ஒடிசாவை ஆண்ட பண்டைய வம்சம் From Wikipedia, the free encyclopedia
சோமவம்சி வம்சம் ( Somavamshi dynasty) அல்லது கேசரி வம்சம் என்பது பொ.ச. 9 - 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிழக்கிந்தியாவில் இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளை ஆண்ட வம்சமாகும். யயாதிநகரம் (நவீன பினிகா), அபினவ-யயாதிநகரம் (நவீன ஜாஜ்பூர்) ஆகியவை அவர்களின் தலைநகரங்களாக இருந்தது.
சோமவம்சி வம்சம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுமார் 9ஆம் நூற்றாண்டு–சுமார் 12ஆம் நூற்றாண்டு | |||||||||||||
தலைநகரம் | ஜாஜ்பூர் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | ஒடியா[1] | ||||||||||||
சமயம் | இந்து சமயம் சைனம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | சுமார் 9ஆம் நூற்றாண்டு | ||||||||||||
• முடிவு | சுமார் 12ஆம் நூற்றாண்டு | ||||||||||||
|
சோமவம்சிகள் மத்திய இந்தியாவில் உள்ள தெற்கு கோசலப் பகுதியை ஆண்ட பாண்டுவம்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். இவர்கள் திரிபுரியின் காலச்சூரிகளால் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து இவர்கள் தற்போதைய ஒடிசாவில் உள்ள கலிங்க நாடு, உத்கல நாடு போன்ற பகுதிகளை கைப்பற்றி, அங்கு ஆண்டு வந்த பௌமா-கரர்களை மாற்றினர்.
சோமவம்சிகள் ஒடிசாவில் கலை மற்றும் கட்டிடக்கலையின் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தினர். மேலும் இவர்களின் ஆட்சியில் இப்பகுதி பௌத்த மதத்திலிருந்து பிராமணியத்திற்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. சோமவம்சிகளின் ஆட்சி 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. கீழைக் கங்க ஆட்சியாளரான அனந்தவர்மன் சோடகங்கன் இவர்களின் பிரதேசங்களைக் கைப்பற்றினான்.
சோமவம்சிகள் தெற்கு கோசாலையின் பாண்டுவம்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். தெற்கு கோசலப் பகுதியில் அவர்களின் ஆட்சி 8ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. இரு வம்சங்களும் சந்திர குலத்தை பரம்பரையாகக் கூறின; ஆரம்பகால பாண்டுவம்சி அரசர்களும் சோமவம்சியைப் போலல்லாமல், வைத்துக்கொண்டனர்.[2] பாண்டுவம்சி மன்னர்களான திவாரதேவனும், பாலார்ச்சுனனும் முறையே "மகா-சிவன்" மற்றும் "மகா-சிவ-குப்தன்" ஆகிய ஆட்சிப் பட்டங்களை வைத்துக் க்ண்டனர்; பல சோமவம்சி ஆட்சியாளர்கள் "மகா-சிவ-குப்தன்" என்ற ஆட்சிப் பெயரைக் கொண்டிருந்தனர். [2] பாண்டுவம்சி செப்புத் தகடு கல்வெட்டுகளில் "பெட்டி-தலை" எழுத்துக்களைப் பயன்படுத்தி பொறிக்கப்பட்டுள்ள நிலையில், பாலார்ச்சுனன் ஆட்சியில் இருந்து தொடங்கும் அனைத்து கல்வெட்டுகளும் சோமவம்சி கல்வெட்டுகளின் எழுத்தான நாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. [2] ஆரம்பகால சோமவம்சி மன்னர்கள் மேற்கு ஒடிசாவில் ஆட்சி செய்தனர். இது ஒரு காலத்தில் தெற்கு கோசாலத்தின் கிழக்குப் பகுதியை உருவாக்கியது. [2] மேலும், ஆரம்பகால அறியப்பட்ட சோமவம்சி மன்னர் முதலாம் மகாசிவகுப்தனின் (என்கிற ஜனமேஜயன்) சௌத்வார் கல்வெட்டு அவரை 'கோசலேந்திரன்' ("கோசலத்தின் அதிபதி" என்று விவரிக்கிறது"). [2] பல சோமவம்சி கல்வெட்டுகள் கோசாலத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், கோசலத்தில் அமைந்துள்ள கிராமங்களின் மானியங்கள், கோசலத்தைச் சார்ந்த அதிகாரிகளை நியமித்தது போன்றவற்றை கூறுகிறது. [2]
