From Wikipedia, the free encyclopedia
ஒளியுணர் இருமுனையம் (photodiode) என்பது ஒளியை மின்னோட்டமாக மாற்றவல்ல ஒரு குறைகடத்திக் கருவி. குறைகடத்தியால் ஆன இக்கருவியின் மீது ஒளி படும்பொழுது, ஒளியின் ஒளியன்களின் (photon) ஆற்றலால் குறைகடத்தியில் கட்டுண்ட அணுக்களுக்கிடையே ஆன பிணைப்புகள் விடுபட்டு மின்மத் துகள்கள் உருவாகின்றன. இந்த மின் துகள்கள் எதிர்மின்னிகளும், நேர்மின்மம் கொண்ட புரைமின்னிகளும் ஆகும். இந்த எதிர்மின்னிகளும் புரைமின்னிகளும் நகரக்கூடியவை. இவை நகர்மின்மங்கள். ஒளியுணர் இருமுனையத்தில் பொருத்தப்படும் மின்னழுத்த வேறுபாட்டால், ஒளியால் விடுபட்ட இந்த மின்மங்கள் நகர்ந்து மின்னோட்டம் உருவாகின்றது. அதிக ஒளி இருந்தால், அதிகமான மின்மங்கள் விடுபட்டு ஓடும். அதிக மின்னோட்டம் ஏற்படும்.
ஒளியுணர் இருமுனையம் | |
---|---|
மூன்று சிலிக்கான் ஒரு செருமானியம் ஒளியுணர் இருமுனையங்கள். | |
வகை | ஆற்றல் ஊட்டா வகை |
செயல் கோட்பாடு | ஒளியை மின்னோட்டமாக மாற்றுகின்றது |
Pin configuration | நேர்முனையம் and எதிர்முனையம் |
இலத்திரனியல் குறியீடு | |
ஒளியுணர் இருமுனையம் என்பது கதிரொளி மின்கலம் போன்றதே. ஆனால் அதிகப் பரப்பளவில் அமைந்து கதிரொளி மின்கலம் போல் மின்னாற்றலாக வடித்துத் திரட்டும் கருவியன்று. ஒளியின் அளவுக்கு ஏற்ப மின்னோட்டம் தரும் ஓர் ஆற்றல் மாற்றியாக, தரவு ஏற்றிய ஒளியலைகளில் இருந்து மின்னலைகளில் உள்ள தரவாக மாற்றப்பயன்படுபவை. மேலும். கண்ணால் பார்க்கக்கூடிய ஒளியாக (கட்புல ஒளி) மட்டுமல்லாமல், நம் கண்ணுக்குப் புலப்படாத புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள், X-கதிர் (புதிர்க்கதிர் அல்லது ஊடுகதிர்) ஆகியவற்றுக்கும் உணரியாகவும் செயல்படும் சிறப்புக்கருவிகள் உள்ளன. கட்புலனாகும் ஒளியும் மின்காந்த அலைதான், ஊடுகதிரும் (அதிக அதிர்வெண் கொண்ட மிகச்சிறிய அலைநீளம் கொண்ட) மின்காந்த அலைதான்.
ஒளியுணர் இருமுனையம் செய்யப் பயன்படும் முக்கியமான பொருளே அதன் பண்புகளை உறுதி செய்யும். உணரவேண்டிய ஒளியின் அலைநீளத்துக்கு ஏற்ற குறைகடத்திப் பொருள் முதலில் தேவை. குறைகடத்தியின் மீது படும் ஒளியானது அணுக்களுக்கு இடையே இருக்கும் பகிர்பிணைப்பை அறுத்து மின்மத்தை (ஏதிர்மின்னி, புரைமின்னி) விடுவிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். குறைகடத்தியின் ஆற்றல் இடைவெளி என்பது இதனைக் காட்டும் ஒரு பண்பு. இந்த ஆற்றல் இடைவெளியைத் தாண்டக்கூடிய ஆற்றலுடைய ஒளியாக இருந்தால் மட்டுமே மின்னோட்டம் நிகழும்.
ஒளியுணர் இருமுனையக் கருவியைச் செய்யப் பயன்படும் பரவலாகக் காணக்கூடிய குறைகடத்திகள்[1] சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன
குறைகடத்தி | மின்காந்த அலைவரிசை அலைநீள பரவு எல்லை (nm) |
---|---|
சிலிக்கான் | 190–1100 |
செருமேனியம் | 400–1700 |
இந்தியம் காலியம் ஆர்சினைடு | 800–2600 |
ஈய(II) சல்பைடு | <1000–3500 |
மெர்க்குரி காட்மியம் தெலுரைடு | 400–14000 |
ஒளியுணர் இருமுனையத்தின் முக்கிய செயற்பாட்டுக் கூறுகள்:
ஒளிபெருக்கிகளுடன் (photomultipliers) ஒப்பிட்டால் கிட்டும் நன்மைகள் [2]:
ஒளிபெருக்கிகளுடன் ஒப்பிட்டால் காணப்படும் குறைபாடுகள்: