பொந்தியான் மாவட்டத்தில் குக்குப் மீன்பிடி கிராமத்திற்கு அருகில் அமைந்து உள்ள ஒரு சிறிய தீவா From Wikipedia, the free encyclopedia
குக்குப் தீவு (மலாய்: Pulau Kukup; ஆங்கிலம்:Kukup Island) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பொந்தியான் மாவட்டத்தில் குக்குப் மீன்பிடி கிராமத்திற்கு அருகில் அமைந்து உள்ள ஒரு சிறிய தீவாகும்.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மலேசியா தென் கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 1°19′16.0″N 103°25′37.9″E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
பரப்பளவு | 6.472 km2 (2.499 sq mi) |
நிர்வாகம் | |
மலேசியத் தீபகற்பப் பெருநிலத்தில் இருந்து ஏறக்குறைய 1 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. அண்மைய காலங்களில் இந்தத் தீவு சுற்றுலா நகரமாகப் பிரபலம் அடைந்து வருகிறது.
இந்தத் தீவைப் புலாவ் குக்குப் என்று அதன் அசல் பெயரிலேயே, மலேசியாவில் வாழும் தமிழர்கள் அழைக்கிறார்கள். புலாவ் என்றால் மலேசிய மொழியில் தீவு என்று பொருள். மக்கள் வசிக்காத கண்டல் (mangrove) காட்டுத் தீவுகளில், உலகின் இரண்டாவது பெரிய தீவாகக் குக்குப் தீவு விளங்குகிறது.
குக்குப் தீவின் வரலாறு உண்மையில் ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில், இந்தத் தீவு ஒரு தொலைதூரக் காட்டுப் பகுதியாக இருந்தது. சிறப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லாமல் இருந்தது.
1990-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்தத் தீவில் தனித்துவமான, விசித்திரமான பல்லுயிரிகள் இருப்பதாக அறியப்பட்டது. அதன் பின்னர்அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அந்தத் தீவின் மீது ஆர்வம் காட்டினர்கள்.[1]
பின்னர் அந்தத் தீவு அரிய பல்லுயிர்களின் பாதுகாப்பு வாழ்விடமாகப் புனரமைப்புச் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஜொகூர் மாநில வனப்பூங்கா சட்டத்தின் (Johor State Park Corporation Enactment) அடிப்படையில், குக்குப் தீவு மார்ச் 27, 1997-இல் தேசிய பூங்காவாக மாற்றப் பட்டது.[2]
ராம்சார் ஒப்பந்தம் என்பது ஈரநிலங்களுக்கான ஒப்பந்தம். பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் சூழலியல் தன்மையைத் தக்க வைப்பதற்கும் சிறந்த பயன்பாட்டினை உறுதி செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.[3].
இந்த ஒப்பந்தம் 1971-இல் ராம்சார் என்ற இடத்தில் ஈரான் நாட்டின் சுற்றுச்சூழல் துறையால் ஏற்படுத்தப்பட்டது. 1975 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த ஒப்பந்தம் 1971-இல் ராம்சார் என்ற இடத்தில் ஈரான் நாட்டின் சுற்றுச்சூழல் துறையால் ஏற்படுத்தப்பட்டது. 1975 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. மலேசியாவில் 1995-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
மலேசியாவில் தற்போது 134,182 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஏழு ராம்சார் தளங்கள் உள்ளன. அனைத்துலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.[4]
மலாக்கா நீரிணைக்கும்; குக்குப் நீரிணைக்கும் இடையில் குக்குப் தீவு அமைந்து உள்ளது. மலாக்கா நீரிணையில் இருந்து வீசும் பலத்த புயல் காற்றைத் தடுத்து நிறுத்த உதவும் ஒரு தாங்கலாகவும் இந்தத் தீவு விளங்குகின்றது.
இந்த தீவுக்கு அருகில் மற்றும் ஒரு தீவு. அதன் பெயர் வாழைத் தீவு (Pulau Pisang). பொந்தியான் கிச்சில் நகரத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் வாழைத் தீவு உள்ளது. ஒரு காலக் கட்டத்தில் இந்தத் தீவில் நிறைய வாழை மரங்கள் இருந்தன. காட்டுக் குரங்குகளின் சொர்க்க லோகம் என்றும் சொல்லப் பட்டது.