இந்த ஒற்றுமைகள் அனைத்தும் சோமவம்சிகள் பாண்டுவம்சிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் குறிக்கிறது. ஆனால் இதை உறுதியாகக் கூற முடியாது. [2] ஒரு கோட்பாட்டின் படி, பாண்டுவம்சிகள் காலச்சுரிகளால் கோசலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அங்கு, இவர்கள் மகாநதி ஆற்றங்கரையிலுள்ள வினிதபுரத்தில் (நவீன பினிகா) தங்கள் தலைநகரை நிறுவினர். ஒடிசாவின் பெரும்பகுதியை ஆண்ட "பிற்கால" சோமவம்சிகளுக்கு மாறாக, வினிதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே எல்லையாக கொண்டிருந்த ஆட்சியாளர்கள் "ஆரம்பகால" சோமவம்சிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.[3]
முதலாம் ஜனமேஜயன் (ஆட்சி பொ.ச. 882-922) அநேகமாக கடலோர ஒடிசாவின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். மேலும் பௌமா-கர அரசன் நான்காம் சுபாகரனை மணந்த தனது மகள் மூலம் அண்டை நாடான பௌமா-கர இராச்சியத்தில் ஊடுருவியதாகத் தெரிகிறது. நான்காம் சுபாகரனுக்குப் பிறகு, இராச்சியத்தை இவரது சகோதரன் மூன்றாம் சிவகரன் ஆட்சி செய்தார். அதைத் தொடர்ந்து, ஜனமேஜயனின் மகள் 894 ஆம் ஆண்டில் (பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அவரது தந்தையின் ஆதரவுடன்) இரண்டாம் திரிபுவன-தேவி என பௌமா-கர சிம்மாசனத்தில் ஏறினார். [4]
பிரம்மேஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்று ஒட்டர நாட்டின் அரசன் ஜனமேஜயனின் ஈட்டியால் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. வரலாற்றாசிரியர் கிருஷ்ண சந்திர பாணிகிரஹி, ஒட்டராவின் இந்த மன்னனை மூன்றாம் சிவகரன் என்று அடையாளம் காட்டினார். மேலும் அவரைக் கொன்ற பிறகு ஜனமேஜயன் தனது மகளை பௌமா-கர சிம்மாசனத்தில் அமர்த்தினார் என்று கருதுகிறார். இருப்பினும், மற்ற வரலாற்றாசிரியர்கள் இந்தக் கோட்பாட்டுடன் உடன்படவில்லை. இந்த சூழலில் ஒட்டர நாடு என்பது இன்றைய ஒடிசா முழுவதையும் குறிக்கவில்லை. ஆனால் இன்றைய டேங்கானாள் மாவட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு சிறிய பகுதியை மட்டுமே குறிக்கிறது. இந்தக் கோட்பாட்டி ஒட்டர நாட்டின் அரசன் ஒருவேளை ஒரு கலகக்கார பாஞ்சா அரசனாக இருக்கலாம். [3]
முதலாம் ஜனமேஜயனின் மகனான முதலாம் யயாதி (ஆட்சி பொ.ச. 922-955) தனது குடும்பத்தின் பாரம்பரிய கோட்டையாக இருந்த தெற்கு கோசலப் பகுதியில் ஏராளமான கிராங்களுக்கு உதவிகளைச் செய்துள்ளார். இந்த மானியங்கள் யயாதிநகரில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முன்னாள் சோமவம்சியின் தலைநகரான வினிதபுரத்தைப் போலவே இருக்கலாம். மேலும் யயாதி தனது பெயரையும் மாற்றிக்கொண்டிருக்கலாம். [5] தலைநகர் பின்னர் பௌமா-கர தலைநகர் குகேசுவரபதாகைக்கு (நவீன ஜாஜ்பூர்) மாற்றப்பட்டது. இது அபினவ-யயாதிநகரம் ("யயாதியின் புதிய நகரம்") என மறுபெயரிடப்பட்டது. [6]
