From Wikipedia, the free encyclopedia
உரைநடை (prose) என்பது, ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஓர் எழுத்து வடிவம் ஆகும். கவிதை போல அணிகள் இன்றி, நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். உரைநடை, பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும், ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது. இதனால் இது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சியங்கள், ஒலிபரப்பு ஊடகங்கள், திரைப்படம், கடிதங்கள், வரலாறு, மெய்யியல், வாழ்க்கை வரலாறு, போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த தொடர்புகளுக்குப் பயன்படுகின்றது.[1][2][3]
உரைநடைக்குக் குறிப்பான வடிவமோ, எதுகை, மோனை போன்ற அணிகளோ இருப்பதில்லை எனினும், உரைநடைகளில், அடுக்கு மொழிகள் போன்ற கவிதைப் பாங்கு காணப்படுவது உண்டு. கவிதை, உரைநடை ஆகிய இரண்டு இலக்கிய வடிவங்களையும் கலந்து உருவான ஒன்று, வசன கவிதை என அழைக்கப்படுவது உண்டு. கவிதை, ஓரளவு செயற்கைத் தன்மை கொண்டது. உரைநடையோ, இயல்பான ஒழுங்கில் அமைவது.
தமிழ்நாட்டில் அச்சு இயந்திரங்களின் வருகை மற்றும் பயன்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டன. கி.பி.1577-இல் தமிழ்மொழியில் முதல் அச்சிடும் முயற்சி நடந்தது. கிருத்துவப் பாதிரிமார்கள், தம் சமய நூல்களை அச்சிட்டு வழங்க முற்பட்டனர். பதினேழு, பதினெட்டு நூற்றாண்டுகள் வரை அச்சு இயந்திரங்கள் கிருத்துவ பாதிரிமார்களிடத்தும் கிழக்கிந்தியக் கம்பெனியினரிடத்தும் பயன்பாட்டில் இருந்து வந்தன. இக்கால கட்டத்தில், ஜெர்மன் நாட்டினரான சீகன் பால்கு என்பவர், நான்காம் பிரெடரிக் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, சமயப் பணியாற்ற தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில், 1709-இல் முதலாவது அச்சுக் கூடத்தையும், அதற்குரிய காகிதத் தொழிற்சாலையையும் நிறுவினார். இதன் மூலமாக சமயப் பரப்புரையும், தமிழ் நூல்களை அச்சிட்டு வழங்கும் பணியும் தொடங்கியது. இவ்வாறாகத் தமிழில் மெல்ல உரைநடை வடிவம் வளர்ச்சியடைந்தது. தமிழ் உரைநடையின் முன்னோடியாக வீரமாமுனிவர் அறியப்படுகிறார். இவர் எழுதிய பரமார்த்த குரு கதை, எளிய உரைநடையில் அமையப்பெற்று வழிகாட்டியாக விளங்கியது. 19-ஆம் நூற்றாண்டில்தான் அச்சு இயந்திரங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தும் உரிமை பெற்றனர்.
பழைய, புதிய செய்யுள் இலக்கியங்கள், புதிய உரைநடை நூல்கள், இதழ்கள் போன்றவற்றை அச்சிட்டுப் பரப்பிட அச்சுக்கருவிகள் நன்கு பயன்பட்டன. ஆங்கிலேயக் கல்வி முறையைப் பின்பற்றும் தமிழ்க் கல்வி நிலையங்களின் பாடநூல்கள் மூலமாகவும், தமிழில் உரைநடை வளர்ச்சியுற்றது. குறைந்த விலைக்குப் பெறப்பட்ட அச்சிட்ட நூல்களால் படிப்போரின் எண்ணிக்கை கூடியது. மேலைநாட்டாரின் அடியொற்றிப் பலரும் கதைகள், கட்டுரைகள், இதழ்கள், அகராதிகள், திறனாய்வுகள் முதலானவற்றில் ஈடுபாடு கொண்டு, உரைநடை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இத்தாலியைச் சேர்ந்த இராபர்ட் டி நொபிலி (1577-1656) என்னும் கிருத்துவப் பாதிரியார், தம் பெயரைத் தத்துவப் போதகர் என்று மாற்றிக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார். இவர் 40 இற்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
இவரும் இத்தாலி நாட்டினர். இயற்பெயர் [கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி ஆகும். தைரியநாதர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் பரமார்த்த குரு கதை, வாமன் கதை உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.
