From Wikipedia, the free encyclopedia
சிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை நூலாம்பூச்சி [1] என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையா. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751 வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு [2] விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.[3]. சிலந்திகள் அராக்னிடா (Arachnida) என்னும் வகுப்பில், சிலந்திப்பேரினம் அல்லது அரனியே (Araneae) என்று அழைக்கப்படும் வரிசையில் உள்ள உயிரினம்.
சிலந்திகள் | |
---|---|
an Orb-weaver spider, Family: Araneidae | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | Chelicerata |
வகுப்பு: | அராக்னிடுகள் |
வரிசை: | Araneae Clerck, 1757 |
Suborders | |
Mesothelae | |
உயிரியற் பல்வகைமை | |
110 குடும்பங்கள், c.42,751 இனங்கள் |
உடற்கூறு அடிப்படையில் சிலந்திகள் மற்ற கணுக்காலிகளைப் போலல்லாமல் உடல் பகுதிகள் இரண்டு இணைவுத் துண்டுகளாக (tagmata) காணப்படுகிறது. தலைநெஞ்சுப்பகுதி (cephalothorax) மற்றும் வயிற்றுப்பகுதி (abdomen) என்ற அந்த இரண்டு பகுதிகள் சிறிய உருளை வடிவ காம்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பூச்சிகளைப் போல சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் (antennae) இல்லை.மிகவும் பழமையான மிசோதீலே (Mesothelae) குழுவைச்சார்ந்த சிலந்தியைத் தவிர மற்ற கணுக்காலிகளில் சிலந்திகள் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைக் கொண்டுள்ளன.தலைநெஞ்சுப்பகுதியில் நரம்புச்செல்கள் கொத்தாக இணைக்கப்பட்டுள்ளன. மற்ற கணுக்காலிகளைப் போல் சிலந்திகளின் கால்களில் விரிவடையக்கூடிய தசைகள் காணப்படுவதில்லை அதற்குப் பதிலாக நீர்ம அழுத்தத்தால் (hydraulic pressure) மேலெழும்பித் தாவுகின்றன.
சிலந்தியின் வயிற்றுப் பகுதியில் துணை உறுப்பாகக் காணப்படும் ஆறு விதமான நூற்பு சுரப்பி உறுப்புகள் பட்டு நூலினை வெளித்தள்ளுகின்றன. ஒட்டும் தன்மையுள்ள நூலின் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொறுத்து சிலந்தி வலைகளின் அளவுகளில் பரவலாக வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுருள் கோள வலைகள் (spiral orb web) சிலந்திகளின் ஆரம்பகால வலைப்பின்னல் வடிவமாக இருக்கின்றன. சில சிலந்திகள் சுருள் கோள வலைகளை விட அதிகப்படியான சிக்கலான நூற்கூடுகளைக் கட்டுகின்றன.பட்டு உற்பத்தி செய்யும் கூம்பல் (spigots) கொண்ட சிலந்தி போன்ற இனம் (arachnids) 386 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெவோனியன் புவியியல் காலத்தில் (Devonian period) தோன்றின, ஆனால் அந்த விலங்குகளுக்கு வெளிப்படையாக நூற்பு உறுப்புகள் (spinnerets) இல்லை.உண்மையான சிலந்திகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய கரிமப்பாறைகளில் (Carboniferous rocks) புதைபடிவங்களாக கண்டிறியப்பட்டுள்ளன. அவை அடிப்படை சிலந்தி இனமான மீசோதீலே பிரிவைச் சார்ந்த சிலந்தியினத்துடன் ஒத்திருந்தது.தற்போதுள்ள நவீன சிலந்தியினங்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்றாய காலத்தில் தோன்றிய மைகலோமார்ஃபே (Mygalomorphae) மற்றும் அரானியோமார்ஃபே (Araneomorphae) ஆகியனவாகும்.
