இடதுசாரி அரசியல் (left-wing politics) என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது சமூக ஏற்றத்தாழ்வுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது.[1][2] இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது.[1]

அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், முடியாட்சியை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், குடியரசு உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் இச்சொல் பல்வேறு இயக்கங்களைக் குறிப்பதற்குப் பயன்பட்டது. சிறப்பாகப் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் குடியரசியம், சமூகவுடமை,[3] பொதுவுடமை, அரசின்மை[4] போன்றவை இச்சொல்லால் குறிக்கப்பட்ட இயக்கங்களுள் அடங்குவன. 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, மனித உரிமைகள் இயக்கம், போர் எதிர்ப்பு இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள்[5][6] போன்ற மேலும் பல இயக்கங்கள் "இடதுசாரி" என்னும் சொல்லினால் குறிக்கப்படலாயின.[7] ஐக்கிய அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சி.[8][9][10] என்பனவும் இடதுசாரிகள் என அழைக்கப்பட்டன.

வரலாறு

Thumb
ஆகத்து 26, 1789ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை'.

அரசியலில் கொள்கை அடிப்படையிலான இரு வேறுபட்ட பிரிவுகளை "இடது", "வலது" என்னும் சொற்களால் அழைக்கும் வழக்கம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் குடியரசு ஆதரவாளர்களும், முடியாட்சி ஆதரவாளர்களும் முறையே "இடது", "வலது" என்னும் சொற்களால் குறிக்கப்பட்டனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தேசியவாதம், சமூகவுடமை, மக்களாட்சி, சமய குருமார்கள் எதிர்ப்பு போன்றவை பிரான்சு இடதுசாரிகளின் அம்சங்களாக இருந்தன. மூன்றாம் நெப்போலியனின் 1851 ஆம் ஆண்டுச் சதிப்புரட்சியைத் தொடர்ந்து இரண்டாம் பேரரசு உருவான பின்னர், அரசியலில் தீவிர குடியரசியம், கற்பனைச் சமூகவுடமை என்பவற்றுக்குப் போட்டியாக மாக்சியம் உருவாகியது. கார்ல் மார்க்சு, பிரடெரிக் ஏங்கெல்சு ஆகியோரால் 1848ல் வெளியிடப்பட்ட பொதுவுடைமை அறிக்கை, எல்லா மனித வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என வலியுறுத்தியது. காலப்போக்கில், பாட்டாளி வர்க்கப் புரட்சி பூர்சுவா முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வர்க்கங்களற்ற சமூகம் ஒன்றை உருவாக்கும் என அவர்கள் கூறினர். [11]

ஐக்கிய அமெரிக்காவில், சமூக தாராண்மையியம், முற்போக்குவாதம், தொழிற்சங்கவாதம் போன்ற பல இடதுசாரி இயக்கங்கள் சொத்து அடைப்படையிலான சமத்துவவாதம் எனும் கருத்துருவை அறிமுகப்படுத்திய தாமசு பைனின் ஆக்கங்களின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தன. வளங்களை மீள் பகிர்வு செய்வதன் மூலம் சமூக சமத்துவத்தை அடைய முடியும் என்றது சொத்து அடைப்படையிலான சமத்துவவாதம்.

"முதலாவது அனைத்துலகம்" என்றும் குறிப்பிடப்படுகின்ற அனைத்துலகத் தொழிலாளர் ஒன்றியம் (1864 - 76), பல்வேறுபட்ட நாடுகளிலிருந்து வர்க்கங்கள் அற்ற, அரசற்ற சமூகத்தை உருவாக்குவதில் பல்வேறு நோக்குகளைக் கொண்ட பல பேராளர்களை ஒன்றாகக் கொண்டுவந்தது. அங்கு மிகையில் பக்குனும் அவரது ஆதரவாளர்களும் தொழிலாளர் சர்வாதிகாரத்தை எதிர்த்தும், அரசு உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியும், எல்லாப் புரட்சிகளும் வன்முறையாக அமைய வேண்டியது இல்லை என்றும் பல விமர்சனங்களை மார்சிய பொதுவுடமைக் கோட்பாடுகள் மீது முன்வைத்தனர். இதனால் மார்க்சினதும் மிகையில் பக்குனினதும் ஆதரவாளர்களிடையே பிளவு உருவானது. இதனைத் தொடர்ந்து அரசின்மைவாதிகள் அனைத்துலகத் தொழிலாளர் கழகத்தை உருவாக்கினர்.