எல்லீசு, மெக்கன்சி என்கிற இரு ஆங்கிலேய அதிகாரிகள், சென்னைக் கல்விச் சங்கத்தை நிறுவினர். தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிட்டு வெளியிடுவதை, இச்சங்கம் தலையாய பணியாகக் கொண்டிருந்தது. முத்துசாமிப் பிள்ளை, தாண்டவராய முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலான தமிழ் ஆசிரியர்கள் இச்சங்கத்தில் தொண்டாற்றினர். வீரமாமுனிவரின் தமிழ் அகராதியையும், ஏனைய நூல்களையும், முத்துசாமிப் பிள்ளை அச்சிட்டு வழங்கினார். தாண்டவராய முதலியார் பஞ்சதந்திரக் கதையை (1825) மொழிபெயர்த்தும், தமிழகத்தில் வழங்கிவந்த கதைகளைத் தொகுத்துக் கதாமஞ்சரி (1826) என்ற பெயரில் நூல்களாக வெளியிட்டார். இச்சங்கம் மூலமாகப் பல்வேறு உரைநடை நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின.
தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வ. சு. செங்கல்வராய பிள்ளையால் 1904-இல் வெளியிடப்பட்டது. இந்நூலானது, தொல்காப்பியக்கால உரைநடைக் குறிப்புகள் தொட்டு, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876), இராமலிங்க சுவாமிகள் (1823-1874),மறைமலையடிகள் (1870-1950), பரிதிமாற்கலைஞர் (1879-1903) வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியினை, விரிவாக ஆராய்ந்து அளித்தது.
திருச்சிற்றம்பல தேசிகர் என்பார், கம்பராமாயணத்தையும், இராமாயண உத்தரகாண்டத்தையும் உரைநடையில் எழுதி வழங்கினார். அதுபோல்,வீராசாமி செட்டியார் என்பவர், விநோதரச மஞ்சரி என்னும் நகைச்சுவை நிரம்பிய கட்டுரைகள் கொண்ட உரைநடை நூல் ஒன்றை இயற்றி வெளியிட்டார். இவர் மேலும், காளிதாசர், கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகப் புலவர், புகழேந்தி போன்ற புலவர்கள் குறித்து, உரைநடையில் நூல்கள் எழுதினார். நாகை தண்டபாணி தேசிகர் (1891-1922) என்பவர், சதாநந்தர், ஏகம்பஞ்சநதம், கலாசுந்தரி, மாயாவதி ஆகிய புதினங்களையும், கௌதம புத்தரது வரலாற்றையும் எழுதியுள்ளார்.
ஐரோப்பியரின் வருகைக்குப் பின், வேகமாக வளர்ச்சியடைந்து வந்த உரைநடை இலக்கியத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தினவர்த்தமானி (1856), ஜனவிநோதினி (1870), விவேக சிந்தாமணி, சுதேசமித்திரன் (1882), மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் 'செந்தமிழ்' (1902) போன்ற இதழ்கள் மேலும் உரமூட்டின.
ஆறுமுக நாவலர் (1822-1888): இவர் யாழ்ப்பாணத்துத் தமிழறிஞராவார்.தமிழ்ப் பாடசாலைகளையும் அச்சுக்கூடத்தையும் நிறுவி,மாணவர்களுக்குரிய தொடக்க வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை, எளிய தமிழில் உரைநடையாக எழுதியளித்தார்.பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் ஆகியவற்றை உரைநடையில் எழுதிப் பயனுறச் செய்தார். பிழையற்ற, எளிய இவரது உரைநடைத் தமிழை, "நாவலர் நடை" என்றனர். இவர் 'தமிழ் உரைநடையின் தந்தை'[4] என்று அழைக்கப் பெறுகிறார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889): பிரதாப முதலியார் சரித்திரம் (1876) என்னும் தமிழில் முதல் புதினத்தை இவர் இயற்றினார். தொடர்ந்து சுகுண சுந்தரி (1887) புதினத்தையும், பெண் கல்வி, பெண் மானம் ஆகிய உரைநடைகளையும் எழுதினார். நகைச்சுவை மிக்க நடை இவருடையது.
வழக்கறிஞர் கே. எஸ். சீனிவாச பிள்ளை (1852-1929): தமிழ் வரலாறு என்னும் நூலை எழுதினார்.
சிங்காரவேலு முதலியார் (1853-1931): 1910-இல் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பாண்டித்துரைத் தேவர் என்பார், இவருடைய அபிதான சிந்தாமணி என்ற கலைக்களஞ்சிய நூலை வெளியிட்டார்.
டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்(1855-1942):மணிமேகலை கதைச்சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்சுருக்கம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு, நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும், நல்லுரைக்கோவை, நினைவு மஞ்சரி, என் சரிதம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
தி.செல்வக்கேசவராய முதலியார்(1864-1921):பழமொழிகள் கலந்த கட்டுரைகள் மூலம் தமிழ் உரைநடைக்கு புதிய வழிகாட்டினார். திருவள்ளுவர், கம்பநாடர், தமிழ், தமிழ் வியாசங்கள், வியாசமஞ்சரி, கண்ணகி கதை,அபிநவக்கதைகள், பஞ்சலட்சணம் முதலான உரைநடைகளையும், அக்பர், ரானடே, ராபின்சன் குரூசோ போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியுள்ளார்.
எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை(1866-1947):இவர் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார். மேலும், தமிழ்க் கட்டுரைகள், மருத்துவன் மகள் , தப்பிலி , கதையும் கற்பனையும் போன்ற உரைநடைகளைத் தமிழில் எழுதினார்.
பரிதிமாற்கலைஞர்(1870-1903):இவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி என்பதாகும். நாடகவியல், தமிழ்மொழியின் வரலாறு, தமிழ்ப்புலவர் சரித்திரம், முத்திராராட்சசம் ஆகியவை இவர் எழுதிய நூல்களாகும்.
ரா.ராகவ ஐயங்கார்(1870-1948): சாகுந்தலை நாடகம்,குறுந்தொகை விளக்கவுரை,வஞ்சிமாநகர், நல்லிசைப் புலமை மெல்லியலார், தமிழ்மொழி வரலாறு ஆகியவை இவருடைய பங்களிப்புகளாகும்.
பா.வே.மாணிக்க நாயக்கர்(1871-1931): இவர் எழுதிய நூல்களாவன: கம்பன்புளுகும் வால்மீகிவாய்மையும், அஞ்ஞானம் எள்ளல் நடை இவருடையது.
வ.உ.சிதம்பரம்பிள்ளை(1872-1931):ஜேம்ஸ் ஆலன் என்பவரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து மனம்போல வாழ்வு,அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என்ற தலைப்புகளிலும் மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நீதி நூல்களையும் எழுதியுள்ளார்.
மறைமலையடிகள்(1876-1950):1916 முதல் இவர் தனித்தமிழ் நடையில் எழுதலானார். உரைநடைவளர்ச்சிக்கு முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி, திருக்குறள் மற்றும் சிவஞானபோத ஆராய்ச்சிகள், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்,தமிழர் மதம், தமிழ்த்தாய், அம்பலவாணர் திருக்கூத்து, தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும், பழந்தமிழ் கொள்கையே சைவ சமயம், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவர், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? அறிவுரைக் கொத்து, திருவாசக விரிவுரை முதலியன இவருடைய படைப்புகளாகும்.கோகிலாம்பாள் கடிதங்கள், நாக நாட்டரசி போன்ற புதினங்களையும் இவர் இயற்றியுள்ளார்.
சி.கே.சுப்பிரமணிய முதலியார்(1878-1961):சேக்கிழார் பற்றிய இவருடைய உரைநடை நூலும், ஒரு பித்தனின் சுயசரிதம் என்கிற தன் வாழ்க்கை வரலாற்று நூலும் நல்ல பங்களிப்புகளாவன.
மு.இராகவையங்கார்(1878-1960):இவர் சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க் கவி சரிதம் முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
நாவலர் சோமசுந்தர பாரதியார்(1879-1959): இவர் சேரர் தாயமுறை, தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் உரைநடை நூல்களை இயற்றினார்.
பண்டிதமணி கதிரேசச் செட்டியார் (1881-1953): இவருடைய உரைநடை செறிவானதாகும்.உரைநடைக் கோவை, மண்ணியல் சிறுதேர் ஆகியவை இவருடைய உரைநடைக்குச் சான்றுகளாவன.
இரசிகமணி டி.கே.சிதம்பரமுதலியார் (1882-1954): இவர் நடத்திய இலக்கிய அமைப்பின் பெயர் வட்டத்தொட்டி ஆகும்.இவர் எழுதிய உரைநடை நூல்களாவன:கம்பர்யார்,கம்பர் தரும் காட்சிகள், இதய ஒலி, அற்புத ரசம், முத்தொள்ளாயிர விளக்கம்.
ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1884-1944): இவர் கபிலர்,நக்கீரர்,வேளிர் வரலாறு ஆகிய ஆராய்ச்சி நூல்களை எழுதினார்.கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூல் இவருடையது. இது தவிர, சிலப்பதிகாரம் ,மணிமேகலை, அகநானூறு , திருவிளையாடற்புராணம் ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார்.
கா.சுப்பிரமணிய பிள்ளை (1888-1945) : தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவர் இவராவார். சைவ சித்தாந்த நூல்கள், சைவசமயக் குரவர் நால்வர் வரலாறு, மெய்கண்டாரும் சிவஞான போதமும் இவர் எழுதிய பிற நூல்களாகும்.