சிலந்திகளின் உடல், வழக்கமாக கணுக்காலிகளில் காணப்படும், பல்பகுதி உடலமைப்பு கொண்டது எனினும் பிற கணுக்காலிகளில் இல்லாதவாறு, இதன் இருபகுதியான உடற்பகுதிகள் இணைந்து இருக்கின்றன. கணுக்காலிகளில் அறுகால் பூச்சிகளில் காணப்படுவது போன்ற உணர்விழைகள் சிலந்திகளுக்குக் கிடையா. சிலந்திகளுக்கு நஞ்சு பாய்ச்சும், கொடுக்கு போன்ற வாய்ப்பகுதி உண்டு. இதனைக் கெலிசெரே (Chelicerae) என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர் (கிரேக்கச் சொல் keras என்றால் கொம்பு என்று பொருள் (cera <keras)). சிலந்துகளின் இருபகுதி உடலமைப்பு என்பதை இரு டாக்மாட்டா (tagmta) என்று கூறுவது வழக்கம்.[4]. இந்த இரு உடற்பகுதிகளும் ஒருங்கிணைந்து ஒட்டிய வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், செஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் தலை-நெஞ்சகம் அல்லது செபாலோ-தோராக்ஃசு (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை வயிறு (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். தலை-நெஞ்சகமும், வயிற்றுப்பகுதியும் ஆன இவ்விரு பகுதிகளையும் மெல்லிய உருளை வடிவான இணைப்புத் தண்டு இணைக்கின்றது. இந்த இணைப்புத்தண்டை பெடிசெல் (pedicel) என்பர். இதன் குடல் மிகமிகச் சிறியதாகையால் சிலந்திகள் பெரிய கெட்டியான பொருளை உட்கொள்ள இயலாது. சவைக்கும் வாய்ப்பகுதியும் கிடையாது. எனவே, சிலந்திகள் தான் உண்னும் இரையின் உடலினுள் தன்னுடலில் சுரக்கும் நொதி என்னும் செரிக்கும் திரவத்தை செலுத்துகிறது. இரையின் தசை பகுதி அனைத்தும் அந்நீர்மத்தில் கரைந்து நன்கு நீர்மமாக்கிவிடுகின்றது. இந்நீர்ம்ப் பகுதியை சிலந்திகள் உறிஞ்சி உண்ணுகின்றன சிலந்தி இன வகைகளின் எளிமையான மெசொத்தெலே (Mesothelae) என்னும் வகையைத் தவிர, மற்ற எல்லா வகையான சிலந்திகளிலும், மற்ற கணுக்காலிகளைப் போல் அல்லாமல், சிறப்பாக நடுவிருந்து கட்டுப்படுத்தும் நரம்புமண்டலம் உள்ளது. மற்ற கணுக்காலிகளில் இருப்பதைப் போன்று தன் கால்களில் வெகுவாக மடக்கி நீட்டக்கூடிய தசைகள் இல்லை. ஆனால் அவற்றுக்கும் மாறாக, வயிற்றுப் பகுதியில் உள்ள நூலிழை நூற்கும் சுரப்பிகள் உள்ளன. தன் உடலில் ஒன்று முதல் ஆறுவகையான நூல்நூற்கும் சுரப்பிகள் வயிற்றுப்பகுதியில் உண்டு. சிலந்திநூல் மிகவும் மெலிதாக இருந்தாலும், அதன் அளவை ஒப்பிடும்பொழுது அது மிகுந்த வலிமையும், மிகுந்த நீட்சித்திறனும் (elasticity) கொண்டது . செயற்கையாக செய்யப்படும் நூலிழைகள் யாவற்றினும் வலிமை முதலான பண்புகளில் சிறந்தது.
2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஊனுண்ணா ஒரேயொரு சிலந்தியைத்தவிர மற்றவை எல்லாம் பிற சிறு பூச்சிகளையும், பிற சிறு உயிரினங்களையும், பிற சிலந்திகளையும் கொன்றுண்டு வாழும் வகையைச் சேர்ந்தவை. ஒரு சில சிலந்திகள், பறவைகளையும், பல்லி போன்ற ஊர்வன வகைகளையும் உண்ண வல்லன.
சிலந்திகளின் உடல் மெலிதான உடற்பகுதிகளால் ஆனதால் தொல்லுயிர் எச்சம் அல்லது புதை படிவங்கள் கிடைப்பது அரிது. சிலந்தி போன்ற அராக்னிடுகளின் வகையான நூலிழை விடும் பூச்சிகள் 386 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னிருந்த தெவோனியன் (Devonian) காலப்பகுதியில் இருந்தன, ஆனால் அவற்றுக்கு நூலிழை விடும் தனி உறுப்புகள் இல்லை. உண்மையான சிலந்தி வகைகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அம்பரில் புதியுண்ட ஏறத்தாழ 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேத்தேசியஸ் காலத்து தொல்லுயிர் எச்சங்கள் இடைத்துள்ளன்.
