எண்ணிம ஒளிப்படவியல்
From Wikipedia, the free encyclopedia
எண்ணிம ஒளிப்படவியல் (Digital photography) என்பது, ஒளிப்படவியலின் ஒரு வடிவம் ஆகும். இது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கு எண்ணிமத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு ஒளிப்படச் சுருளைப் பயன்படுத்தி வந்தனர். இப்படச் சுருளில் வீழ்த்தப்படும் தெறியுரு படம் கழுவும் முறைகள் மூலம் தெரியக்கூடிய படமாக மாற்றப்படும். மாறாக எண்ணிம ஒளிப்படங்களை, வேதியியல் வழிமுறைகளைப் பயன்படுத்தாமல், எண்ணிம மற்றும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காட்சிப்படுத்தவும், அச்சிடவும், சேமித்து வைக்கவும், மாற்றங்கள் செய்யவும், அனுப்பவும் முடியும்.
எண்ணிம ஒளிப்படமுறை, பல எண்ணிமப் படமாக்கல் வடிவங்களில் ஒன்று. எண்ணிமப் படிமங்களை ஒளிப்படக் கருவிகளால் மட்டுமன்றி, ஒளிப்படவியல் சாராத பிற கருவிகளாலும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்க முடியும். துருவிகள், வானொலித் தொலைநோக்கிகள் என்பவற்றிலிருந்து பெறப்படும் படிமங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். வழமையான ஒளிப்படங்களைத் துருவல் செய்தும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்கலாம்.