தி.வை. சதாசிவ பண்டாரத்தார் (1892-1960): இவருடைய உரைநடைப் பங்களிப்புகளாவன :
இரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961): இவர், ஊரும் பேரும்,செந்தமிழும் கொடுந்தமிழும்,தமிழின்பம், திருவள்ளுவர் நூல்நயம், சிலப்பதிகார நூல்நயம் , தமிழ் விருந்து, வேலும் வில்லும், தமிழ்நாட்டு நவமணிகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.
மயிலை சீனி.வேங்கடசாமி(1900-1979): இவரின் பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், கிறித்தவமும் தமிழும் ஆகிய நூல்களும், மறைந்து போன தமிழ் நூல்கள், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ஆகிய ஆராய்ச்சி நூல்களும் எழுவகைத் தாண்டவம் என்னும் சமய ஆராய்ச்சியும் புகழ்பெற்றவை.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்(1901-1981): இவர் கானல்வரி, குலசேகரர், குடிமக்கள் காப்பியம், பிறந்தது எப்படியோ? போன்ற உரைநடைகளை எழுதியுள்ளார்.
ஞா.தேவநேயப் பாவாணர்(1902-1981): மொழிஞாயிறு என்று போற்றப்பெறும் இவர், முதல் தமிழ்மொழி, ஒப்பியல் மொழிநூல், பழந்தமிழாட்சி, தமிழர் திருமணம், தமிழ் வரலாறு, மொழி வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு முதலான நூல்களை அளித்துள்ளார்.
பொதுவாக உரைநடையின் வகைகளை ஆறு பிரிவுகளாகக் கொள்ளலாம். அவை பின்வருமாறு அமையும்.
1)விளக்க உரைநடை
ஏதேனும் ஒரு பொருளையோ,கருத்தையோ விளக்கிக் கூறி எழுதப்படுவது விளக்க உரைநடையாகும். பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப் புத்தகங்கள், அறிவியல் நூல்கள், கலைக்களஞ்சியங்கள், பல்வேறு தொழில்களைப் பற்றிய விவரணைகள், கலைகள் குறித்து எழுதப்படும் விளக்கங்கள் முதலியன இவ்வகையில் அடங்கும்.
2)அளவை உரைநடை
அளவை உரைநடை என்பது விவாத அடிப்படையில் அமைவதாகும். ஓர் உட்கருத்தையொட்டி எழும் விவரணைகளை வாசிப்போர் இணங்கி ஏற்றுக் கொள்ளும் வகையில் இது அமையும். மேலும், இவ்வுரைநடையானது பிரச்சினைகளை நுணுக்கமாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்கத் தூண்டுகிறது.
3)எடுத்துரை உரைநடை
கதையை விவரிக்கும் அனைத்து இலக்கிய நூல்களும் எடுத்துரை உரைநடையைச் சார்ந்தவை. இவ்வகை உரைநடை எளிதில் ஈர்க்க வல்லது. சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வகைமைகள் இதன்பாற்படும்.
4)வருணனை உரைநடை
வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பதாகும். மாந்தர்கள், ஏனைய உயிரினங்கள், பொருள்கள் ஆகியவை இங்கு வருணிக்கப்படும்.
5)நாடக உரைநடை
நாடகத்தில் இடம்பெறும் கதைமாந்தர்களின் உரையாடல்கள், இடையிடையே நாடக ஆசிரியர் தரும் மேடை விளக்கக் குறிப்புகள் ஆகியவை நாடக உரையாடல் ஆகும். நாடக உரைநடை, பேச்சு வழக்கை மிகுதியாகக் கொண்டிருக்கும்.
6)சிந்தனை உரைநடை
எழுத்தாளர், தம் சொந்த ஆளுமை வெளிப்படும் படியாக எழுதப்படுவது சிந்தனை உரைநடையாகும். தன்னுணர்ச்சிப் பாங்குக் கட்டுரைகள், ஆன்மிக அனுபவக் கட்டுரைகள் போன்றவை இவ்வகையில் அமையும்.
பழைய உரைநடை எனப்படுவது, பேச்சு வழக்கில் காணப்படும் சொற்களை விடுத்து, பண்டை இலக்கியங்களில் வழங்கிவந்த சொற்களை மிகுதியாகக் கையாண்டும், செறிவாக அமைத்துக்கொண்டும் எதுகை மோனைகளைப் பயன்படுத்தி எழுதுவதாகும். புதிய உரைநடை என்பது எளிய சொற்களைக் கொண்டு தடையின்றி, தெளிவாக, நேரே பொருள் தரக்கூடியதாக அமைத்து எளிய நடையில் எழுதுவதாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.