துர்க்கை
From Wikipedia, the free encyclopedia
துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள்.[1] அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன்கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.[2]
பெயர்க்காரணம்
துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம். தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள். அதனால் துர்கை என்று பெயர் ஆனது. மேலும் இவள் துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கப்படுகிறாள்.
- துர்காதேவி தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும்.
- ஆர்த்திதேவி அல்லது ஆராத்திதேவி என்பதாகும் துர்கை தனது உக்கர நிலையில் நெருப்பு வடிவில் ஒளி தருபவளாக மற்ற கடவுளர்களுக்கு ஆராத்தி தீபமாக அருள் வடிவில் ஒளி தருகிறாள் என்று வட மாநிலங்களில் துர்கையை ஆர்த்திதேவி என்று கூறுகின்றனர்.
- ஜோதிதேவி துர்கை நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபமாக ஒளிர்கிறாள். எனவே ஜோதிதேவி என்றும் வட மாநிலங்களில் கூறுகின்றனர்.
- மேலும் இந்த துர்கையின் இரண்டு வடிவமான ஆர்த்திதேவி/ஜோதிதேவி உடன் பிறந்த சகோதரிகள் என்றும் நெருப்பும் துர்கையும் ஒன்று என வட இந்திய மாநிலங்களில் கருதப்படுகின்றது.
தொன்மக் கதைகள்
படைப்பின் ஆரம்பத்தில் உலகங்களையும் ஏனைய அரி-பிரமேந்திராதி தேவர்களைப் படைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. அந்நூலும் தேவி மான்மியம் எனும் இன்னொரு நூலும், அத்துர்க்கையானவள், இரம்பன் எனும் அசுரனின் மகனான மேதியவுணனை அழிப்பதற்காக முத்தேவர்களின் உடலிலிருந்தும், ஏனைய தேவர்களிலிருந்தும் ஒளி வடிவில் மீண்டும் தோன்றியதாகவும் சொல்லப்படுகின்றது. துர்தரன், துன்முகன், புகைக்கணான் (தூம்ரலோசனன்) முதலான மேதியவுணனின் படைத்தளபதிகளைக் கொன்று, இறுதியில் அவனையும் அன்னை வதைத்த கதை, அவற்றில் விரிவாகப் பாடப்படுகின்றது.விந்திய மலைத்தொடர், மற்றும் இமய மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளின் போர்த்தெய்வமொன்றே, பிற்காலத்தில் துர்க்கையாக வளர்ச்சி பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.[3]
தமிழ் மரபு
பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களில், கொற்றவை என்ற அன்னைத் தெய்வமாக துர்க்கை பற்றிக் குறிப்பிடுகின்றன. காலில் மேதியவுணனின் எருமைத்தலை கிடக்க, இன்றைய துர்க்கையாகவே காட்சியருளும் கொற்றவையை சிலம்பில் காணலாம்.[4]
உருவ இலக்கணம்
சில்ப ரத்னம் எனும் நூலின்படி, அவள் முக்கண்ணி, எண்கரத்தி, சந்திரன் அலங்கரிக்கும் சடா மகுடம் கொண்டவள், வலக்கரங்களில் திரிசூலம், வாள், சக்கரம், வில் என்பனவும், இடக்கைகளில் பாசம், கோடரி, கேடயம், அங்குசம் என்பனவும் விளங்க, குருதி வடியும் எருமைத்தலை காலடியில் கிடக்க சிங்கம் மீது ஒரு காலூன்றி, கம்பீரமாக நிற்பாள். தலை துண்டமான எருமை உடலிலிருந்து, கையில் வாளும் கேடயமும் ஏந்தி, மேதியன் வெளிவந்து, தன்னைப் பாசத்தால் கட்டும் தேவியை எதிர்ப்பான். அன்னையின் மறுகால் அவ்வெருமை உடல்மீது நிற்கும்.[5]
சிற்பங்கள்
துர்க்கையின் மிகப்பழைமையான வடிவங்களை கிறிஸ்து காலத்தைய வடமொழி இலக்கியங்களிலும் அதேகாலத் தமிழ் இலக்கியங்களிலும் காணமுடிகின்றது. குசாணர் காலத்திலேயே (பொ.மு. 30–பொ.பி. 375) அவளது சிற்பங்கள் முதன்முதலாக கிடைக்கப்பெற்றிருக்கின்றன.[6] மேதியவுணனை அழிக்கும் கோலத்திலேயே அவள் பெரும்பான்மையாகச் சித்தரிக்கப்படுவதுண்டு.

