From Wikipedia, the free encyclopedia
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளரும் தருகின்ற முக்கிய தகவல்களுள் ஒன்று இயேசுவின் சாவைப் பற்றியதாகும்[1].
பாலசுத்தீன நாட்டில் உரோமையரின் சார்பில் ஆளுநராக இருந்தார் பொந்தியு பிலாத்து. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். இத்தகவல்களைத் தருகின்ற நற்செய்தி நூல்களில் காணப்படும் பிற செய்திகள் இவை:
யார் இந்த இயேசு? என்னும் கேள்விக்குப் பதில் தேடும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டபோது இயேசுவுக்கு அளிக்கப்பட்ட வெவ்வேறு பெயர்கள் எப்பொருளைக் குறித்தன என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்தது. இப்பெயர்கள் உண்மையிலேயே இயேசுவுக்குப் பொருந்தும் என்றால் இவர் யாரோ? என்ற கேள்வி எழுந்ததில் வியப்பில்லை. இப்பெயர்கள் யாவை? இது குறித்து நற்செய்தி நூல்கள் தரும் தகவல் என்ன?
இயேசு யார் என்று அடையாளம் காட்டும் வகையில் இயேசுவுக்குப் பொருத்தியுரைத்த பெயர்கள் (மெசியா, இறைமகன், யூதரின் அரசர் போன்றவை) சமயம் சார்ந்தவை எனக் கூறலாம் ஆனால், அந்தப் பெயர்களுக்கு அரசியல் அர்த்தமும் உள்கிடக்கையும் உண்டு. ஏன், ஒருவேளை வன்முறையால் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியும் அவண் உள்ளடங்கும்.
எனவே, இயேசுவுக்குப் பொருத்தி உரைக்கப்பட்ட பெயர்கள் அவருக்கு உண்மையிலேயே பொருந்தும் என்றால், அவரைக் கண்டு யூத அதிகாரிகளும் உரோமை ஆளுநரும் அஞ்சி நடுங்கியிருக்க வேண்டும். இயேசு எங்கே தங்களது அதிகாரத்துக்கு உலை வைத்துவிடுவாரோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும். இதுவும் நற்செய்தி நூல்களிலிருந்து தெரியவருகிறது.
இது மட்டுமல்ல, இயேசு எருசலேம் கோவிலுள் நுழைந்து அங்கு விற்பதிலும் வாங்குவதிலும் ஈடுபட்டிருந்தவர்களை வெளியே துரத்திய நிகழ்ச்சி ஒரு பெரிய புயலையே கிளப்பிவிட்டிருந்தது. யூதருக்கு மிகத் தூய இடமாகிய கோவிலின் மீது இயேசு அதிகாரம் காட்டியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இந்நிகழ்ச்சி நடந்த சிறிது காலத்துக்குப் பின், யூத தலைமைச் சங்கத்தினர் இயேசுவின் மீது சாத்திய குற்றச்சாட்டும் கருதத்தக்கது. மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம் என்று அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று கூறினர்(மாற்கு 14: 58). இக்குற்றச்சாட்டுக்கு அடிப்படைக் காரணம் இயேசு எருசலேம் கோவிலில் வர்த்தகம் நடந்ததைக் கேள்விக்கு உள்ளாக்கியதுதான்.
ஆக, மறைநூல் அறிஞர், மூப்பர், தலைமைக் குருக்கள் ஆகிய சமயத் தலைவர்களும், உரோமை ஆளுநர் பிலாத்து போன்ற அரசியல் ஆட்சியாளரும் இயேசுவின் நடவடிக்கைகள் பற்றி சந்தேகம் கொண்டதற்கும், அவருக்கு எதிராக எழுந்ததற்கும் போதிய ஆதாரங்களை இயேசுவே ஒருவிதத்தில் அவர்களுக்கு அளித்திருந்தார் என்று நற்செய்திகளிலிருந்து தெரியவருகிறது.
