள் மற்றும் அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ விதிவிலக்குப் பாதுகாப்பை நீக்க இந்த சட்ட முன்வரைவு பரிந்துரைத்தது. அவர்கள் மீதான குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டத்தின் மூலம் அவர்கள் மீது வழக்குத் தொடரப் படுவதற்கு அந்த சட்ட முன்வரைவு வகை செய்கிறது.[40]
இதற்கிடையில், மலேசிய நாடாளுமன்றத்தின் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆட்சியாளர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. சட்ட முன்வரைவில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பின்னர் தீபகற்ப மலேசிய ஆட்சியாளர்கள் அந்தச் சட்ட முன்வரைவை ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து, மார்ச் 1993-இல், அந்தச் சட்ட முன்வரைவு மலேசிய அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.[41]
சட்டங்களை மீறும் ஆட்சியாளர்கள் மீது வழக்குத் தொடர இந்தச் சட்ட முன்வரைவு அனுமதி அளிக்கிறது. அதே வேளையில் ஆட்சியாளர்களைப் பகிரங்கமாக விமர்சிப்பது தொடர்பான 1948-ஆம் ஆண்டின் தேசத் துரோகச் சட்டமும் திருத்தம் செய்யப்பட்டது.[42] மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ஆட்சியாளர்களின் உறுப்பினர்கள் மற்றும் அரச குடும்பங்களின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டால் அந்தச் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்குகளை விசாரணை செய்யும்.[43]
ஆகஸ்டு 1993-இல் ஜொகூர் அரச இராணுவப் படையை (Johor Military Force) (JMF) கலைக்க மலேசிய மத்திய அரசாங்கம் ஒரு சட்ட முன்வரைவையும் முன்வைத்தது.[44] இருப்பினும், அந்தச் சட்ட முன்வரைவு மலேசிய நாடாளுமன்றத்தால் தவிர்க்கப்பட்டது.[45][46]
2000-ஆம் ஆண்டில், சுல்தான் இசுகந்தருக்கு இதயப் புறவழி அறுவைசிகிச்சை (Coronary Artery Bypass Surgery) செய்யப்பட்டது. அதன் பிறகு, சுல்தான் இசுகந்தரின் உடல்நலம் ஓரளவிற்கு குன்றியது. சனவரி 2008-இல் ஏற்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியால் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.[47]
சுல்தான் இசுகந்தர் 22 சனவரி 2010 இரவு 7:15 மணிக்கு ஜொகூர் பாருவில் உள்ள புத்திரி சிறப்பு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 77.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.