டொர்னாடோ From Wikipedia, the free encyclopedia
சுழல் காற்று (Tornado) என்பது மின்னலையும், இடியையும் தோற்றுவிக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்த, கூடிய வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரல் ஆகும். இச்சுழல் காற்று சிறிய அளவிலான சூறாவளியாகும். இதை சூறாவளி என்றும் கூறுவர்.[1] கடும் இடி, மின்னல், புயல்கள் ஏற்படும் போதே டொர்னாடோக்கள் உருவாகின்றன. இவை சூறாவளியிலும் பார்க்க பயங்கரமானவை. இவை குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடியன. மிகப்பெறும் சுழல்காற்று கி. பி. 1999 ஆம் ஆண்டு வீசிய பிரிட்சு கிரேக்கு சுழல் காற்று ஆகும். இது மணிக்கு முந்நூறு மைல்கள் வேகத்தில் அடித்தது. இதன் அகலமே இரண்டு மைல்கள் இருந்ததுடன் நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் நகர்ந்து சென்று பெருத்த சேதத்தை விளைவித்தது [2][3][4]
சுழல் காற்றொன்றின் விட்டம் பல மீட்டர்கள் முதல் 2 கிலோமீட்டர்கள் வரையாக இருக்கக்கூடும். சராசரி சுழல் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரை வேறுபடலாம். இவ்வாறு சுழல்கின்ற வளி நிரலின் நடுப்பகுதியில் வளிமண்டல அமுக்கம் மிகக் குறைவாகக் காணப்படும். எனவே இவ்வகைச் சுழல் காற்று தரையிலுள்ள பொருட்களை உறிஞ்சி மேலே இழுத்தெடுக்கின்றது.
புவியின் வடவரைக் கோளத்தில் உருவாகும் சுழல் காற்றுக்கள் தம் தாழமுக்க மையத்தைச் சுற்றி இடஞ்சுழியாகச் சுழற்சியடைகின்றன. அதேவேளை, புவியின் தென்அரைக் கோளத்தில் உருவாகும் சுழல்காற்றுக்கள் வலஞ்சுழியாகச் சுழல்கின்றன. சுழல் காற்றொன்று இடம்பெயராமல் ஒரேயிடத்தில் சுழன்று வீசலாம். அல்லது வலிமையாகச் சுழற்சியடைகின்றவாறே முன்னோக்கி நகரலாம். இந்த நகர்வு வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இருக்கக்கூடும்.
சாதாரண புயல் காற்றைப் போலன்றி தான் நகரும் குறுகிய பாதை நெடுகே மட்டுமே சுழல் காற்று அழிவை ஏற்படுத்துகிறது. சுழல்காற்றின் விட்டத்துக்கு ஏற்பவே இவ்வழிவுப் பாதையின் அகலம் அமைந்திருக்கும். இரு புறத்திலும் உள்ள வீடுகள் எவ்வித பாதிப்பும் அடையாத நிலையில் நடுவிலுள்ள வீடு மாத்திரம் சுழல்காற்றினால் சிதைந்துபோன நிகழ்வுகள் சகஜமாக இடம்பெற்றுள்ளன.
மிகத் தாழ்ந்த அமுக்கங்களில், ஒடுங்கிய நீராவியினால் ஆக்கப்பட்ட நிரலொன்று உருவாகும் சந்தர்ப்பங்களில் சுழல்காற்று கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இருக்கும். மழை மேகம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் அவ்வேளைகளில் தோற்றமளிக்கும். சுழல்காற்று பெருமளவு புழுதியைக் கிளப்பிச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக மாறும்.
முதிர்ந்த சுழல் காற்றொன்று ஒரு தூண் போல நேராகவோ அல்லது சாய்வாகவோ காணப்படலாம். சிலவேளைகளில் முகில் முழுவதும் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல அது பரந்ததாகத் தோன்றலாம். இன்னுஞ் சில சந்தர்ப்பங்களில் யானையின் அசைகின்ற தும்பிக்கை போல அது தென்படக்கூடம். வன்மையான சுழல் காற்றொன்றின் போது பிரதான சுழலைச் சுற்றிவரப் பல சிறு சுழல்கள் காணப்படும்.
இச்சுழல் காற்றுகள் அண்டார்டிகா கண்டம் தவிர்த்து அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளிலும் வீசுகின்றன. உலகிலே ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையான சுழல் காற்றுக்கள் தோன்றும் நாடு ஐக்கிய அமெரிக்காவாகும். இங்கு உள்ள இராக்கி மலைத்தொடர் பகுதியிலும் ஆப்பலேச்சிய மலைத்தொடர் பகுதிலும் சுழல்காற்று அடிக்கடி வீசுவதால் இதை சுழல்காற்று பகுதி என்றே அழைக்கின்றனர்.(Tornado Alley)[5]
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கின்றது. இவை தவிர சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, வங்காளதேசம் உட்படப் பல நாடுகள் சுழல் காற்றுத் தாக்குதலுக்கு உட்படுகின்றன.
சுழல் காற்றுக்களின் வேகங்களை நேரடியாக அளப்பது சிரமமான காரியமாகும். அது ஆபத்தானதும்கூடää அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த வளிமண்டலவியற் பேராசிரியரான புச்சியித்தா தெத்துசுயா என்பவர் சுழல் காற்றுக்களை வகைப்படுத்துவதற்கான அளவுத்திட்டமொன்றை 1971ம் ஆண்டு அறிமுக்கப்படுத்தினார். சுழல் காற்றினால் கட்டடங்களுக்கும் மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட ஏனைய அமைப்புகளுக்கும் ஏற்படும் சேதத்தை அடிப்படையாக வைத்தே இந்த புச்சியித்தா அளவுத்திட்டம் (F-Scale) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுத்திட்டத்தின்படி F0, F1, F2, F3, F4, F5 என ஆறு வகைகளாகச் சுழல் காற்றுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றுள்
F5 வகை சுழல்காற்று வீடுகளை அத்திவாரத்தோடு பிடுங்கி எறியக்கூடியதாக இருக்கும்.
F4, F5 வகைச் சுழல்காற்றுக்கள் தாம் செல்லும் பாதை நெடுகே பேரழிவை ஏற்படுத்த வல்லவை. இவற்றினால் வீடுகளும், பெருமரங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு வீசப்படுகின்றன. பஸ்வண்டிகள், ரெயில் வண்டிகள் போன்ற பெரிய வாகனங்கள் கூட நிலத்திலிருந்து தூக்கி எறியப்படுகின்றன. வீட்டுக் கூரைகள் பல கிலோமீட்டர் துரத்துக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றன. இவ்வாறு தூக்கி எறியப்படும் பொருட்கள் காரணமாக மேலும் சேதங்கள் ஏற்படுகின்றன. வன்சுழல் காற்றினால் தூக்கி எறியப்படும் வேகம் காரணமாக மென்மையான பொருட்கள் கூட பேரழிவை ஏற்படுத்தலாம்.
ஒப்பளவு | காற்றின் வேகம் (மதிப்பீடு)[6] |
சார்பு அதிர்வெண் | ஏற்பட்ட சேதங்கள் அதற்கான விளக்கம் | ||
மணிக்கு மைல் | மணிக்கு கி.மீ | ||||
ஈஎப்0 | 65–85 | 105–137 | 53.5% | குறையளவு பாதிப்பு அல்லது பாதிப்பில்லை.
கூரைகளின் மேற்பரப்பு சிறிது பாதிப்புக்குட்பட்டது; மழை பொழிவு அல்லது வாகனங்களுக்கு சில சேதம், ஆழமின்றி வேரூன்றியுள்ள மரங்கள் சாய்ந்தன. உறுதிப்படுத்தப்பட்ட சூறைக்காற்றுகள் இந்த ஈஎப்0 அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை |
|
ஈஎப்1 | 86–110 | 138–178 | 31.6% | மிதமான பாதிப்பு.
கூரைகள் தூக்கிவீசப்பட்டது;அமெரிக்காவின் நகரும் வீடுகளின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டன அல்லது மோசமாக சேதமடைந்தன; வெளிப்புற கதவுகள் இழப்பு; ஜன்னல்கள் மற்றும் பிற கண்ணாடி உடைந்தது |
|
ஈஎப்2 | 111–135 | 179–218 | 10.7% | குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்பு.
நன்கு கட்டப்பட்ட வீடுகளின் கூரைகளை கிழித்துவிட்டது; சட்டக வீடுகளின் (Frame Houses) அடித்தளங்கள் மாறிவிட்டன; நகரும் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டன; பெரிய மரங்கள் முறிந்தன அல்லது பிடுங்கப்பட்டன; மகிழுந்துகள் தரையிலிருந்து தூக்கி எறியப்பட்டன. |
|
ஈஎப்3 | 136–165 | 219–266 | 3.4% | கடுமையான பாதிப்பு.
