எபியால்ட்டீஸ் (Ephialtes கிரேக்கம்: Ἐφιάλτης, Ephialtēs ) என்பவர் பண்டைய ஏதெனிய அரசியல்வாதி மற்றும் சனநாயக இயக்கத்தின் ஆரம்பகால தலைவராவார். கிமு 460 களின் பிற்பகுதியில், பழமைவாதத்தின் பாரம்பரிய கோட்டையான அரியோபாகு அவையின் சக்தியைக் குறைக்கும் சீர்திருத்தங்களை இவர் மேற்கொண்டார். மேலும் பல நவீன வரலாற்றாசிரியர்களால் ஏதென்சில் பிரபலமான தீவிர சனநாயகத்தின் தொடக்கத்துக்கான குறிப்பிடத்தக்க நபர் என்று கருதப்படுகின்றார். இவர் பொது அலுவலகங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஊதியத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பொது அலுவலகத்தை வைத்திருப்பதற்கான சொத்து தகுதிகளை குறைத்தார், மேலும் குடியுரிமைக்கு புதிய வரையறையை உருவாக்கினார். [1] இருப்பினும், எபியால்ட்டீஸ் இந்த புதிய அரசாங்கத்தில் நீண்ட காலம் பங்கேற்க முடியவில்லை. இவர் கிமு 461 இல் படுகொலை செய்யப்பட்டார். ஒருவேளை இவரின் சனநாயக செயல்பாடுகளால் வெறுப்படைந்த சிலவர் ஆட்சி ஆதரவாளர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்டிருக்கலாம். அதன்பிறகு ஏதென்சின் அரசியல் தலைமை இவரது சகாவான பெரிக்கிள்சிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆரம்ப கால செயல்பாடுகள்
கிமு 465 இல் ஏஜியன் கடலில் ஏதெனியன் கடற்படைக்குக் கட்டளையிடும் ஸ்ரடிகெஸ் என்னும் தளபதி பதவியில் முதன்முதலில் இவர் வரலாற்றுப் பதிவில் தோன்றுகிறார். [2] கிமு 464 இல், ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் எசுபார்த்தாவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்தச் சேதாரங்களானது மறைமுகமாக எலட்களின் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. மெசீனியாவில் உள்ள இதோம் மலையில் ஒளிந்துக் கொண்டு கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டனர். அவர்களை எசுபார்த்தன்களால் அங்கிருந்து அகற்ற முடியவில்லை. இதனால் பாரசீகர்களுக்கு எதிராக கிமு 481 இல் உருவாக்கப்பட்ட எலனிக் கூட்டணியில் இணைந்திருந்த நகர அரசுகளை உதவிக்கு அழைத்தனர். ஏதெனியர்கள் முற்றுகைப் போரில் சிறந்தவர்கள் என்ற நற்பெயரைக் கொண்டிருந்ததால், எசுபார்த்தன்கள் ஏதெனியர்களிடம் உதவியை நாடினர். இதற்கு என்ன பதிலளிப்பது என்பது குறித்து ஏதெனியர்களிடையே பரவலாக விவாதம் உண்டானது. கிமு 463 இல், எலட்களின் கிளர்ச்சியை ஒடுக்க எசுபார்த்தா கேட்ட இராணுவ உதவி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற பிரிவினரை எபியால்ட்டீஸ் பிரதிநிதித்துவப்படுத்தினார். அக்காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியுமான சிமோன், எசுபார்தாவுக்கு ஆதரவாக இருந்தார். மேலும் "கிரேக்கத்துக்கு ஏதென்சும் எசுபார்த்தாவும் இரண்டு கால்கள் போன்றவை. இதில் எசுபார்த்தா விழுந்துவிட்டால் கிரேக்கம் முடமானதற்கு சமம், எசுபார்த்தாவும், ஏதென்சும் கிரேக்கம் என்னும் வண்டியை இழுத்துச் செல்லும் இரண்டு காளைகள் போன்றவை, தன்னுடைய சகாவான எசுபாபார்த்தவை ஏதென்சு இழந்துவிடக்கூடாது" என்று வாதிட்டு படை உதவிகளை அனுப்பக் கோரினார். இதற்கு எதிராக வாதிட்ட எபியால்ட்டீஸ் எசுபார்த்தாவும் ஏதென்சும் இயற்கையான போட்டியாளர்கள், அந்த நகரத்தை சிக்கலில் இருந்து மீட்க உதவுவதற்குப் பதிலாக எசுபார்த்தாவின் துரதிர்ஷ்டத்தைப் பார்த்து ஏதென்ஸ் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று வாதிட்டார். இருப்பினும், சிமோன் தன் பேச்சுத் திறத்தால் வெற்றி பெற்றார். அதன்பிறகு 4,000 ஹாப்லைட்டுகளுடன் எசுபார்த்தாவிற்கு உதவப் புறப்பட்டார். [3] இருப்பினும், இனவெறி கொண்ட எசுபார்த்தன்களுக்கு உதவ வந்த ஏதெனியர்களை அவர்கள் வந்த கொஞ்ச காலத்திலேயே, அவர்களின் உதவி நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எசுபார்த்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையேயான நல்லிணக்கம் உடைந்து. இதன் விளைவாக எசுபார்த்தாவுக்கு உதவ வேண்டும் என்று வாதிட்ட சிமோன் ஆஸ்ட்ராசிசம் (நடுகடத்தல்) செய்யப்பட்டார். சிமோனின் இந்த பின்னடைவானது, எபியால்ட்டீஸ் தலைமையிலான தீவிர சனநாயக இயக்கம் தோற்றி அது வலுவடைய வழிவகுத்தது.