சட்டமுறைப்படி பார்த்தால், இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு உள்ளாக்கியதற்கு இறுதிப் பொறுப்பு பொந்தியு பிலாத்துவையே சேரும். பிலாத்துவின் ஆட்சிக் காலத்தில் யூதர்கள் யாருக்கும் கொலைத் தண்டனை விதிக்கும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது (காண் யோவான் 18:31). அப்படியே அவர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது என்றே வைத்துக்கொண்டாலும், கடவுளைப் பழித்துரைத்தோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை சிலுவை மரணமன்று, மாறாக, கல்லால் எறிந்து கொல்வதுதான்(காண் மாற்கு 14:64; லேவியர் 24:16).
குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறையைக் கடைப்பிடித்தவர்கள் உரோமையர்தாம். அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களுக்கும், அடிமைகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனைதான் சிலுவை மரணம். இந்தத் தண்டனை முறையைக் கையாண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. கொடூரமான இத்தண்டனையைப் பிறருக்குப் பாடம் படிப்பிக்கும் கருவியாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.
சிலுவையில் அறையப்படுவது ஒரு கொடிய நிகழ்ச்சி. அதனால் ஏற்பட்ட உடல்சார்ந்த வேதனையைக் கற்பனை செய்து பார்ப்பதே இயலாது. முதலில் இயேசுவைக் கசையால் அடித்தார்கள். பின் மரத் தடிகளில் அவரது கைகளையும் கால்களையும் ஆணிகளால் அறைந்தார்கள். நேராக உயர்த்தப்பட்ட தடியில் ஒரு சிறிய முன்துண்டை இணைத்து, இயேசுவின் உடலின் மேற்பகுதி கீழே தொங்கி விழாதவண்ணம் தடுப்பதற்காக வழிசெய்தார்கள்[2].
மருத்துவ நோக்கில் பார்க்கும் போது இயேசுவின் சாவுக்கு உடனடி காரணமாக அமைந்தது யாது? நற்செய்திகள் தரும் தகவல்களின் அடிப்படையில் இந்த மருத்துவ காரணத்தை இக்கால அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர். அதாவது, இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கிக்கொண்டிருந்த போது, அவருக்குக் குருதி விம்மிய முறையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நிச்சயமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. களைப்பின் மிகுதியாலும் சோர்வாலும் உடலில் போதிய நீர் இல்லாது போனது. இரத்த ஓட்டம் தடைபட்டது. தாழிரத்தப் பரிமான அதிர்ச்சி ஏற்பட்டது.
இயேசுவின் உடல்சார்ந்த துன்பங்களைத் துல்லியமாக வர்ணிப்பதோ, இயேசுவின் சாவுக்கான மருத்துவக் காரணத்தைக் கவனமாக நிர்ணயிப்பதோ நற்செய்தியாளரின் நோக்கமாக இருக்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்வி இயேசுவின் சாவின் பொருள் என்ன என்பதே.
இசுலாமியக் கண்ணோட்டத்தின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கவில்லை. இதுபற்றி இசுலாம் தரும் விளக்கங்களில், இயேசுவை அரபுகள் ஈஸா என்று அழைத்தனர். ஈஸாவின் இருதிக்காலம் தொடர்பாக இசுலாம் விவரிக்கும் போது அவர் சிலுவையில் அறையப்படவில்லை மாறாக அவர் வானுக்கு உயர்த்தப்பட்டார் என்கிறது அதனால்தான் அவர் ஆயுளை முழுதாக நிறைவு செய்ய உலகத்தின் இறுதிக்காலங்களில் அவர் மீண்டும் வருவார் (அவர் உயர்த்தப்பட்ட அதே நிலையில்). பூமிக்கு வந்த பின் சிலுவைகளை உடைப்பார், ஆட்சி ஒன்றை ஏற்பார், இந்த உலகத்தையே ஆழ்வார், பின்னர் ஏனையோர் போன்றே அவரும் இறப்பார். இசுலாமியர் அவரது இறந்த உடலுக்கு தொழுகை நடத்தி அடக்கம் செய்வர் என்றும் இசுலாமியம் கூறப்படுகிறது.[4]
பெரிய வியாழன்
பெரிய வெள்ளி
கொல்கொதா
இயேசுவின் உயிர்த்தெழுதல்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.