ஆனால் இப்போது மலேசியா - சிங்கப்பூர் நாடுகளின் சர்ச்சைக்குரிய தீவாக வாழைத் தீவு விளங்குகிறது. இந்தத் தீவு மலேசியாவிற்குச் சொந்தமாக உள்ளது. ஆனாலும் சிங்கப்பூர் அரசு அங்கே ஒரு கலங்கரை விளக்கத்தை கட்டிப் பராமரித்து வருகிறது. அதன் பெயர் புலாவ் பீசாங் கலங்கரை விளக்கம் (Pulau Pisang Lighthouse). பரபரப்பான சிங்கப்பூர் நீரிணையின் மேற்கு நுழைவாயிலில் கப்பல்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.
கலங்கரை விளக்கம் கட்டப் படுவதற்கு, 1900-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தான் இப்ராகிம் அவர்களுக்கும்; பிரித்தானிய சிங்கப்பூர் காலனித்துவ அரசுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு உள்ளது.[5]
குக்குப் தீவு பெரும்பாலும் சேறு கலந்த சதுப்பு நிலங்களைக் கொண்டது. காண்டா நண்டுகள்; சேற்றுத் தாவிகள் (mudskippers) போன்றவற்றின் உறைவிடம். தவிர காட்டுப்பன்றிகள், குரங்குகள் என பல்வேறு வனவிலங்குகளுடன்; வலசை போகும் அபூர்வமான பறவைகளின் புகலிடம். விதம் விதமான தேனீக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
கடற்கரைச் சதுப்பு நிலக் காடுகள் என்றால் பெரும்பாலும் காண்டா மரங்கள் நிறைந்த காடுகளைக் குறிக்கும். அந்த வகையில் இந்தக் குக்குப் தீவும் ஒரு சாதனை படைக்கிறது. மக்கள் வசிக்காத காண்டாக் காட்டுத் தீவுகளில், உலகின் இரண்டாவது பெரிய தீவாக, இந்த குக்குப் தீவு விளங்குகிறது.
மலேசிய நாட்டின் மொத்த சதுப்புநிலக் காடுகளில் முக்கால்வாசிப் பகுதி, இந்தக் குக்குப் தீவில் உள்ளன. ஏறக்குறைய 647 ஹெக்டேர் சதுப்புநிலக் காடுகள்.
இந்த தீவு வலசை போகும் ராம்சார் பறவைகளுக்கு தங்கிச் செல்லும் சொர்க்கபுரி ஆகும். அங்கே மனித நடமாட்டமும் மனித அச்சுறுத்தலும் இல்லை. அதனால் அந்தத் தீவு வலசைப் பறவைகளின் தற்காலிகச் சரணாலயம்.
ஆஸ்திரேலியாவின் வெப்பமான காலத்தில், அங்கு வாழும் பறவைகள் குளிர்ந்த வட ஆசிய நிலப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். அப்படி நெடுந்தூரம் பயணம் செய்யும் போது அந்தப் பறவைகள், இந்த குக்குப் தீவில் தற்காலைமாக அடைக்கலம் பெறுகின்றன.[6]
பறக்கும் நரி என்று சொல்லப்படும் பழ வௌவால் (Flying Fox Pteropus vampyrus); நீர்நாய்கள் (Smooth Otter Lutra perspicillata); தாடி காட்டுப் பன்றிகள் (Bearded Pig Sus barbatus); நீண்ட வால் நண்டுண்ணிக் குரங்குகள் (Long-tailed Macaque Macaca fascicularis); போன்ற அரிதான உயிரினங்களைக் குக்குப் தீவின் ஈரநிலம் வாழ்வளிக்கின்றது. இந்த உயிரினங்கள் அனைத்தும் உலகளாவிய நிலையில் மனித அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படும் உயிரினங்களாகும்.
குக்குப் தீவு, மலேசியாவில் முக்கியமான பறவைப் பகுதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு 76 வகையான பறவைகள் உட்பட 12 வகையான விலங்கினங்கள் வாழ்கின்றன.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.