அரியோபாகஸ் மீது தாக்குதல்
இந்த நேரத்தில், எபியால்ட்டீசும், அவரது அரசியல் கூட்டாளிகளும் அரியோபாகசின் அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டத் தொடங்கினர். அரியோபகசானது பாரம்பரியமாக பழமைவாத சக்திகளான முன்னாள் ஆர்கோன்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. அரிசுட்டாட்டில் மற்றும் சில நவீன வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஏதென்சு, கிமு 470 முதல், சிமோனின் தலைமையின் கீழ் முறைசாரா " அரியோபாகசின் அரசியலமைப்பின் " கீழ் ஆளப்பட்டது. கிமு 486 இல் இருந்து அரியோபகஸ் அதன் செயல்பாடுகளால் ஏற்கனவே கெளரவத்தை இழந்து வந்தது. தவறான நிர்வாகத்திற்காக சில உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடுப்பதன் மூலம் எபியால்ட்டீஸ் இந்த செயல்முறையை துரிதப்படுத்தினார். [4] இவ்வாறு சபையின் கௌரவம் பலவீனமானதால், முக்கிய முடிவுகளை எபியால்ட்டீஸ் மக்கள் சபையில் முன்மொழிந்து நிறைவேற்றினார். இதன்பிறகு அரியோபகஸ் கொண்டிருந்த அதிகாரங்கள் பூலி, எக்லேசியா போன்ற பிரபலமான அவைகளுக்கு இடையே பிரித்து வழங்கப்பட்டது. எபியால்ட்டீஸ் அரியோபாகசின் அதிகாரங்களைக் குறைத்தார். முடிவில் அரியோபாகஸ் ஒரு உயர் நீதிமன்றமாக கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சில சமய விசயங்களைத் தீர்ப்பதற்கான அதிகாரங்களை மட்டும் கொண்டிருந்ததாக மாற்றப்பட்டது. சில வரலாற்றாசிரியர்கள் இந்த சீர்திருத்தங்களின் போது சிமோன் மற்றும் அவரது ஹெப்லைட்டுகள் எசுபார்த்தாவுக்கு உதவ சென்று அப்பணியின் காரணமாக பெலோபொன்னீசிலேயாவில் இருந்தனர் என்று குறிப்பிடுகின்றனர். [5] மற்றவர்கள் இந்த சீர்திருதங்கள் அவர் திரும்பி வந்த பிறகே நடந்தன வாதிடுகின்றனர். [6] சிமோன் இல்லாத காலத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்ததாக கூறுபவர்கள், அவர் திரும்பி வந்த பிறகு அவற்றை மாற்ற முயற்சித்ததாகக் கூறுகின்றனர். அதே சமயம் அவர் திரும்பி வந்த பிறகு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாக கூறுபவர்கள் ஆரம்ப விவாதத்தில் அவர் அவற்றை எதிர்த்ததாக நம்புகின்றனர். எசுபார்த்தன்களால் சீமோன் தலைமையிலான ஹெப்லைட் படை முரட்டுத்தனமாக திருப்பி அனுப்பப்பட்டதன் மூலம் சிமோன் மற்றும் பிற எசுபார்த்தன் சார்பு ஏதெனியர்களின் அரசியல் நிலைப்பாடு தோல்வியில் முடிந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். [7]
இறப்பு மற்றும் மரபுடைமை