மற்ற கணுக்காலிகளை விட சிலந்திகள் உடற்குழியுள்ள (coelomates) உயிரினமாகும். உடற்குழியானது சுருங்கி இனப்பெருக்க மற்றும் கழிவுநீக்க மண்டலத்தை சுற்றிக் காணப்படுகிறது. உடற்குழியின் பெரும்பகுதி கோமோசீல் (hemocoel) எனும் உடற்குழி திரவ அறை காணப்படுகிறது.உடல் நீளத்திற்கும் நீண்டுள்ள ஒரு சிற்றறையாக இருக்கிறது . அதன் வழியே குருதித்திரவம் பாய்கிறது.குழல் வடிவலான இதயம் உடலின் மேற்பகுதியில் காணப்படுகிறது.இதில் ஆசிடியா (ostia) என்றழைக்கப்படும் சில வெட்டு அமைப்புகள் காணப்படுகிறது.இவ்வமைப்பு ஒருபோக்கி, தடுக்கிதழ் (Valve) போன்று செயல்பட்டு குருதி திரும்பிப் பாய்வதைத் தடுக்கிறது [5].எப்படியாயினும் இதயமானது அடிவயிற்றின் மேற்பகுதியை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. இதயத்திலிருந்து ஒரு தமனி வழியாக கோமோசீலுக்குள் இரத்தம் வெளியேற்றப்பட்ட பின் அடிவயிற்றுப்புறமுள்ள பின்பக்கத் தமனி திறந்து துணைத் தமனிகள் வழியாக ஒரு காம்பின் மூலம் தலைநெஞ்சுப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சிலந்தியில் திறந்த நிலைக் குருதியோட்ட அமைப்பு (open circulatory system) காணப்படுகிறது. சிலந்தியின் குருதியிலும் தட்டு நுரையீரலிலும் (book lung) ஆக்சிசனை திறம்பட கடத்தும் சுவாச நிறமியான ஹியூமோசயனினைக் (hemocyanin) கொண்டுள்ளன [6].
பல்வேறு அளவுகளில் சிலந்திகள் காணப்படுகின்றன. கொலம்பியா நாட்டில் காணப்படும் மிகச்சிறிய சிலந்தியான பட்டு டிகுவா (Patu digua) உடலின் நீளம் 0.37 மி.மீ (0.015 அங்குலம்). மிகப்பெரியதும் கனமானதுமான டரன்டுலாஸ் (tarantulas) 90 மி.மீ (3.9 அங்குலம்) உடல் அளவும் அதன் கால்கள் 250 மி.மீ (9.8 அங்குலம்) நீண்டும் காணப்படுகின்றன[7].
சிலந்திகள் மீசோதீலே மற்றும் ஒபிஸ்தோதீலே ஆகிய இரண்டு துணை வரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒபிஸ்தோதீலே மேலும் பிரிந்து மைகலோமார்ஃபே மற்றும் அரானியோமார்ஃபே ஆகிய இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.கிட்டத்தட்ட 46,000 தற்போது வாழும் சிலந்தியினங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இவை 114 குடும்பங்களில் 4000 பேரினங்களிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[8]
சிலந்திகளின் பல்லுயிர் பரவல் [8][9] (தோராயமான எண்ணிக்கை ) | இயல்புகள் | ||||||
உள் வரிசை | இனம் | பேரினம் | குடும்பங்கள் | அடிவயிற்றில் பிரிக்கப்பட்ட தட்டுகள்[10] | அடிவயிற்றில் காணப்படும் நூற்பு சுரப்பிகள் | நூற்பு உறுப்புகள் [11] | கொடுக்கின் தாக்கும் திசை [12] |
---|---|---|---|---|---|---|---|
மீசோதீலே | 87 | 5 | 1 | உண்டு | உண்டு | நான்கு சோடிகள் சில இனங்களில் வயிற்றுப்புற மையத்தில் ஒரு சோடி கலந்து காணப்படும் | கீழ்புறமாகவும் முன்புறமாகவும் |
ஒபிஸ்தோதீலே: மைகலோமார்ஃபே | 2,600 | 300 | 15 | சில புதைபடிவங்களில் மட்டும் | இல்லை | ஒன்று , இரண்டு அல்லது மூன்று சோடிகள் பின்பக்க வயிற்றுப்பகுதியல் காணப்படும் | |
ஒபிஸ்தோதீலே: அரானியோமார்ஃபே | 37,000 | 3,400 | 93 | இடுக்கி போன்று விளிம்பிலிருந்து மையம் நோக்கி |
மிக்காரியா சொசியாபிலிஸ் (Micaria sociabilis) என்னும் இனத்தைச் சேர்ந்த ஆண் சிலந்திகள் பெரிய பெண் சிலந்திகளுடன் உடலுறவு கொள்ளாமல் அதனை கொன்று உணவாக்கி கொள்கிறது என சிக் குடியரசில் உள்ள மசாரைக் பல்கலைக்கழகத்தின் லென்கா செண்டன்ஸ்காவின் ஆய்வு கூறுகிறது.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.