From Wikipedia, the free encyclopedia
சிறீ இராமலிங்கேஸ்வர சுவாமி கோவில், (கேசரகிரி சேத்திரம்), தெலுங்காணா மாநிலம், மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், கீசரா மண்டலம், கீசரகுட்டா கிராமத்தில் (அஞ்சல் குறியீட்டு எண்: 501301) உள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள மலைக் கோவிலாகும். [1] இக்கோவிலின் மூலவர் சிவன்; அம்பாள் பவானி என்னும் சிவதுர்கா ஆவார். தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க இக்கோவில் ECIL லிருந்து 12 கி.மீ. தொலைவிலும், ஐதராபாத் நகரிலிருந்து 34 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. [2]
கீசரகுட்டா கோவில் | |
---|---|
கீசரகுட்டா கோவில் தோற்றம். | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தெலங்காணா |
மாவட்டம்: | மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம் |
அமைவு: | கீசரகுட்டா கிராமம், மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கலைப்பாணி |
வரலாறு | |
அமைத்தவர்: | இராமன் |
இணையதளம்: | keesaragutta.org |
சிறீ இராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள தொலுசுவந்துருவின் பாறைக் கல்வெட்டு கி.பி 410 மற்றும் 435 க்கு இடைப்பட்டதாக தெலுங்காணா மாநிலத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இதுவே பதிவுசெய்யப்பட்ட முதல் தெலுங்கு மொழிக் கல்வெட்டு என்றும், கி.பி.574ல் பதிக்கப்பட்ட கலாமல்லா கல்வெட்டை விட சுமார் ஒரு நூற்றாண்டு பழமையானது என்றும் கோருகிறார்கள். [3]
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், எர்ரகுண்டலா மண்டலம், கலமல்லா கிராமம் (அஞ்சல் குறியீட்டு எண்: : 516310) [4]சென்னகேசவ சித்தேசுவரர் கோவில் முற்றத்தில் உள்ள உடைந்த தூணின் இரண்டு முகங்களில் தடித்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள கலமல்லா கல்வெட்டே தெலுங்கு மொழியின் மூத்த கல்வெட்டு என்று உரிமை கொண்டாடப்பட்டு வந்தது. இக்கல்வெட்டின் கல்வெட்டின் பல வரிகள் சேதமடைந்து முற்றிலுமாக அழிந்து காணப்படுகின்றன. [5]
எழுத்தமைதி அடிப்படையில் இக்கல்வெட்டை எரிக்கல் முத்துராஜு தனஞ்சய வர்மன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கல்வெட்டை கி.பி. 575 ஆம் ஆண்டில் முதல் தெலுங்குக் கல்வெட்டைப் பொறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. 49 அங்குல நீளம், 9 அங்குல அகலம் கொண்ட பரப்பளவில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டே தெலுங்கு மொழியின் முதல் கல்வெட்டு என்று இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையும் ஏற்றுக்கொண்டது. [6]
சிறீ இராமலிங்கேசுவர சுவாமி கோவில் ஒரு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. ஐந்து நிலை இராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. மூலவர் கருவறைக்கு முன்பு கொடிமரம், பல்பீடம் நந்தி ஆகியன ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. கருவறையில் மூலவரான சிறீ இராமலிங்கேசுவரர் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்பிகை பவானி தனி சன்னதி கொண்டுள்ளார். இலட்சுமி நரசிம்மசுவாமி, இராமர் சீதை, ஆகிய தெய்வங்கள் தனி சன்னதி கொண்டுள்ளனர். கோவிலின் முன்பு உயரமான அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.[7]
பிராமணனான இராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்க இராமர் இத்தலத்தில் சிவலிங்கத்தை நிறுவியதாக இக்கோவில் தொடர்புடைய தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. சிவலிங்கத்தை நிறுவுவதற்காக மலைகள் மற்றும் பசுமையான சூழல் கொண்ட இந்த அழகான பள்ளத்தாக்கை இராமர் தேர்ந்தெடுத்தார். வாரணாசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வருமாறு அனுமனுக்கு உத்தரவிட்டார். அனுமன் சிவலிங்கத்துடன் வருவதற்குத் தாமதமாகியது. மங்கலகரமான நேரம் நெருங்கியதால், சிவபெருமான் இராமர் முன் தோன்றி, அங்கு நிறுவுவதற்கு ஒரு சிவலிங்கத்தைப் பரிசளித்தார். இதனால் இக்கோவிலில் உள்ள இலிங்கம் சுயம்பு இலிங்கம் ஆகும். இராமர் இலிங்கத்தை நிறுவியதால் இந்த இலிங்கம் இராமலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. [2]
அனுமான் வாரணாசியிலிருந்து 101 லிங்கங்களைத் தேர்ந்தெடுத்துத் கொண்டு திரும்பினார், மேலும் தனது லிங்கம் நிறுவப்படாததால் வருத்தமடைந்தார். அதனால் கொண்டு வந்த இலிங்கங்களை அந்தப் பகுதி முழுவதும் வீசினார். இன்றும் பல இலிங்கங்கள் கோவிலுக்கு வெளியே பல இடங்களில் சிதறிக் கிடப்பதைக் காணலாம். [2] == பெயர்க்காரணம் == இராமர், இலிங்கத்தை வழிபடுவதில் அனுமனுக்கு முன்னுரிமை அளித்து, அனுமனை மகிழ்வித்தார். கேசரியின் மகனான அனுமன் பெயரில் இக்குன்று கேசரிகிரி என்று அழைக்கப்படவேண்டும் என்று இராமர் விரும்பினார். கேசரிகுட்டா என்று பெயரிடப்பட்ட இக்குன்று நாளடைவில் கீசரகுட்டாவாக மாறிப்போனது. [2]
கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 3:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும். மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மூடப்பட்டிருக்கும். [7]
இக்கோவிலில் கார்த்திகை மற்றும் சிவராத்திரி விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரி விழா ஐந்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் இக்கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும். மக்கள் அதிக அளவில் கூடுவர். சிராவண மாசத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நாள்தோறும் ருத்ராபிசேகம் மற்றும் மஹான்யாச ருத்ராபிசேகம் ஆகிய அபிசேகங்கள் நடைபெறுகின்றன. [7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.