![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Ketchup-01.jpg/640px-Ketchup-01.jpg&w=640&q=50)
கெட்ச்அப்
From Wikipedia, the free encyclopedia
கெச்சப் அல்லது தக்காளி சுவைச்சாறு என்பது சுவையூட்டி ஆகும். முன்னர் இதன் தயாரிப்பில் முட்டை வெண்கரு, காளான், போன்ற பல்வேறு பொருட்கள் பயன்பட்டன.[1][2] ஆனால், தற்காலத்தில் இச்சொல் "தக்காளிக் கெச்சப்" அல்லது "தக்காளிச் சுவைச்சாற்றை" மட்டுமே குறிக்கின்றது.
![]() ஒரு பாத்திரத்தில் உள்ள தக்காளிக் கெச்சப் | |
மாற்றுப் பெயர்கள் | கட்சப், தக்காளிச் சுவைச்சாறு, கெட்சப், சிவப்புச் சுவைச்சாறு |
---|---|
வகை | சுவையூட்டி |
முக்கிய சேர்பொருட்கள் | தக்காளி, சர்க்கரை (சீனி) (அல்லது உயர் புருக்டோசு, சோளச் சாறு), வினாகிரி, உப்பு, வாசனைப் பொருட்கள் ஆகியவை |
உணவு ஆற்றல் (per பரிமாறல்) | 103 கலோரி (431 kJ) |
இது ஓரளவு இனிப்புத் தன்மையும், ஓரளவு புளிப்புச் சுவையும் கொண்டது. தக்காளி, இனிப்பூட்டி, வினாகிரி ஆகியவற்றுடன், பிற வாசனைப் பொருட்களையும் சேர்த்து இதனைத் தயாரிக்கின்றனர். பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் வேறுபடுகின்றன. எனினும், வெங்காயம், கராம்பு, கொத்தமல்லி, சீரகம், உள்ளி, கடுகு என்பவற்றுடன் சில வேளைகளில் கறுவா, இஞ்சி என்பனவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.[3]
“எயின்சு” (Heinz) நிறுவனமே ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் தக்காளிச் சுவைச்சாறு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. மொத்த தக்காளிச் சுவைச்சாற்று விற்பனையில் இதன் பங்கு ஐக்கிய அமெரிக்காவில் 60% உம், ஐக்கிய இராச்சியத்தில் 82% உம் ஆகும்.[4][5] ஐக்கிய இராச்சியத்தின் பெரும் பகுதிகளில் இதைத் தக்காளிச் சுவைச்சாறு என்னும் நேரடிப் பொருள் கொண்ட ‘’டொமாட்டோ சோஸ்’’ ‘’(tomato sauce)’’ அல்லது ‘’சிவப்புச் சுவைச்சாறு’’ என்னும் பொருள்கொண்ட ‘’ரெட் சோஸ்’’ ‘’(red sauce)’’ (சிறப்பாக வேல்சு பகுதியில்) ஆகிய பெயர்களாலேயே அழைக்கின்றனர்.
தக்காளிச் சுவைச்சாறு பெரும்பாலும் சூடாகப் பரிமாறப்படும் உணவுகளுக்குச் சுவையூட்டியாகப் பயன்படுகிறது. பிரெஞ்சுப் பொரியல், “ஹாம்பர்கர்”, “ஹாட் டோக்” கோழி அவியல், சூடான “சான்ட்விச்”, அவித்த முட்டை, வாட்டிய அல்லது பொரித்த இறைச்சி ஆகியவற்றுடன் சுவையூட்டியாக தக்காளிச் சுவைச்சாறு பயன்படுகிறது. சில சமயங்களில் வேறுவகைச் சுவைச் சாறுகளில் அடிப்படையாக அல்லது ஒரு சேர்மானப் பொருளாக இது பயன்படுகின்றது.