ஆர்க்டிக் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) என்பது ஐந்து முதன்மையான நிலநேர்க்கோட்டு வட்டங்களுள் ஒன்று. இது நிலநடுக்கோட்டுக்கு வடக்கே 66° 33′ 39″ (அல்லது 66.56083°) இல் அதற்கு இணையாக அமைந்துள்ளது. இவ்வட்டத்துக்கு வடக்கில் உள்ள பகுதி ஆர்க்டிக் எனவும், அதற்கு அருகே தெற்கில் அமைந்துள்ள பகுதி வட மிதவெப்ப வலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. இதை ஒத்துத் தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ள வட்டம் அண்டார்க்டிக் வட்டம் எனப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆர்க்டிக் வட்டம் 24 மணிநேர சூரிய ஒளி இருக்கும் துருவ நாளினதும், 24 மணிநேரம் சூரியனே தென்படாத துருவ இரவினதும் தென் எல்லையைக் குறிக்கிறது. ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே ஆண்டுக்கு ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் சூரியன் அடிவானத்துக்கு மேலும், அதே போல் ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் அடிவானத்துக்குக் கீழும் இருக்கும். ஆர்க்டிக் வட்டத்தில் இந் நிகழ்வுகள் சரியாக ஆண்டுக்கு ஒருமுறை முறையே ஜூன் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் ஞாயிற்றுக் கணநிலை நேரத்தில் இடம்பெறும்.
வளிமண்டல ஒளிமுறிவு காரணமாகவும், சூரியன் ஒர் புள்ளியாக அன்றி வட்டவடிவத் தட்டுப்போல் இருப்பதாலும், கோடைகால ஞாயிற்றுக் கண நேரத்தில் நள்ளிரவுச் சூரியன் ஆர்க்டிக் வட்டத்துக்குத் தெற்கே 50 ′ (90 கிமீ) வரை தெரியும். இது போலவே மாரிகால ஞாயிற்றுக் கணநிலை நேர நாளில் சூரியன் ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 50 ′ வரை தெரியும். இது கடல் மட்டத்திலேயே உண்மையாக இருக்கும், உயரம் கூடும்போது இந்த எல்லைகள் மாறுபடும்.