இரண்டாவது அனைத்துலகம் (1888 - 1916) முதலாம் உலகப் போர் குறித்த விடயத்தில் பிளவுபட்டது. போரை எதிர்த்த விளாடிமிர் லெனின், ரோசா லக்சம்பர்க் போன்றவர்கள் கூடிய இடதுசாரித் தன்மை கொண்டவர்களாயினர்.

நிலைப்பாடுகள்

பின்வரும் நிலைப்பாடுகள் பொதுவாக இடதுசாரிகளுடன் தொடர்புபட்டவை.

பொருளாதாரம்

இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகள் கெயின்சியப் பொருளியல், பொதுநல அரசு போன்றவற்றில் தொடங்கி தொழிற்றுறைச் சனநாயகம், சமூகச் சந்தை என்பவற்றினூடாகப் பொருளாதாரத்தைத் தேசியமயமாக்கல், மையத் திட்டமிடல் என்பவை வரையும், அரசின்மைவாதிகள்/ கூட்டோச்சற்கொள்கைவாதிகளின் (syndicalist) தொழிலாளர் அவைகளை அடிப்படையாகக் கொண்ட தாமே நிர்வகித்துக்கொள்ளும் அரசின்மைப் பொதுவுடமை (Anarchist communism) வரை பல்வேறுபட்டவையாக இருந்தன. தொழிற் புரட்சியின்போது, இடதுசாரிகள் தொழிற் சங்கங்களை ஆதரித்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அரசின்மைவாதிகள், இடதுசாரி சுதந்திரவாதிகள் போன்றவர்கள் தவிர்த்து பெரும்பாலான இடதுசாரி இயக்கங்கள் பொருளாதாரத்தில் விரிவான அரசுத் தலையீட்டை ஆதரித்தன. சுரண்டல் தன்மை கொண்ட உலகமயமாக்கலையும், அதனால் உருவாகக்கூடிய விளைவுகளையும் இடதுசாரிகள் தொடர்ந்து விமரிசித்து வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பொருளாதாரத்தின் அன்றாடத் தொழிற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவேண்டும் என்ற கொள்கைக்கு நடு இடதுசாரிகள் மத்தியில் செல்வாக்குக் குறைந்தது. குறிப்பாகச் சமூக சனநாயகவாதிகள் "மூன்றாவது வழி" என்னும் கருத்தியலின்பால் ஈர்க்கப்பட்டனர்.

பிற இடதுசாரிகள், மார்க்சினுடைய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையிலான மார்க்சியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். மார்க்சியப் பொருளாதாரம் தனியே மார்க்சில் மட்டும் தங்கியிருந்தது எனச் சொல்வதற்கு இல்லை. இதில் மார்க்சியம் மற்றும் மார்க்சியமல்லாத மூலங்களிலிருந்தும் பல்வேறு கூறுகள் அடங்கியுள்ளன. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும், தொழிலாளர்களுடைய அரசும், முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்துக்கும் இடையில் உள்ள ஒரு தற்காலிக நிலையாகவே மார்க்சியவாதிகள் கருதினர்.

"பாட்டாளிகள்" என்பவர்கள் "ஊதியத்துக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்" என மார்க்சு வரைவிலக்கணம் கூறினார். விவசாயிகளின் அரசியல் பங்கு குறித்து இடதுசாரிகளுக்குள் இரண்டு வகையான கருத்துக்கள் இருந்தன. தனது "மூலதனம்" நூலில் இது குறித்து மார்க்சு அதிகம் பேசவில்லை. ஆனால் சீனாவில் கம்யூனிசப் புரட்சியை வழிநடத்திய மாவோ சே துங் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அல்ல, நாட்டுப்புற விவசாயிகளே பாட்டாளி வர்க்கப் புரட்சியைக் கொண்டுவருவர் என நம்பினார்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.