சிமோன் ஆஸ்ட்ராசிசம் (நடுகடத்தல்) செய்யப்பட்டதால், எபியால்ட்டீசின் சீர்திருத்தங்கள் விரைவாக வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தன. இது எபியால்ட்டீஸ் மற்றும் அவரது தரப்பினரின் அரசியல் வெற்றியாகும். இருப்பினும் அடுத்துவந்த ஆண்டுகளில் முழுமையான ஏதெனியன் சனநாயகம் நிறுவப்படவில்லை; எபியாட்சின் சீர்திருத்தங்கள் சனநாயகக் கட்சியின் வேலைத்திட்டத்தின் முதல் படி மட்டுமே. [8] இந்த புதிய வடிவிலான அரசாங்கத்தின் அடுத்தடுத்த வளர்ச்சியைக் காண எபியால்ட்டீஸ் உயிரோடு இல்லை; கிமு 461 இல், இவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் படுகொலை செய்யப்பட்ட விவரம் தெரியவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வை விளக்குவதற்கு பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. எபியால்ட்டீஸ் மற்றும் அவரது மரணம் பற்றிய முதல் ஆதாரம் கிமு 420 இல் எழுதப்பட்ட ஆன்டிஃபோன் (5.68) ஆகும், இது கொலையாளியின் அடையாளம் தெரியவில்லை என்று கூறுகிறது. “இவ்வாறு, உங்கள் குடிமக்களில் ஒருவரான எபியால்ட்டீசைக் கொன்றவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் அவரது கூட்டாளிகள் அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்று யூகிப்பார்கள் என்று யாராவது எதிர்பார்த்தால், அதனால் கொலையாளி சிக்கியிருக்கலாம். இந்த விசயத்தில் அவரது கூட்டாளிகள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. கூடுதலாக, எபியால்ட்டீசை கொன்ற கொலையாளிகள் அவரது உடலை மறைக்க விரும்பவில்லை, அதனால் அவர்களது செயலைக் காட்டிக்கொடுக்கும் ஆபத்து இருந்திக்காது. இருப்பினும் 90 ஆண்டுகளுக்குப் பிறகு, அரிஸ்டாட்டில், ஏதென்ஸ் அரசியலமைப்பு 25.4 இல், தனக்ராவின் அரிஸ்டோடிக்கஸ் என்பவர்தான் கொலைக் குற்றவாளி என்று கூறுகிறார். ஆண்டுகள் செல்லச் செல்ல, மேலும் பல கோட்பாடுகள் நிறுவப்பட்டன. மூன்றாவது அபிப்பிராயம் என்னவென்றால், தனக்ராவின் அரிஸ்டோடிக்கஸ் சிலவர் ஆட்சி ஆதரவாளர் குழுவின் சதித்திட்டத்தில் பங்கெடுத்தவராக இருந்தார் என்கிறது. இவரின் இறப்புக்குப் பிறகு இவரது அரசியல் கூட்டாளியான பெரிக்கிள்ஸ் அரசாங்க மாற்றத்தை நிறைவு செய்து பல தசாப்தங்கள் ஏதென்சை வழிநடத்தினார். [9] ராபர்ட் டபிள்யூ. வாலஸ் என்ற அறிஞர் குறிப்பிடுகையில் எபியால்ட்டீஸ் எதிர் தரப்பினரால் கொல்லப்பட்டிருந்தால், அவர் தரப்பினர் அவரை ஒரு தியாகி ஆக்கி, குற்றவாளியைக் கண்டுபிடிக்க புனிதப் போரை நடத்தியிருப்பார்கள். எனவே அ்வாறு இது நடக்கவில்லை, எனவே கொலைகாரன் எபியால்ட்டீசின் சொந்தப் பிரிவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்கிறார். [10]
பரவலர் பண்பாட்டில்
எபியால்ட்டீசின் படுகொலை மற்றும் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிப்பது குறித்த புலணாய்வு விசாரணை போன்றவற்றை கருப்பொருளாக கொண்டு வரலாற்று மர்ம புதினமான தி பெரிக்கிள்ஸ் கமிஷன் என்ற நூலை கேரி கார்பியின் எழுதியுள்ளார்.
குறிப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.