நன்கு கட்டப்பட்ட வீடுகள் முழுவதும் அழிக்கப்பட்ட ;வணிக வளாகங்கள் போன்ற பெரிய கட்டிடங்கள் கடுமையான சேதம்; ரயில்கள் ரத்து; மரங்களின் வெளிப்புறப் பட்டைகள் பெயர்ந்தன; கனரக வாகனங்கள் தரையிலிருந்து தூக்கி எறிந்தன; பலவீனமான அடித்தளங்களை கொண்ட கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன |
|
ஈஎப்4 | 166–200 | 267–322 | 0.7% | மோசமான பாதிப்பு
நன்கு கட்டப்பட்ட சட்ட வீடுகள் முழுவதுமாக தரைமட்டமாகின.மகிழுந்துகள் மற்றும் பெருவுருவப் பொருட்கள் கூட தூக்கி வீசப்பட்டன. |
|
ஈஎப்5 | >200 | >322 | <0.1% | மொத்தமாக பாதிப்பு.
நன்கு வலுவாக-கட்டமைக்கப்பட்ட, கட்டப்பட்ட வீடுகள் இந்த ஈஎப்5 அளவு சூறைக்காற்றால் அகற்றப்பட்டன,கட்டுமானங்களின் அடித்தளம் அகற்றப்பட்டது; எஃகால் வலுவூட்டப்பட்ட திண்காறை (கான்கிரீட்) கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன; உயரமான கட்டிடங்கள் தகர்க்கப்படுகின்றன அல்லது கடுமையான கட்டமைப்பு குறைபாடுகள் ஏற்படுத்தப்பட்டன |
சுழல்காற்றுக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றி இது வரை தெளிவாக அறியப்படவில்லை. இடி முகிலை நோக்கி மேலே எழும்பும் வெப்பமான காற்றுக்கும், முகிலிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் குளிரான காற்றுக்கும் இடையில் ஏற்படும் சிக்கலான இடைத்தாக்கங்களே சுழல்காற்றுக்குக் காரணமாக அமைவதாக வானிலையியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
கடலின் மீது சுழல்காற்று ஏற்படும்போது கடல் நீர் முகிலை நோக்கித் தாரையாக உறிஞ்சி இழுக்கப்படும். இத்தோற்றப்பாடு முகில் நீர்த்தாரை என அழைக்கப்படுகின்றது.முகில் நீர்த்தாரைகள் (ஆங்கிலம் :Waterspout) என்பது சுழல் காற்றின் போது கடல் அல்லது பரந்த நீர்ப்பரப்பின் மேற்பரப்பிலிருந்து செங்குத்தான ஆழ்ந்த தூண்போன்ற (பொதுவாக புனல் வடிவத்தில் மேகம் தோன்றுதல்) வடிவத்தில் வானை நோக்கி நீர் மேலெழும்பும் நிகழ்வு ஆகும். இந்த நீர்த்தாரைகளில் சில திரள்நெருக்க முகிலுடனும் (cumulus congestus cloud), சில திரள்வடிவ மேகத்துடனும் (cloud cumuliform cloud), மேலும் சில திரள் கார்முகிலுடனும் (cumulonimbus cloud) தொடர்பு கொண்டிருக்கக்கூடும் [7]. பொதுவாக இவற்றை நீரின் மேல் சுழன்று மேலெழும்பும் சுழல் காற்று என வரையறுக்கலாம். இதனை மேகத்தால் கடல் நீர் உறிஞ்சப்படுதல் என்று எளிதாகக் கூறலாம் [7][8][9] நிலப்பகுதிகளில் விட நீர்ப்பரப்பில் தோன்றும் சுழல் பலவீனமானதாக இருந்தாலும், காற்றிடை புயலியக்கத்தின் (mesocyclones) போது வலுவான நீர்த்தாரை நிகழ்வுகள் நிகழ்கின்றன [10][11]. பெரும்பாலான நீர்த்தாரைகள் நீரை உறிஞ்சாது அவை தண்ணீர் மீது சிறிய மற்றும் பலவீனமான சுழலும் காற்றுத்தம்பத்தை உருவாக்குகின்றன [7][12]. வெப்பம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. ஐரோப்பா, நியூசிலாந்து,அமெரிக்கப் பெரு ஏரிகள், அன்டார்க்டிக்கா [13][14] உள்ளிட்ட மற்ற இடங்களிலும் அரிய நிகழ்வாக பெரிய உப்பு ஏரியிலும் முகில் நீர்த்தாரை நிகழ்வுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன [15]. கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும் .[16]. கடல்நீரோடு மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் இவ்வாறு முகிலை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதுண்டு. சில இடங்களில் மழை பெய்யும் போது வானிலிருந்து மீன்கள் விழுவதற்கு இவ்வகைச் சுழல்காற்றே காரணம் என நம்பப்படுகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.