மத்திய பிரதேசத்திலுள்ள குப்தர் கால குகைச் சிற்பமொன்றில் அவள் பன்னிருகரத்தினளாக சித்தரிக்கப்படுகின்றாள்.குசாணர் சிற்பங்களில் காட்டப்படும் சிங்கம், பிற்காலத்தைய குப்தப் பேரரசுச் சிற்பங்களில் (பொ.பி. 240 முதல் 600 வரை) காட்டப்படவில்லை. எனினும் பிற்காலத்தில் சிங்கம், மீண்டும் துர்க்கையின் வாகனமாக ஏற்கப்பட்டிருக்கின்றது. சில இடங்களில் புலியும் அவள் ஊர்தியாகச் சொல்லப்படுவதுண்டு. குயராத்தில் "குரபுரை" என்றழைக்கப்படும் புலி வாகனம் கொண்ட பழங்குடித் தெய்வமும்[7], சில மத்திய பிரதேசத்து நம்பிக்கைகளும், புலியில் இவர்கின்ற துர்க்கையாக வளர்ந்திருக்கக் கூடும்.
தென்னகத்தில் மிகப்பழைய துர்க்கையின் சிற்பம், கர்நாடகாவின் சன்னடி பகுதியில் கிடைத்த பொ.பி 3ஆம் நூற்றாண்டு சுடுமண் சிற்பம் ஆகும்.[5] அதிலும் மேதியவுணனைக் கொல்பவளாகவே அவள் காட்சியளிக்கிறாள். இன்னும் மாமல்லபுரத்துப் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றான, தேவிக்கும் - மேதியனுக்கும் இடையிலான போர்க்காட்சி, வேறெங்கும் காணற்கரிய அரிய சிற்பங்களில் ஒன்றாகும். அதே இடத்தில், சங்கு சக்கரமேந்தி நாற்கரத்தினலாகக் காட்சி தரும் கொற்றவை முன்பு, நவகண்டப் பலி நிகழும் சிற்பமும், அக்கால வழக்கங்களில் ஒன்றைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் சிற்பம்.
வழிபாடு
துர்க்கையின் முக்கியமான வழிபாட்டுக் காலம், நவராத்திரிக் காலமே ஆகும். தசரா என்ற பெயரிலும் "துர்க்கா பூசை" என்ற பெயரிலும் அது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி என, துர்க்கையின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது வழக்கம்.[8] தமிழகத்தில் அண்மைக்காலமாக, இராகுகால துர்க்கை வழிபாடு புகழ்பெற்று வருகின்றது.[9]
நவராத்திரியின் இறுதி நான்கு நாட்களும் (விஜயதசமியும் சேர்த்து) துர்க்கா பூசை செய்வது, வங்கம், அசாம், ஒடிசா, நேபாளம் போன்ற இடங்களில் பெருவழக்கு. இந்நாட்களில் அன்னை துர்க்கையை, அவள்தம் குழந்தைகளான கார்த்திகேயன், கணேசர், இலக்குமி, சரசுவதி ஆகிய நால்வரும் புடைசூழ வழிபடுவது வங்கத்தில் வழக்கம்.[10] தெலுங்கானாப் பகுதியில், நவராத்திரி நாட்களில் "பாதுகாம்மா" என்ற பெயரில் அவளைப் போற்றுவது வழமை. மகிடாசுரமர்த்தினி தோத்திரம், துர்க்கா சப்தசதி முதலான துர்க்கையின் புகழ்பெற்ற துதிப்பாடல்கள் இந்நாட்களில் பாடப்படும்.
காஷ்மீரில் "சாரிகை" என்ற பெயரில் துர்க்கை வழிபடப்படுகின்றாள். பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலும், விஜயவாடாவிலுள்ள கனகதுர்க்கை ஆலயமும், மைசூர் சாமுண்டேஸ்வரி ஆலயமும், திருநெல்வேலியில் உள்ள மறுகால் குறிச்சி துர்கா மாரியம்மன் ஆலயமும் தென்னகத்தில் பிரபலமாக விளங்குகின்ற துர்க்கை ஆலயங்கள் ஆகும்.
மேலும் காண
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்புக்கு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.