From Wikipedia, the free encyclopedia
கை பாக்சு (Guy Fawkes, /fɔːks/; ஏப்ரல் 13, 1570 – சனவரி 31, 1606),[lower-alpha 1] அல்லது இசுப்பானியருக்காகப் போராடியபோது கைய்டொ பாக்சு (Guido Fawkes) 1605ஆம் ஆண்டில் தோல்வியில் முடிந்த வெடிமருந்து சதித்திட்டத்தை தீட்டிய ஆங்கில கத்தோலிக்க குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
கை பாக்சு | |
---|---|
ஜார்ஜ் குருக்சங்க் வரைந்த கை பாக்சின் படம். 1840இல் வெளியான கை பாக்சு புதினத்தில் வெளியானது. | |
விவரங்கள் | |
பெற்றோர் | எட்வர்டு பாக்சு, எடித் (தி.மு பிளேக் அல்லது ஜாக்சன்) |
பிறப்பு | ஏப்ரல் 13, 1570 (ஊகிக்கப்பட்டது) யார்க், இங்கிலாந்து |
பிற பெயர்(கள்) | கைய்டொ பாக்சு, ஜான் ஜான்சன் |
தொழில் | படைவீரர், படை அதிகாரி |
Plot | |
பங்கு | வெடிமருந்துகள் |
பட்டியலில் பதிவு | மே 20, 1604 |
பிடித்தவர் | நவம்பர் 5, 1605 |
சதி(கள்) | உயர்ந்த தேசத்துரோகம் |
அபராதம் | குதிரையில் இழுத்துவந்து, தூக்கிலிட்டு பின்னர் நான்கு துண்டாக வெட்டுதல் |
இறப்பு | சனவரி 31, 1606 (அகவை 35) வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், இங்கிலாந்து |
காரணம் | தூக்கு |
பாக்சு பிறந்ததும் வளர்ந்ததும் யார்க்கிலாகும். பாக்சு எட்டு அகவையராக இருக்கும்போதே அவரது தந்தை இறந்தார்; அவரது அன்னை இரண்டாம் முறையாக திருமணம் செய்தவர் ஆங்கிலத் திருச்சபைக்கு எதிரான கத்தோலிக்கர். பாக்சும் கத்தோலிக்கராக மாற்றப்பட்டார். ஐரோப்பிய கண்டம் சென்று கத்தோலிக்க எசுப்பானியாவிற்கும் சீர்திருத்த டச்சுக்காரர்களுக்கும் இடையேயான எண்பதாண்டுப் போரில் எசுப்பானியர் அணியில் பங்கேற்றார். இங்கிலாந்தில் கத்தோலிக்கப் புரட்சிக்கு ஆதரவு நாடி எசுப்பானியாவிற்குச் சென்று தோல்வியுற்றார். அங்கு தாமசு வின்டூரை சந்தித்து இருவரும் இங்கிலாந்திற்குத் திரும்பினர்.
வின்டூர் பாக்சிற்கு இராபர்ட்டு கேட்சுபியை அறிமுகப்படுத்தினார். கேட்சுபி அரசர் முதலாம் ஜேம்சைக் கொன்று கத்தோலிக்க முடியாட்சியை அரியணை ஏற்றத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். சதியாளர்கள் பிரபுக்கள் அவையின் கீழே இருந்த அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வெடிமருந்தை சேகரித்து வைக்கும் பொறுப்பை கை பாக்சிடம் கொடுத்தனர். பெயரில்லாக் கடிதம் ஒன்றினால் எச்சரிக்கை பெற்ற அதிகாரிகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை முழுமையும் நவம்பர் 5, 1605 அன்று சோதனை நடத்தினர். கை பாக்சு வெடிமருந்துப் பொருட்களை சேகரித்து அவற்றிற்கு பாதுகாப்பாக இருந்ததைக் கண்டறிந்தனர். அடுத்த சில நாட்கள் கை பாக்சு தீவிரமான விசாரணைக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டார். இறுதியில் பாக்சு குற்றத்தை ஒப்புக்கொண்டார். உடனே அவருக்கு சனவரி 31 அன்று தேசத்துரோகிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த கடுமையான தண்டனையான குதிரையில் கட்டி இழுத்துவந்து தூக்கிலிடப்பட்டு, பின்னர் நான்கு துண்டாக வெட்டப்படுதல் என்ற தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தூக்குமேடையிலிருந்து கீழே விழுந்து கழுத்து உடைந்து இறந்தார்; இதனால் தனக்கான கொடூரமான தண்டனையிலிருந்து தப்பித்தார்.
