பெச்சகுச்சா
From Wikipedia, the free encyclopedia
பெச்சகுச்சா அல்லது பெச்ச குச்சா (யப்பானிய: ペチャクチャ, IPA: [petɕa ku͍̥tɕa],[1] கிசுகிசு என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு முன்வைப்பு வடிவம் ஆகும் (மொத்தம் 6 நிமிடங்கள் 40 நொடிகள்). முன்வைப்புப் படவில்லைக் காட்சிகளைத் திட்பமாகவும், விறுவிறுப்பாகவும் ஆக்கும் இவ்வடிவத்தை முன்னிறுத்தி பெச்சகுச்சா இரவுகள் என்ற உரையரங்கங்கள் நிகழ்த்தப்படுகின்றன.[2][3]
தோக்கியோவில் உள்ள கிளெயின் டீதம் கட்டிடக்கலை நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்டிரிட் கிளெய்ன், மார்க் டீதம் ஆகியோரால் ரொப்பொங்கியில் உள்ள சூப்பர்டீலக்ஸ் என்ற தங்களது பரீட்சார்த்த நிகழ்த்துவெளிக்கு மக்களைக் கவரவும்; இளம் வடிவமைப்பாளர்கள் தங்களுக்குள் கூடி, தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்காகவும்[4] பிப்ரவரி 2003 இல் பெச்சகுச்சா இரவு முதலில் வடிவமைக்கப்பட்டது.[5][6]
2004 இல் சில ஐரோப்பிய நகரங்கள் இத்தகைய பெச்சகுச்சா இரவுகளை நடத்தத் தொடங்கிய பிறகு உலகம் முழுக்க நூற்றுக்கணக்கான நாடுகளில் இத்தகைய இரவுகள் நடக்கின்றன.[7][8] மே 2014 இல் உலகளாவிய அளவில் 700 இற்கும் மேற்பட்ட நகரங்களில் பெச்சகுச்சா இரவுகள் அரங்கேறின.[9]