உத்யோதகேசரியின் ஆட்சிக்குப் பிறகு, சோமவம்சி இராச்சியம் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. இரத்னபுரியின் காலச்சூரிகள் சோமவம்சிகளின் மேற்குப் பகுதிகளின் சிலவற்றைக் கைப்பற்றினர். வம்சம் வடமேற்கில் நாகர்களிடமும், தெற்கில் கீழைக் கங்கர்களிடமும் தனது பிரதேசங்களை இழந்தது. கடைசி சோமவம்சி ஆட்சியாளரான கர்ணதேவனின் ஆட்சிப் பகுதி இன்றைய பாலேசுவர் மற்றும் பூரி மாவட்டங்களுக்கு இடையே உள்ள கடற்கரைப் பகுதியில் மட்டுமே இருந்தது. பொ.ச.1114 வாக்கில், சோமவம்சி அரசன் கங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கனிடம் வீழ்ந்தான். [7]
சோமவம்சி அரசர்கள் சைவர்கள் என்பது அவர்களின் கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது. [3] சைவ மதத்தின் பாசுபதம் மற்றும் மட்டமயூர பள்ளிகள் அவர்கள் காலத்தில் பிரபலமாக இருந்ததாகத் தெரிகிறது. [3]
பௌத்தத்தில் இருந்து பிராமணியத்திற்கு (நவீன இந்து மதத்தின் முன்னோடி) படிப்படியான நகர்வு முந்தைய பௌமா-கர காலத்தில் தொடங்கியது. மேலும் இந்த வளர்ச்சி சோமவம்சி ஆட்சியின் போது துரிதப்படுத்தப்பட்டது. [8] ஒடிசாவின் பாரம்பரிய கணக்குகள் சோமவம்சிகள் இந்து சமயத்தைப் பரப்புவதில் பெரும் பங்களிப்பு செய்ததாகக் குறிப்பிடுகின்றன. [7]
சோமவம்சி மன்னர்கள் பாரம்பரியக் கணக்குகளின்படி பெரிய கோயில்களைக் கட்டுபவர்களாக இருந்தனர். ஆனால் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த சிறிய கல்வெட்டு ஆதாரங்கள் கூட இல்லை. புவனேசுவரத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களை கட்டியவர் யயாதி கேசரி என்று புராண சரித்திரமான மதல பாஞ்சி குறிப்பிடுகிறது. [7] இந்த உரை சோமவன்சி ஆட்சியாளர்களான முதலாம் யயாதி மற்றும் இரண்டாம் யயாதி ஆகியோரை "யயாதி கேசரி" ஆக இணைத்ததாகத் தெரிகிறது. [9] முக்தேசுவரர் கோயில், ராஜாராணி கோயில் உட்பட பல கோயில்கள் சோமவம்சி காலத்தைச் சேர்ந்தவை.[10] இருப்பினும், பிரம்மேசுவரர் கோயில் மட்டுமே சோமவம்சிகளின் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு அங்கிருக்கும் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.[7]
ஒரு புராணத்தின் படி, யயாதி கேசரி தான் நடத்தும் அசுவமேத யாகத்திற்கு கன்னியாகுப்ஜாவிலிருந்து (கன்னோசி) 10,000 பிராமணர்களை தனது இராச்சியத்திற்கு அழைத்து வந்தார். [11]
சோமவம்சி ஆட்சியின் போது வெளியிடப்பட்ட பல செப்புத் தகடுகளும், சிறிய எண்ணிக்கையிலான கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்றைய ஒடிசாவில் உள்ளன. [12] செப்புத் தகடுகள் சரபபுரியர்கள் மற்றும் பாண்டுவாசிகளின் கல்வெட்டுகளைப் போலவே உள்ளன: ஒவ்வொரு கல்வெட்டும் மூன்று செப்புத் தகடுகளின் தொகுப்பாகும். [2]
கோவிந்தபூர் கல்வெட்டை வழங்கிய இரணகேசரின், கேசரி (சோமவம்சி) யைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இதை உறுதிப்படுத்த முடியாது. [13]
வீரநரகேசரியின் இலிங்கராஜா கோயில் கல்வெட்டு, சோமவம்சி ஆட்சிக்காலம் என்று தவறாகக் கூறப்பட்டுள்ளது. வழங்கியவரின் பெயர் "வீரவரகேசரி" என்று தவறாகப் படிக்கப்பட்டது. மேலும் அவர் கேசரி (சோமவம்சி) வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. கீழைக் கங்க அரசன் முதலாம் நரசிம்ம தேவனாக இருக்கலாம் . [13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.