வெடிமருந்து சதித்திட்டத்தின் குறியீடாக கை பாக்சு அறியப்படுகிறார். இந்த சதித்திட்டத்தின் தோல்வி கை பாக்சு நாள் (நவம்பர் 5, 1605) என பிரித்தானியாவில் கொண்டாடப்படுகின்றது. வழமையாக கை பாக்சின் கொடும்பாவி சொக்கப்பனையாக எரிக்கப்படுகிறது; கூடவே வாணவெடி காட்சிகளும் நடைபெறுகின்றன.
நவம்பர் 5, 1605இல் இலண்டன் மக்கள் மன்னர் கொலை முயற்சியிலிருந்து தப்பித்ததை சொக்கப்பனை ஏற்றியும் வாணவெடிகளை வெடித்தும் கொண்டாடத் தூண்டப்பட்டனர்..[1] ஒவ்வொரு நவம்பர் 5ஆம் நாளும் நன்றி தெரிவிப்பு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இது 1859வரை செயற்பாட்டில் இருந்தது.[2] சதித் திட்டத்தில் ஈடுபட்ட 13 பேரில் ஒருவராக இருந்தபோதும் இந்த சதித்திட்டத்தின் ஒரே அடையாளமாக கை பாக்சு தொடர்புபடுத்தப்படுகிறார்.[3]
பிரித்தானியாவில், நவம்பர் 5 , கை பாக்சு இரவு, கை பாக்சி நாள், சதி இரவு[4], சொக்கப்பனை இரவு எனப் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றது. [5] 1650களிலிருந்து சொக்கப்பனையுடன் வாணவேடிக்கைகளும் நிகழ்கின்றன. 1673இல் முடி சூடவிருந்த இளவரசர் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு கத்தோலிக்கராக மாறியதை பொதுவில் அறியப்படுத்திய பிறகு கொடும்பாவியை கத்தோலிக்க திருத்தந்தையாக பாவித்து கொளுத்துவது மரபாயிற்று.[1] இதேபோன்று பொதுமக்களின் கோபத்திற்கு ஆளான பவுல் குருகர், மார்கரெட் தாட்சர் போன்றோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டுள்ளன.[6][2] "கை" கொடும்பாவியை வழமையாக சிறுவர்கள் பழையத் துணிகள், செய்தித்தாள்களிலிருந்து உருவாக்குவர்; முகமூடியையும் தரிப்பர்.[2] 19ஆம் நூற்றாண்டில், "கை" என்ற சொல் வழமையல்லா உடை உடுத்தியவரைக் குறிப்பதாக இருந்தது. ஆனால் அமெரிக்க ஆங்கிலத்தில் இச்சொல்லிற்கான இழிவுபடுத்தும் தன்மை தொலைந்து எந்த ஆண்மகனையும் குறிப்பதாக அமைந்துள்ளது.[2][7]
யார்க் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ஜேம்சு சார்ப்பு, "நாடாளுமன்றத்தில் உண்மையான நோக்கங்களுடன் நுழைந்த கடைசி மனிதன்" என பாராட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.[8]
வில்லியம் ஆரிசன் ஐன்சுவர்த் 1841ஆம் ஆண்டில் பதிப்பித்த கை பாக்சு அல்லது வெடிமருந்து தேசத்துரோகம் என்ற வரலாற்றுக் காதல்கதையில் பாக்சை பொதுக்கருத்தியலில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாத்திரமாகப் படைத்துள்ளார்.[9] பின்னாட்களில் சிறுவர் சித்திரக்கதைகளிலும் மதிப்புக்குறைந்த புதினங்களிலும் "வீரமிகு கதாநாயகனாக" சித்தரிக்கப்பட்டார்.[10] லெவிசு கால் என்ற வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி இருபதாம் நூற்றாண்டில் கை பாக்சு "தற்கால அரசியல் கலாசாரத்தில் ஓர் முதன்மை அடையாளமாக", அவருடைய முகம் " பின்நவீனத்துவ அரசின்மையை வெளிப்படுத்தும் கருவியாக" உள்ளது. காட்டாக கற்பனையான பாசிச இங்கிலாந்தை எதிர்க்கும் வீ ஃபோர் வென்டேட்டா தொடர் புதினத்தில் கை பாக்சு முகமூடியை வீ போட்டுள்ளார்.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.